FEATUREDLatestNature

யானைப்பறவை Elephant Bird

Spread the love
யானைப்பறவை/ Elephant Bird

இதுவரை உலகில் வாழ்ந்த பறவைகளிலேயே மிகப்பெரியவை.

¶ கற்பனை செய்து பாருங்கள் ஒரு பெரிய யானையின் உயரம், வளர்ந்த குதிரையை விட அதிக எடை, ஒரு அழகிய பிரம்மாண்டம் அதுதான் யானைப் பறவை.

¶ மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த அழிந்துபோன பறக்க இயலா பறவை (ரேற்றிடே(Rattitae) குடும்பம்) இது.

elephant bird

தோற்றம்

¶ கிட்டத்தட்ட 8- 12 அடி உயரம், 730- 860 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான உடலமைப்பும், பறக்க இயலா மிகச்சிறிய இறகுகளும் கொண்ட பறவை.

¶ மிக உறுதியான கட்டையான கால்களிருந்தும் இதனால் வேகமாக ஓட இயலாது.

¶ மற்ற ரேற்றிடே பறவைகளை விட இதன் மண்டையோட்டின் அளவு பெரிது.

¶ இதன் அலகுகள் கூம்பு வடிவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும், உறுதியான எலும்பாலான மேல்வாய்(Bony Palate) இல்லாததினால் கடிக்கும் சக்தி இதற்கு குறைவாகவே இருந்திருக்கும் என்றும்,ஆனால் அதை ஈடு செய்வதற்காக சக்திவாய்ந்த ஜீரண அமிலங்கள் பெற்றிருக்கும் என்று நம்பப்படுகிறது.

# பெரும்பாலான மடகாஸ்கர் மழைக்காடுகளில் உள்ள பழங்கள் கடினமான விதை தோடு (Endocarp)களை கொண்டுள்ளன. அவைகளை மடகாஸ்கர் முழுவதும் பரப்பும் வேலையை இப்பறவைகள் செய்து வந்துள்ளன.

மடகாஸ்கர்

¶ ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட தீவான மடகாஸ்கர் மிக நீண்ட காலத்திற்குப் பிறகே மனிதர்களால் கண்டறியப்பட்டது.
¶ எனவே தனித்துவமான பிரம்மாண்ட விலங்குகளுக்கான கடைசி உலகமாக இருந்தது இத்தீவு.
¶ அதில் குறிப்பிடத்தக்க விலங்குகளாவன; பிரம்மாண்ட லெமூர்/Giant Lemur (கொரில்லா அளவு), மிகப்பெரிய ஆமை/Giant Tortoise, மிகச்சிறிய நீர்யானை/Tiny Hippo, யானைப்பறவை ஆகியவை.
¶ மனித குடியேற்றத்திற்கு பிறகு இவ்வினங்கள் படிப்படியாக அழியத் தொடங்கின.
¶ மொத்த தீவுமே ஒரு பல்லுயிர் வெப்ப பகுதி (Biodiversity Hotspot) தான். இன்றும் அங்கு வாழும் உயிரினங்களில் 90% உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை.

 

வரலாற்றுப் பதிவுகள்

¶ 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் யானை பறவைகளும், கிவி பறவைகளும் (நியூசிலாந்து) ஒரே மூதாதையரிடமிருந்து பிரிந்துள்ளன.

¶ பார்ப்பதற்கு நெருப்பு கோழி போல இருந்தாலும் இவை அதன் நெருங்கிய உறவினர் இல்லை.

¶ யானைப் பறவைகள் பதினேழாம் நூற்றாண்டில் அழிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

¶ மார்க்கோபோலோ (13ஆம் நூற்றாண்டு) மடகாஸ்கர் தீவுகளில் வாழும் மிகப்பெரிய பறவை பற்றி கேள்விபட்டதாக பதிவு செய்துள்ளார்.

Elephant Bird with Giant Lemur(Gorilla Size)
Elephant Bird with Giant Lemur(Gorilla Size)

¶ 16ம் நூற்றாண்டில் மடகாஸ்கரை ஆண்ட பிரெஞ்சு கவர்னர், நெருப்புக் கோழி போன்ற பிரமாண்ட பறவை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ளதாக பதிவு செய்துள்ளார்

¶ 19ம் நூற்றாண்டில் மடகாஸ்கர் சென்ற ஐரோப்பிய பயணிகள், மிகப்பெரிய முட்டை ஓடுகள் உணவு கிண்ணங்களாக பயன்படுத்தப்படுவதை பார்த்ததாக பதிவு செய்துள்ளனர்.

¶ சமீபத்தில் யானைப் பறவையின் எலும்புகளில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவ்வெலும்புகள் 10,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கண்டறிந்துள்ளனர்.

¶¶¶ ஒரு சுவாரசியமான தகவல் என்னவெனில் வரலாற்றுக்கு முந்திய மனிதன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி வேட்டையாடியதற்கான தடம் அதில் பதிந்துள்ளது.

அழிந்ததற்கான காரணங்கள்

யானைப் பறவையின் முட்டையானது, மடகாஸ்கரில் குடியேறிய மனிதர்களுக்கு முக்கியமான உணவாக அமைந்ததே இவ்வினம் அழிந்ததற்கான குறிப்பிடத்தக்க காரணம்.

¶¶¶ உலகில் வாழ்ந்த அனைத்து முட்டையிடும் உயிரினங்களின் முட்டையை விட மிகப் பெரியது.

¶ ஒரு முட்டையின் அளவானது, டைனோசர் முட்டையை விட மூன்று மடங்கு அளவில் பெரியதாகவும், 160 கோழி முட்டைகளுக்கு சமமாகவும் இருந்தது.

elephant bird egg size and comparison
Elephant bird egg size and comparison

¶ அவ்வளவு பெரிய பறவையை கொல்ல ஆதி மனிதர்களால் இயலாத போது, அவர்கள் மிக அதிக அளவில் முட்டையை தேடினர்.
ஏனெனில் ஒரு முட்டை பல குடும்பங்களுக்கு போதுமானது.

¶ யானைப்பறவையின் முழுமையான முட்டைகள் (பொரிக்காத முழுமையான வளர்ச்சி அடைந்த எலும்புக்கூடு உள்ள முழுமையான முட்டை உட்பட) பல கிடைத்துள்ளன.

¶ மிக அதிக அளவாக அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் (Buffalo Museum of Science) 40 முட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன.

¶ பல தனிமனிதர்களும் யானைப்பறவை முட்டைகளை சொந்தமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர், பிரபலமான வனவிலங்கு ஒளிப்பதிவாளர் டேவிட் அட்டன்பரோ (David Attenborough).

நம் ஊர் யானையை (6- 12அடி) நாம் பிரம்மாண்டம் என்கிறோம், அதே அளவில் ஒரு பிரம்மாண்ட பறவையை (8- 12 அடி), 4 முதல் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் நாம் தொலைத்துள்ளோம் என்பது வருத்தமான உண்மை.

கட்டுரையாளர்,
Dr. P. P. Vanathi Devi,
Zoologist.

Leave a Reply