யாவர்க்குமாம் வேதியியல்-4

Spread the love

யாவர்க்குமாம் வேதியியல்-4
#Chemistry_for_everyone_4

தேவைகள் அதிகரிக்கும்போது கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. காடெங்கும் உணவுக்காக வேட்டையாடித் திரிந்த ஆதிமனிதன், ஓரிடத்தில் தங்கி உண்ண நினைத்த போது, வேளாண்மை தோன்றியது. உணவை, குடிதண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டியத் தேவையேற்பட்டபோது மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன. மண்பாண்டங்கள் நாளடைவில் உடைந்து போய்விட, உடைபடாத உலோகப்பாத்திரங்கள் தேவையாயின. உலோகங்களின் இயற்புத்தன்மையைப் பொறுத்து அவற்றின் மதிப்பை நிர்ணயிக்கத் தொடங்கினான் மனிதன். யாரெல்லாம் இப்படி உயர்மதிப்புடைய உலோகங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறைகள் தோன்றின. அதுபோன்ற உயர்மதிப்புடைய உலோகங்களை வைத்துக்கொள்பவர்கள் செல்வந்தர்கள் எனப்பட்டார்கள்.

உலோகங்களை வைத்துக்கொள்ள வலிமையும், வழியுமற்ற ஏனையோர், உயர்விலை உலோகங்களை அடைவதே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். அதுவே அறமும், மறமுமாக ஆகிப்போனது. அரசர்களும், செல்வந்தர்களும் உயர்வகை உலோகங்களை பயன்படுத்தும் உரிமைபெற்றவர்களாயினர். உயர்வகை உலோகங்கள் கோவில்களிலும், அரண்மனைகளிலும் சேகரமாகின. ஆகவே, போட்டிகள், போர்கள், கொள்ளைகள் என்று யாவும் உலோகங்களைக் கைப்பற்றுவதற்காகவே நடந்தேறின. பல்லாயிரம் மைல்கள் கடந்து போர்மேவி சென்றவர்கள் யாவரும் உலோகங்களைப் பறிமுதல் செய்து தத்தம் இடங்களுக்குக் கொண்டுசென்றனர். ஆகவே, உலோகங்களின் தேவைகளும், நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியதால் புதிய புதிய உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்கள் யாவும் ஒரே பண்புகளைக் கொண்டவையாக இருக்கவில்லை. எனவே, அவற்றின் பண்புகள் ஒப்பீடு செய்யப்பட்டன. அப்படி ஒப்பீடுகள் செய்ய முற்பட்ட போதுதான் பெரும்பாலான உலோகமல்லாத அலோகங்களும், உலோகப்போலிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

உலோகங்களில் தங்கம்தான் அன்றுமுதல் இன்றுவரை மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் தேவை அன்றாடம் அதிகரித்துக்கொண்டே செல்வதை நாம் அறிந்தேயிருக்கிறோம். உலகெங்கும் தங்கத்தைத் தேடி பலர் வேட்டை நடத்திக் கொண்டிருக்க, சிலர் மட்டும் உட்கார்ந்த இடத்திலிருந்தே மந்திர தந்திரங்கள் மூலமும், உலோகங்களைப் பற்றிய அறிவின்மூலமும் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றிவிடமுடியுமென்று நம்பினர். அவ்வாறு செய்பவர்களை “இரசவாதம்” புரிபவர்கள் அல்லது “Alchemist” என்று உலக வரலாறு குறிப்பிடுகிறது. குறிப்பாக, நீர்மஉலோகமான பாதரசத்தை, எளிதில் கிடைக்கும் காரீயத்தை (Lead), செம்பு (Copper) எனப்படும் தாமிரத்தைத் தங்கமாக மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை இன்று நேற்றல்ல பலநூறு ஆண்டுகளாக மனிதர்களிடையே இருந்து வந்திருக்கிறது.

அந்தவகையில், இரசவாதம் செய்து ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்ற முயன்றவர்களில் நம் சித்தர்களும், வடபுலத்து முனிவர்களும், ரிஷிகளும் அடங்குவர். ஆனால், நம்மவர்களால் மட்டுமல்ல, உலகில் எவரும், உலோகங்களை உருக்கிப்பிரித்து, உலோகக்கலவைகளாகிய பித்தளை, வெண்கலம் என்று தயாரித்த அன்றைய நாள்கள் முதல், குறைவேக நியூட்ரான்களைக் கொண்டு அணுவைப்பிளக்கும் இன்றைய நாள்வரை யாண்டும் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றியதாக வரலாறு ஏதும் இல்லை, மாற்றினாலும் பயன்படுத்த இயலாது. இதைப்பின்னால் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்ற முயன்றவர்கள், உலோகங்களை உருக்கி, காய்ச்சி, வேறொரு உலோகத்துடன் சேர்ப்பதோடு மட்டும் நின்றிருந்தால் வேதியியல் என்ற ஒன்றே தோன்றியிருக்காது. ஆம், உலோகங்களுடன் அன்றைக்கு எளிதில் கிடைத்த வேதிப்பொருள்களான, ஆலம் (பொட்டாசியம்-அலுமினியம் சிலிகேட்-சவரம் செய்தபிறகு முகத்தில் தேய்க்கும் கல்) எனப்படும் ஒருவகைக் களிமண்ணை உருக்கி உருவாக்கிய கந்தக அமிலத்துடனும், கடலுப்பு/பாறை உப்பை அதிவெப்பநிலையில் உருக்க, வெளியேறும் காற்றுடன் நீரைக்கலந்து உருவாக்கிய ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடனும் வினைப்படுத்தினார்கள். அதன் விளைவாகத்தான், தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம் மற்றும் பாதரசம் போன்ற உலோகங்கள் பிரித்தெடுக்கும் முறைகள் மிக எளிதாக மாறிப்போயின. இதனால், நிறைய அளவில் உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டதே அன்றி ஒரு உலோகம் மற்றொரு உலோகமாக மாறவேயில்லை.

ஆனாலும், இரசவாதிகள், கடவுள் “ஆதாமிடம்” கொடுத்தனுப்பியதாகச் சொல்லப்படும், “மந்திரக்கல்லுக்கு” (ஹாரிபாட்டர் கதையில் வரும் Philosopher’s Stone), ஒரு உலோகத்தை மற்றொன்றாக மாற்றும் வல்லமை உண்டு என்று நம்பினர். ஆகவே, அதைத் தேடிக்கண்டடைந்து அல்லது புதிதாக உருவாக்கி,

“செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்
புல்லை நெல்லெனப் புரிதல்- பன்றி
போத்தைச் சிங்க ஏறாக்கல்!!”

என்று பாரதி சொல்வதைப்போல ஒன்றை மற்றொன்றாக்க முயன்று தோற்றனர்.

முனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC
அதென்ன மந்திரக்கல்?? நாளை பார்க்கலாம்.