மெய்ப்பொருள் காண்பது அறிவு

Spread the love

இந்தக் கதை என் வீட்டிற்கும் பொருந்தும். நான் பழம் வாங்கப்போனால் ஒரு டசன் 80ரூபாய். என் வீட்டில் விளைந்த சுமார் 300 பழங்கள் இருக்கும் குலைக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச விலை 250 ரூபாய்.

கீழுள்ள கதை அல்லது செய்தியின் சாராம்சம் புரிகிறதா?

-#-

நம்ம ஊரு ஹோட்டல்களில் வடை பத்து ரூபாய். தள்ளு வண்டிகளில் ஆறு ரூபாய். சிலரிடம் ஐந்து ரூபாய்.

ஹோட்டலில் டேபிள், லைட், பேன், சர்வர், இலை, தண்ணீர் அது இதுன்னு பல செலவுகள் அதில் அடங்கியிருக்கு. அதனால் பத்து ரூபாய்க்கு வித்தாதான் அவங்களுக்கு கட்டுப்படியாகும்.

தள்ளு வண்டியில் கெட்டி சட்டினியுடன் கொடுக்குறவங்க ஆறு ரூபாய்க்கும், நீர்த்த சட்டினி கொடுக்குறவங்க ஐஞ்சு ரூபாய்க்கும் கொடுக்குறாங்க. அதனால் அவங்க விலையும் சரியானதுதான்.

அதனால் விற்பதற்காக வடையை தயாரிக்கும்போது அதன் குறைந்த பட்ச விற்பனை விலை ஐந்து ரூபாயாகத்தான் இருக்க முடியும் என இத்தனை நாள் நினைத்திருந்தேன்.

ஆனா நேற்று ஊருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தள்ளுவண்டியில் வடை வெறும் ரெண்டு ரூபாய்க்கு கொடுத்தாங்க. நான் ஐந்து வடை கொடுங்கன்னு 10 ரூபாயை நீட்டினேன். அவங்க ஆறு வடையை செய்தித்தாளில் கட்டிக்கொடுத்தாங்க. இது எப்படி சாத்தியம்னு அங்கேயே நின்னு கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னர் எங்கு சாப்பிட்ட வடைக்கும் இந்த ரெண்டு ரூபாய் வடைக்கும் அளவிலோ தரத்திலோ எந்த குறையும் இல்லை. எண்ணெய் கூட கண் முன்னேதான் பாக்கெட் பிரிச்சு ஊத்துனாங்க.

பொறுக்கமுடியாமல் அவங்ககிட்டேயே கேட்டுட்டேன்.
“உளுந்து நம்ம வரப்பில் விளைஞ்சதுப்பா..” என ஒரு வரி பதிலை சொல்லிவிட்டு அவங்க வேலையில் மூழ்கிட்டாங்க. தவிர நான் அலசியவரையில் தெரிஞ்சிக்கிட்டது..
இவங்க பகலில் மட்டும்தான் விக்கிறாங்க. அதனால் லைட் செலவு இல்லை. இவங்க ஒரே ஆள்தான். அதனால் கூலி செலவு இல்லை. சட்டினி எதுவும் கொடுக்கிறதில்லை. செய்தித்தாளில் மட்டும்தான் வச்சு கொடுக்குறாங்க. அதனால் தட்டு கழுவுற வேலையும் இல்லை.

ஆகையால் நாம் வாங்கும் பொருளின் விலையை தயாரித்து விற்பவரின் கூடுதல் செலவினங்கள்தான் தீர்மானிக்குது. நாம் கவனிக்க வேண்டியது யார் எங்கிருந்து என்ன விலைக்கு எப்படி கொடுக்குறாங்கன்னு..
கிராமத்து தள்ளுவண்டியில் ரெண்டு ரூபாய்க்கு விற்பதை சொல்லி நகருக்குள் ஐந்து ரூபாய்க்கும், ஆறு ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் விற்பவர்களிடம் போய் நீ ஏன் அதிக விலைக்கு விக்கிறன்னும் கேட்கக்கூடாது. இவங்க விலையை ஒப்பீடா வச்சிக்கிட்டு கிராமத்து தள்ளுவண்டிக்கு போய் அதெப்படி உன்னால் இந்த விலைக்கு கொடுக்க முடியும்.. நீ தரமற்ற பொருளை போட்டு ஏமாத்துறன்னும் சொல்லக்கூடாது.

இதே போல் இன்னொரு சம்பவம்:
ஒருத்தர் மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயை சில்லறை விற்பனையில் லிட்டர் 160 ரூபாய்க்கு விற்று வருகிறார். நீங்களே பாத்திரம் எடுத்துக்கிட்டு போனா அதில் மேலும் 10 ரூபாய் குறைச்சிக்கிறார். மொத்த விற்பனை விலை இன்னும் குறைவாம். அது எவ்வளவு என தெரியவில்லை. நல்ல வியாபாரம் நடந்திச்சு.

அதே ஊரில் ஒரு டபுள் டிகிரி பட்டதாரி இவரோட விற்பனை வேகத்தை பார்த்துவிட்டு தானும் இதே போல செக்கு எண்ணெய் விற்க ஆசைப்பட்டார். அவருக்கு தெரிந்த பாணியில் எல்லா ஏற்பாடும் செய்து தொடங்கினார். தனது செலவுகள் அனைத்தையும் கணக்கிட்டு ஒரு லிட்டர் கடலெண்ணெய் லிட்டர் 240 ரூபாய்க்குத்தான் அவரால் விற்க முடிந்தது. மேலும் பாத்திரம் எடுத்து வர்றவங்களுக்கு ஐந்து ரூபாய் மட்டும்தான் குறைத்தார். பல வழிகளில் முயன்றும் அவரால் இந்த விலையைவிட குறைக்க முடியவில்லை.
எனவே மொத்த விற்பனையும் கிடையாது. பெரிய விற்பனையும் நடக்கவில்லை.

நிறைய சிந்திச்ச பட்டதாரி தனது பட்டறிவை பயன்படுத்த தொடங்கினார். அதாவது தனது செலவுகளை விவரமா போட்டு விளம்பரம் தயாரித்தார்.
ஒரு கிலோ கடலை 120 ரூபாய்.
ஒரு லிட்டர் எண்ணெய் எடுக்க ரெண்டரை கிலோ கடலை தேவை. ஆக 300 ரூபாய்.
இதில் கிடைக்கும் புண்ணாக்கை விற்று கிடைக்கும் தொகை 80 ரூபாய். ஆக எண்ணெயின் அடக்கவிலை 220 ரூபாய் ஆகிறது. இதற்கு மேல் ஆள் கூலி, மின்செலவு, முதலீட்டு செலவு, கடை வாடகை, லாபம் என கணக்கிட்டால் 260 ரூபாய்க்கு குறைவாக கொடுக்க முடியாது. ஆனால் நான் மக்களுக்கு நல்ல பொருள் கிடைக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் லாபம் இன்றி 240 ரூபாய்க்கு விற்கிறேன். நிலைமை இப்படியே போனால் நான் மிகவும் நட்டமடைந்து என் குடும்பம் தெருவுக்கு வந்துவிடும்..
நிலைமை இப்படி இருக்க அவர் நல்ல கடலெண்ணெய் 160 ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடியும்..?

இப்படியாக ஒரு கண்ணீர் கதையை விளம்பரமாக வெளியிட்டார். கடையில் கிலோ 140 ரூபாய்க்கு கடலை வாங்கி பழக்கப்பட்ட மக்களும் இந்த பஞ்சபாட்டை அப்படியே நம்பி இந்த டபுள் டிகிரி பட்டதாரியிடமே அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க ஆரம்பித்தனர். மேலும் பழைய ஆளை ஏமாற்றுகிறார் என திட்டவும் செய்தனர். பட்டதாரி வந்து தங்களுக்கு உட்பொருளை விளங்க வைத்துவிட்டதாக அவரை வெகுவாக பாராட்டவும், அவர் என்ன சொன்னாலும் நம்பவும் தொடங்கினர்.

இதுதானே நிலைமை என நீங்களும் கணிக்கிறீர்களா..
வாங்க என்ன நடக்கிறது என ஆராய்வோம்.
முதலாமவர்:
தனது சொந்த நிலத்தில் நிறைய எண்ணெய் தரக்கூடிய கடலையை சிறப்பாக விளைய வைக்கிறார். எனவே சந்தை விலை, போக்குவரத்து செலவு, கையாளுதல் செலவு ஏதுமில்லை. அவரும் அவரது தம்பி, மகன், மனைவி இவர்கள்தான் பணியாளர்கள். எனவே யாருக்கும் கூலி கொடுக்க தேவையில்லை. புண்ணாக்கை பண்ணை ஒன்றிற்கு நல்ல விலைக்கு விற்கிறார். அவங்களே வந்து எடுத்துக்கிட்டு போறதால அதிலும் அவருக்கு நல்ல லாபமே. சிறு தொழிலகங்களுக்கான மின் இணைப்பு வைத்துள்ளார். எனவே மின் செலவு குறைவு. சொந்த இடம். வாடகை செலவும் இல்லை.

மற்றபடி பட்டதாரியை விட தரமான சுத்தமான வாசமுள்ள எண்ணெயைத்தான் தருகிறார்.

டபுள் டிகிரி பட்டதாரி:
சரியான கடலை கிடையாது. 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்குகிறார். சந்தை விலை நிலவரம் தினம் தினம் அவரது கொள்முதலை பாதிக்கும். சுகவாசி. எல்லாவற்றுக்கும் ஆள் வைத்துதான் செய்ய முடியும். செக்கு ஓட்டுவது கூட கூலி ஆள் வைத்துதான். கமெர்சியல் மின் இணைப்பு வைத்துள்ளார். அலங்கார விளக்கு, காற்றாடி, வரவேற்பறை என சின்ன சின்ன கூடுதல் செலவுகளும் உண்டு. எல்லா நேரமும் எதிர்பார்த்த அளவு எண்ணெய் கிடைக்காது.

இதே போல பால், நெய், அரிசி, கைவினைப்பொருட்கள் என பலவற்றுக்கும் உண்மைக்கதைகள் இருக்கிறது.
எனவே ஒருவர் விலை குறைவாக கொடுத்தாலே தரமற்ற பொருளைத்தான் விற்கிறார் என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டிவிடக்கூடாது.

ஊரில் டபுள் டிகிரி பட்டதாரிகள் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மார்க்கெட்டிங், கார்போரேடிசம் தெரியும். ஆனால் பொருளை எப்படி இலகுவாக தயாரிப்பது என்கிற அடிப்படை தெரியாது. தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ளவும் தான் கற்றுள்ள கல்வியும், தனக்கு மட்டுமே தெரியும் என்கிற அகந்தையும் இடம் தராது. இவர்கள் தாமே இயற்கை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவர்கள் போல காட்டிக்கொண்டு, உண்மையில் அதனதன் துறையில் சிறப்பாக செய்துவரும் அடிமட்ட உற்பத்தியாளர்கள் மீது சேற்றை வாரி இறைத்து அவர்களை அழித்து தானும் ஒருநாள் அழிவார்கள். மக்களுக்கு இவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை போய்விடும்.

மேலும் இந்த துறையில் மக்களிடையே உள்ள குழப்பங்களை பயன்படுத்தி கார்பொரேட் உள்நுழைய முழுக்காரணமும் இவர்களே..!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Arunachalam