யாவர்க்குமாம் வேதியியல்

Spread the love

யாவர்க்குமாம் வேதியியல்-1
#Chemistry_for_laymen

118-சவாலாக இந்தத் தொடரை எழுதத்துணிகிறேன். அன்றாட வாழ்வில் நம்மில், நம்மைச்சுற்றிய வேதிவினைகள், அதற்கான காரணிகள், வேதியியல் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள், எல்லோருக்கும் குறிப்பாக தமிழ் நட்புகளுக்காகவும், பள்ளி/கல்லூரி வேதியியல் மாணவர்களுக்காகவும், அவர்கள் வேதியிலை அணுகவேண்டிய முறைகள் குறித்தும் பதிவுகள் செல்லுமென்று நம்புகிறேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் கட்டாயம் கருத்தில் கொள்வேன். கருத்துகளும், பகிர்வுகளும் என்னை உற்சாகப்படுத்தும்.

வேதியியல் என்றால் “வேதித்து அறிந்ததை இயலுதல்” என்று பொருள் கொள்ளலாம். “அண்டமும், பிண்டமும் ஒன்றே” என்று சட்டைமுனி வரையறுப்பதும், வானும், வளியும், நெருப்பும் தந்தைப் பொருள்களென்றும், நிலமும், நீரும் தாய்ப்பொருள்களென்றும், தாயும்-தந்தையும் புணரும்போதுப் புதிய இயல்புகளுடையப் பொருள்கள் பிறக்கின்றன என்றும் சித்தமருத்துவம் வகைப்படுத்துவதும் கூட, சித்தர்கள் வேதித்துப்பெற்ற அறிவினால்தான். ஆகவே, வேதியியல் என்பது தமிழுக்கும், தமிழர்க்கும் புதிதல்ல. ஆயினும், இன்றைய சூழலில், வேதியியல் என்றாலே, எளிதில் புரிந்துகொள்ள முடியாத, வெறும் வினைச்சமன்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கடினமான பாடம் என்று கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒற்றைச்செல் உயிரியான அமீபா முதல் பெருநீலத்திமிங்கலம் வரை, உண்ணும் ஊணும், தின்னும் ஊனும், காற்றும், மண்ணும், மரமும், மலையும் இப்பேரண்டத்தில் இருக்கும் இன்னபிற என்று ஏனைய யாவுமே வேதிப்பொருள்கள்தாம். இயற்கைப்பொருள்கள் என்றபெயரில் சோடாக்காரத்தை மரச்செக்கு எண்ணெயுடன் கொதிக்கவைத்து வழலைக்கட்டி தயாரித்து “இயற்கைச்சோப்பு” என்றுக் கூவிக்கூவி விற்றாலும் அது இயற்கையன்று. ஏனெனில் இயற்கையென்று எதைச் சொன்னாலும் அது வேதியியலாகத்தான் இருக்கமுடியும். “வேதியியம் இன்றி ஏதுமில்லை இங்கு”. ஆகவே, நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை அவற்றின் பண்புகளைப் பொத்தாம்பொதுவாக அறிந்துகொள்வதைவிட அவற்றைக் கூர்ந்து நுண்ணோக்கி அறிந்து கொள்ளுதல் இன்றையத் தேவையாக இருக்கிறது. இதை வலியுறுத்தவே இந்தத்தொடரை எழுதத் துணிகின்றேன்.

ஒவ்வொரு வேதிப்பொருளும் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் அணுக்களால் கோர்க்கப்பட்டவை. உதாரணமாக, சர்க்கரைக்கட்டியை எடுத்துக்கொள்வோம். சர்க்கரைக்கு வேதிப்பெயர் சுக்ரோஸ், இது ஒரு இரட்டைச்சர்க்கரை (C12H22O11). அதாவது, குளுக்கோஸ் (C6H12O6) மற்றும் ஃப்ரக்ட்டோஸ் (C6H12O6) என்னும் இரண்டு ஒற்றைச்சர்க்கரை மூலக்கூறுகள் இணைந்து உருவாவதுதான் சுக்ரோஸ். சுருங்கச்சொன்னால், சர்க்கரை என்பது கரியும் தண்ணீரும் கலந்த வேதிக்கலவை. அதனால்தான் இவற்றை ஆங்கிலத்தில் கார்போ(கரி)ஹைட்ரேட்டுகள்(நீர்) என்கிறார்கள். ஒவ்வொரு சர்க்கரைப் படிகத்திலும் சுமார் 7400 இலட்சம் மில்லியன் சர்க்கரை (சுக்ரோஸ்) மூலக்கூறுகள் இருக்கின்றன.

சர்க்கரை என்றவுடன் ஒரு இனம் தெரியாத அச்சத்தை நம்மிடையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் இயற்கைவாதிகள். அதிலும் வெள்ளைச்சர்க்கரை என்றால் கொடுநஞ்சு என்பதுபோல நம்மிடையே கருத்துக்கள் உலா வருவது வேதனையிலும் வேதனை. வெள்ளைச்சர்க்கரை ஏன் செதுக்கிவைத்தாற்போல சின்னஞ்சிறு கனசதுரபடிகங்களாக இருக்கிறது என்று நம்மில் பலரும் அறியாதவர்களாக இருக்கிறோம். எந்தவொரு வேதிப்பொருளும் மிகமிக அல்லது அதிதூய்மையாக இருக்கும்போதுதான் அது படிகமாக உருப்பெறும். ஆகவேதான், நிர்மலத் தூய்மைக்கு உவமையாகப் “படிகத்தூய்மை -Crystal Clean” என்கிறார்கள். அப்படியானால் சர்க்கரைப்படிகத்தில் சுக்ரோஸ் மூலக்கூறுகளைத் தவிர்த்து வேறெந்தப்பொருளும் இருக்காது. குறிப்பாக, சுக்ரோஸின் மூல மூலக்கூறுகளான குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்ட்டோஸ்கள் இருந்தால் சுக்ரோஸ் படிகமாக மாறாது. தூளாகத்தான் இருக்கும்.

முனைவர் செ. அன்புச்செல்வன் MSc PhD MRSC
06/10/2018

ரேஷன் கடைகளில் மட்டும் ஏன் சர்க்கரையைப் பொடிசெய்து விற்கிறார்கள்??

நாளை பார்ப்போம்…

தொடரும்..