முப்பரிமாண நிழல் அண்டம் 01

Spread the love

முப்பரிமாண நிழல் அண்டம் 01

அறிவியல் எழுதி நீண்ட நாட்களாகின்றன. சேச்சே, நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களாகின்றன. இப்படியே விட்டால், எச் ராஜாவையும், பாண்டேயையும், ரஜனியையும் வைத்துத் துணுக்குகள் எழுதுபவனாகி விடுவேன். இப்போவெல்லாம் ‘பொண்டாட்டி’ பற்றியே பேஸ்புக்கெல்லாம் பேச்சு. அதைப்பற்றி எழுதினால், சாருவும், அராத்துவும் என்னை பிளாக் பண்ணிவிடுவார்கள். அதனால், அறிவியலே பாதுகாப்பானது. அறிவியல் என்றால், சும்மா போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகலாம். படிப்பவர்களும் ரொம்ப நோண்ட மாட்டார்கள். ‘இவன் ரொம்ப நல்லவேண்டா!’ என்று நம்பிவிடுவார்கள்.

இப்போதுதான் அறிவியலும் ஆன்மீகம் போல ஆகிவிட்டதே! ‘இப்படி இருக்கு, அப்படி இருக்கு’ என்று கோட்பாடுகளாய்ச் சொல்லிக் கொண்டே போகிறார்கள். கணிதப்படி, தர்க்கப்படி நிறுவினாலும், அதை உறுதி செய்யும் அளவிற்கு அறிவியல் வளராததால், உறுதிசெய்ய முடியவில்லை. வளரும் என்று நம்புகிறார்கள். ‘பிளாங் நீளம்’ (Plank length) என்ற ஒரு அளவீடு இயற்பியலில் உண்டு. இதுவரையுள்ள அளவீடுகளில் மிகமிகமிகச் சிறிய அளவீடு இதுதான். 1.616X10^-35 மீட்டர்தான் ஒரு பிளாங்க் நீளம். அதாவது, 0. 00000 00000 00000 00000 00000 00000 00001 61623 மீட்டர். இவ்வளவு சிறிய அளவீட்டை இயற்பியல் சொல்லியிருந்தாலும், இதுவரை யாரும் அதை அளந்ததே கிடையாது. அதை அளப்பதற்கு ஒரு கருவியோ, அதற்கான அளக்கப்படும் பொருளோகூடக் இன்றைய அறிவியலில் வசப்படவில்லை. ஒரு அளவீடே கோட்பாடு அளவில்தான் உள்ளது. பிளாங்க் அலகைக் கண்டுபிடித்தவர் ஒரு ஜெர்மனியர். 1900 ஆண்டுகளில் இதை வெளியிட்டார். அவர் பெயர் Max Planck. நிஜத்தில் அவர் பெயரும் பிளாங்க் நீளத்தைப் போலவே நீளம். Max Karl Ernst Ludwig Planck.

இப்படிக் கோட்பாடுகளாய் ஓடிக்கொண்டிருக்கும் இயற்பியலை வைத்தே நானும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், இவையெல்லாம் நிஜமாகும் என்ற எதிர்பார்ப்புத் திடமாக என்னிடம் இருக்கின்றது. கடவுள் கண்முன்னே வருவார் என்று எண்ணுவதில்லையா? இப்போது அறிவியலை மீண்டும் எழுதலாமே என்று ஒரு விருப்பம் வந்திருக்கிறது. உடல்நிலை ஒத்துக்கொண்டால் தொடருவேன்.

சமீபத்தில் வெளியான ‘எந்திரன் 2.0’ படத்தைத் திரையரங்குகளில் பார்த்திருப்பீர்கள் (தமிழ் ராக்கர்ஸில் பார்த்தவர்கள் சற்றே ஒதுங்கி நில்லுங்கள்). 3Dயில் படம் கலக்கலாக இருந்திருக்கும். அழகான, ஆச்சரியமூட்டும் முப்பரிமாண உலகத்திற்குள் உங்களை இரண்டு மணி நேரங்கள் அப்படம் உட்கார வைத்திருக்கும். அதைப் பார்த்துணரவென ஒரு கண்ணாடிகூட உங்களுக்குத் தரப்பட்டிருக்கும். அந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, அங்கும் இங்கும் என்று எங்கும் பார்க்காமல், திரையரங்கின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தால், முப்பரிமாணத் தோற்றத்தில் பட்சிராஜன் சிறகடித்து, செல்போன்களைச் சிதறடிப்பார். புளகாங்கிதத்தின் உச்சிக்கே நீங்கள் சென்றிருப்பீர்கள். படம் முடிந்து விளக்குகள் எரிய, இருபரிமாண வெண்திரை வெளேரென உங்களைப் பார்த்துச் சிரிக்கும். ஒரு, இருபரிமாணத் திரையில் அதுவரை முப்பரிமாண உலகை உருவாக்கியிருந்ததைப்பற்றி எதுவுமே சிந்திக்காமல், ‘தலைவா!’ தலைவா!’ என்று குரலெழுப்பியபடி, ரஜனியின் அடுத்துவரும் ‘பேட்ட’ படத்துக்கு இன்னும் ஐம்பது லிட்டர் பால் ஊற்ற வேண்டுமென’ மட்டும் சிந்தித்துக்கொண்டு வெளியேறுவீர்கள்.

ஆனால்……….!

ஒரு, இருபரிமாணத் திரையில் முப்பரிமாண உலகைச் சித்தரித்தது யார்? சங்கரா? சங்கரின் தொழில்நுட்பக் குழுவா? திரைப்படக் கருவியா? அல்லது நீங்கள் அணிந்த கண்ணாடியா? இல்லை. இவை எதுவுமே இல்லை. சரியாக விளங்கிக் கொண்டால், அதை உருவாக்கியது நீங்களேதான். அதாவது உங்கள் மூளைதான் அந்த முப்பரிமாணத்தை உருவாக்கிக் கொண்டது. அதை மூளை உருவாக்குவதற்குக் காரணமாக மட்டுமே, மேலே சொன்னவை இருந்தன. மூளையே திரையில் தெரிந்ததைக் கணக்கிட்டுச் சரியான அளவில் புரிந்துகொண்டு, 3D காட்சியாக விரிவடைய வைத்தது.

ஒரு மூளையால் இருபரிமாணத் தோற்றத்தைச் சில உடன் காரணிகளின் துணையுடன், ஒரு முப்பரிமாண உலகையே உருவாக்க முடியுமெனின், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த முப்பரிமாண அண்டத்தையும் அதே மூளைதான் உருவாக்கியிருக்கிறது என்று சொன்னால் எப்படி மறுக்க முடியும்? என்ன, பைத்தியகாரத்தனமான உளரலாகத் தெரிகிறதா? நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பேரண்டமே ஒரு ஹோலோகிராம் உலகுதான் என்று நெதர்லாந்து நாட்டுக்காரரான ‘கெரார்ட் ஹூஃப்ட்’ (Gerard’t Hooft) என்னும் இயற்பியலாளர் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிவியல் அறிக்கை, ‘ஹோலோகிராபிக் பிரின்ஸிபல்’ (Holographic principle) என்று அழைக்கப்படுகிறது. ஹூஃப்ட் சாதாரண இயற்பியலாளரெல்லாம் கிடையாது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றுக் கொண்டவர். அவர் சொல்கிறார், ‘நாம் ஒரு ஹோலோகிராம் யூனிவேர்ஸில் வாழ்ந்து கொண்டிருப்பதாக’.

நாம் உண்மையிலேயே, இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு மாய உலகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா? அதை புரிந்து கொள்வதற்கு, ஹோலோகிராம் அண்டம் என்பதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

#hologram_universe
#rajsiva
#ராஜ்சிவா
#ஹோலோகிராம்_அண்டம்
#முப்பரிமாண_நிழல்_அண்டம்