Politics

முதல் தர OVOP

Spread the love

முதல் பயங்கரவாதம்; முதல் ஊழல் ; முதல் எதிரி; முதல் தர OVOP !இந்தியாவின் முதல் மாபெரும் ஊழல் நடந்தது LIC வழியாக. சரி….

Posted by Vivek Gananathan on Wednesday, May 15, 2019

முதல் பயங்கரவாதம்; முதல் ஊழல் ; முதல் எதிரி; முதல் தர OVOP !

இந்தியாவின் முதல் மாபெரும் ஊழல் நடந்தது LIC வழியாக. சரி. LIC-ன் வரலாறு என்ன?

ராம் கிருஷ்ணன் டால்மியா. ராஜஸ்தானின் மார்வாரி – ஜெய்ன்.

இவர் 1946ல் பென்னட் & கோல்மேன் நிறுவனத்தை வாங்குவதற்காக தன்னுடைய இன்சுரன்ஸ் கம்பெனியின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது 1956ல் அம்பலமானது. இதைப் பிரச்னையாக்கியது நேருவின் மருமகன்; இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி.

இந்த ஊழலுக்காக 1956-58 வரை இரண்டு வருடம் திகார் சிறையில் இருந்தார் மிகப்பெரும் பணக்காரரான ராம் கிருஷ்ணன்.

திஹார் ஜெயில் காலத்தில் மிகப்பெரும்பாலான நாட்களில் உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையிலேயே இருந்தார் ராம் கிருஷ்ணன் டால்மியா. சிறைக்குப் பிறகும் சுமார் 20 ஆண்டுகள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் பசு பாதுகாப்பு இயக்கம் தொடங்கினார்.

ராம் கிருஷ்ணன் டால்மியா ஜெய்ன், பிறப்பால் சமூகத்தில் வைசியன். அரசியலில் செல்வாக்கான பணக்காரர். வரலாற்றில் ஆதிக்க வகுப்பு வணிகர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்து.

டால்மியா ஊழலுக்குப் பிறகுதான், சுமார் 250 இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தொகுக்கப்பட்டு LIC உருவாக்கப்பட்டது. இன்சுரன்ஸ் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த எல்.ஐ.சி.-யின் விதிகளுக்கு முரண்பாடாக, டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் நிதி அமைச்சகத்தால் நடத்தப்பட்டதுதான் இந்தியாவின் முதல் ஊழலான முந்த்ரா ஊழல்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ராவின் சிக்கலுக்குரிய 6 நிறுவனங்களில் சுமார் 1.26 கோடி LIC பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டது என்பதுதான் ஊழல். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை மிகப்பெரிய அளவுக்கு எழுப்பியவர் பெரோஸ் காந்தி. நேருவின் மருமகன்; இந்திராவின் கணவர்.

முந்த்ரா ஊழலை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சி.சாக்லா ஆணையம், நிதித்துறை முதன்மைச் செயலர் ஹெச்.எம்.பட்டேல், LIC ஊழியர் எல்.எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோரை குற்றம்சாட்டியது. தொடர்ந்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி விவியன் போஸ் கமிஷன், நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஊழலில் தொடர்பிருப்பதை உறுதிசெய்தது.

“சந்தையை ஊக்குவிக்கவே பணம் முதலீடு செய்யப்பட்டதாக” கிருஷ்ணமாச்சாரி சொல்வது பொய் என்றது விவியன் போஸ் விசாரணை.

இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட முதல் ஊழல் அரசியல்வாதி டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஒரு பார்ப்பனர். கிருஷ்ணம்சாச்சாரி பதவியை ராஜினாமா செய்தார். அல்ல; பெரோஸ் காந்தி செய்ய வைத்தார் !

இந்தியாவின் முதல் ஊழலைச் செய்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி, இந்தியாவின் அரசியலமைப்பு அவையில் இருந்தவர்.

நிதி அமைச்சர் பதவியை இழந்தபின்னர், 1962ல் மீண்டும் தேர்தலில் வென்றார் கிருஷ்ணமாச்சாரி. நிதித்துறை அல்லாத எந்த துறையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என கேபினெட் அமைச்சராக்கினார் நேரு. இதில் கிருஷ்ணமாச்சாரிக்கு கோபம். இதனால், நேரு சாகும் வரை துறை பொறுப்பை ஏற்காமல், நேரு இறந்ததும் நிதி அமைச்சர் பொறுப்பை எடுத்துக்கொண்டார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

கிருஷ்ணமாச்சாரி பிறப்பால் சமூகத்தில் உயர்சாதி பார்ப்பனர். அரசியலில் பார்ப்பனியவாதி. வரலாற்றில் ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியவர். அரசியலமைப்புச் சட்டத்தால் அவர் ஒரு இந்து.

ராம் கிருஷ்ணன் டால்மியா ஊழல் செய்து தொடங்கிய பென்னட் & கோல்மேன் நிறுவனத்தின் பத்திரிகைதான், டைம்ஸ் ஆப் இந்தியா. அந்த TOI தான் ஆ.ராசா 2ஜி அலைக்கற்றையில் கொள்ளையடித்து 3,000 கோடியை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தலைப்புச்செய்தி வெளியிட்டது. அதை நிரூபித்தால் வழக்கை நடத்துவதையே நிறுத்திவிட்டு, ஆயுள் முழுக்க சிறையிலிருக்க தயார் என அறிவித்தார் ஆ.ராசா. தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 7 ஆண்டு உக்கிரப்போருக்குப் பின் வழக்கை தூள்தூளாக நொறுக்கியதும் ஆ.ராசா தான்.

ஆ.ராசா பிறப்பால் சமூகத்தில் சூத்திரன். அரசியலில் திராவிடன். வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர். அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு இந்து.

காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, 1932 முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கோல்வால்கருடன் மிகநெருக்கமான தொடர்புடையவர். இந்து மகாசபையைத் தொடங்கியவரும், காந்தி கொலையில் தொடர்புடையவர் என ஜீவன் லால் கபூர் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டுவர் விநாயக் சாவர்க்கர். மன்னிப்புக் கடித புகழ் சாவர்க்கரைத் தான் வீர சாவர்க்கர் என சங் பரிவாரம் சொல்லும். விநாயக் சாவர்க்கரின் அண்ணன் தாமோதர் சாவர்க்கர். தாமோதர் எழுதிய, ‘ராஷ்டிர மீமாம்சை’ புத்தகத்தை 1940ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரும், நாதுராம் கோட்சேவும் இணைந்தே ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தனர்.

1948 ஜனவரி 30 காந்தி கொலைக்கு முன்பாக 5 முறை காந்தியைக் கொலைசெய்ய முயற்சிகள் செய்யப்பட்டது. இதில், 3 கொலை முயற்சியில் நாதுராம் கோட்சேவின் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மூன்று கொலை முயற்சிகளின் போதும் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் தான் இருந்தார்.

காந்தி கொலை முயற்சிகள்:

1.ஜூன் 25, 1934 புனே மாநகராட்சி நிகழ்ச்சியின்போது நடந்த குண்டு வீச்சு. குண்டு வீசியவர்கள் யார் என்கிற விவரம் முழுமையாக தெரியவில்லை.

2. ஜூலை, 1944, மலேரியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த காந்திக்கு எதிராக நாதுராம் கோட்சே தலைமையிலான இளைஞர்கள் கோஷமிட்டனர். காந்தி அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கோட்சே மறுத்துவிட்டார். அன்று மாலை காந்தியைக் கொலைசெய்ய நாதுராம் கோட்சே கையில் குத்துவாளோடு ஓடிவந்தார். அப்போது அங்கிருந்தவர்களால் தடுக்கப்பட்டார். காந்தி கோட்சேவை தன்னோடு 8 நாட்கள் தங்கி, தனது அரசியல் பார்வைகளைப் பற்றி தன்னோடு விவாதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், கோட்சே மறுக்கவே அவரை அங்கிருந்து செல்ல காந்தி அனுமதி வழங்கினார். இது காந்தி கொலையை விசாரித்த கபூர் கமிஷனில் பிலார்ஜி குரு அளித்த சாட்சியத்தின் வாக்குமூலம்.

3. செப்டம்பர் 1944. இரண்டாம் உலகப்போர் சூழலுக்கு மத்தியில் 1944 மே மாதம் சிறையிலிருந்து வெளிவந்த காந்தி ஜின்னாவுடன் பிரிவினை கோரிக்கை குறித்து உரையாட விரும்பினார். இதை எதிர்த்து, காந்தி பாம்பே செல்வதைத் தடுக்க கோட்சே மற்றும் சகாக்கள் திட்டம் தீட்டினர். காந்தியை தடுக்கும் முயற்சியின் போது கோட்சே கைது செய்யப்பட்டார். இது சுஷிலா நய்யார் அளித்த வாக்குமூலம்.

4. ஜூன், 1946 காந்தி புனேவுக்கு செல்லும் வழியில் நூருல், கஜ்ரத் இரண்டு இடங்களில் ரயிலைக் கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் தடைகள் போடப்பட்டிருந்தன. இதன்பிறகு நடந்த ஜூன் 30ம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில் தான், “நான் 125 ஆண்டுகள் வாழ்வேன்” என்கிற புகழ்பெற்ற கருத்தை காந்தி வெளியிட்டார்.

5. காந்தி படுகொலைக்கு 10 நாட்களுக்கு முன்பு, பிர்லா பவனிலேயே வைத்து ஜனவரி 20, 1948 அன்று நடத்தப்பட்ட கொலை முயற்சி.

இதில், கவனிக்க வேண்டியது பிர்லா பவன் திட்டமிடலைத் தவிர மற்ற அனைத்துமே நாக்பூர் – புனே – மும்பை என மகாராஷ்டிரா மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள், ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு செலுத்திய இடங்களில் மட்டுமே நடந்துள்ளன.

காந்தியைக் கொலை செய்த நாதுராம் விநாயக் கோட்சே பிறப்பால் சமூகத்தில் உயர்சாதி பார்ப்பனர். அரசியலில் இந்துத்துவ பயங்கரவாதி. வரலாற்றில் ஒடுக்கும் பயங்கரவாதப் பிரிவு. ஆர்.எஸ்.எஸ்-ஐ பொறுத்தவரை மாவீரன். இந்திய அரசியலைமைப்புச் சட்டப்படி மதத்தால் இந்து. குற்றவியல் சட்டப்படி வரலாற்றிலேயே படுபாதகமான கொலைசெய்த குற்றவாளி.

இந்தியாவின் முதல் ஊழல்வாதியான டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் பெயரிலிருக்கும் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில்தான் கமலஹாசன் வீடு இருக்கிறது. காந்தி கொலையைக் குறித்து ஹே ராம் என்கிற திரைப்படம் எடுத்தவர் கமலஹாசன்.

கமலஹாசன் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் ‘மய்யம்’ குறித்த கவர்ச்சி திரைப்படத்திலும் காந்தி கொலையைக் குறித்து ஒரு சீன் வைத்திருக்கிறார். அந்தக்காட்சி முஸ்லீம் வீடுகளுக்கு அருகில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் ஆனால், கொலையாளிக்குப் பெயர் ‘இந்து’ என பொத்தம்பொதுவாக சூட்டப்பட்டுள்ளது. இந்த பொத்தாம்பொதுத்தனத்துக்கு பின்னால் பெரும் திட்டமிருக்கிறது.

இந்து என்றால் என்னவென்று, ஹே ராமில் சாகேத் ராமாக வாழ்ந்த கமலுக்கு குருவாக இருந்த ‘கோல்வால்கர்’ சொல்லியிருக்கிறார். ‘இந்து’ என்பதற்கு பதில் ஆரியன் என்று சொன்னாலே போதுமானது. ஆனால், ஆரியன் என்று சொன்னால் ஆரிய – திராவிட வேறுபாட்டைக் கொண்டு கேள்விகேட்கின்றனர். எனவேதான், இந்து என சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. திராவிடர் என பேசுபவர்களே நம் முதல் எதிரிகள் என்கிறார். எனவே, ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இந்து என்பது இதுதான். அது திராவிட அச்சத்திலிருந்த வருவது. தேசத்தின் பன்மைத்தன்மையை விழுங்கும் வெறியில் வருவது.

ஆனால், அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் இந்து என்று ஒன்று இருக்கிறது. அதில் ஆ.ராசாவும் இந்துதான்; அம்பேத்கரும் இந்துதான்; காந்தியும் இந்துதான்.

எனவே, கமல் இந்து என வாய்த்துணிச்சல் காட்டவிரும்பினால், ஆர்.எஸ்.எஸ் இந்து கோட்சே என சொல்வதற்கு வாய்க்கு வக்கிருக்க வேண்டும்.

முதல் ஊழல்வாதி யார் என்றால்? பிறப்பால் பார்ப்பனராக, அரசியலில் பார்ப்பனியவாதியாக, வரலாற்றில் ஆதிக்கத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி தான் முதல் ஊழல்வாதி என திராவிட இயக்கம் தெளிவாகச் சொல்கிறதல்லவா? அந்தத் தெளிவான துணிச்சல் இருக்க வேண்டும்.

அந்த துணிச்சல் இல்லாத கதாபாத்திரங்களுக்கு இணையம் ஒரு அழகான பெயர் வைத்திருக்கிறது.

‘OVOP’ ! (‘உளறிக்கொட்டு உன் பாட்டுக்கு’)

ஏனெனில், கமல் பிறப்பால் சமூகத்தில் உயர்சாதி பார்ப்பனர். அரசியலில் குழப்பவாதி. வரலாற்றில் ஆதிக்க ஒடுக்குமுறை பிரிவு. அரசியலமைப்புச் சட்டப்படி இந்து.

Leave a Reply