மார்பகப்புற்றும் அதன் மீளுருவாக்கமும்

Spread the love

மார்பகப்புற்றும் அதன் மீளுருவாக்கமும்!!
(Breast Cancer Metastasis or Recurrence)

புற்றுக்கு மேலே இருக்கும் துளைகளைக் குறிக்க, புற்றுக்கண் என்றொரு அழகான சொல் நெடுங்காலம் தொட்டு தமிழர் வழக்கில் உண்டு. புற்றை, அதன் அடிப்பாகம் வரை அழிக்காமல், கண்ணுக்குத் தெரியும் மண்கூடுகளை மட்டும் எத்தனை முறை இடித்து அழித்தாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டேயிருக்கும். புற்றுநோயும் அப்படித்தான்…. புற்றுநோயின் வேரணுக்களை அழிக்காமல், புற்றுசெல் என்று அறிந்தவற்றை மட்டும் அழித்தால் அது மீள் வளர்ச்சியுற்று உயிரைக் குடித்துவிடும்.

இந்த மீள்வளர்ச்சியை ஆங்கிலத்தில், Recurrence என்கிறார்கள். 2015 கணக்கெடுப்பின்படி UK வில் மட்டும் 55 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதில் 22% பேர் அதாவது 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த புற்று மீள்வளர்ச்சியால் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோயின் முதல் நிலையிலேயே தகுந்த மருத்துவம் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்கள். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மாறியவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருப்பது சற்று நம்பிக்கையைத் தருகிறது.

இதுவரைக்கும், ஏறத்தாழ 200 வகையான புற்றணுக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்திலும் (புகைப்பழக்கத்தால் அதிகம்), மார்பகப்புற்று (மரபியல், சூழல், உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை என்று பல காரணிகள் சொல்லப்பட்டாலும் இன்னகாரணிதான் மார்பகப்புற்றை உருவாக்குகிறது என்று கண்டறியப்படவில்லை) இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. ஏற்கனவே, மார்பகப்புற்று பற்றி பார்த்தோம் என்பதால் இந்தப் பதிவில் அதன் மீளுருவாக்கம் பற்றித் தெரிந்து கொள்வோம்.

மார்பகப்புற்று என்பது ஒரேயொரு வகையான நோய் அல்ல. கட்டி உருவாகும் இடத்தை, திசுவை, அணுவை, வளர்வேகத்தைப் பொறுத்து மார்பகப்புற்று வகைப்படுத்தப் படுகிறது. எனக்குத்தெரிந்து ஐந்து வகையான மார்பகப்புற்றணுக்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. எல்லாப் புற்றணுக்களையும் நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. மார்பகப்புற்று வந்து முதலிரண்டு நிலைகளில் இருப்பது உறுதியானால், குணமாக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. மூன்றாம் அல்லது நான்காம் நிலை உறுதிப்படுத்தப் பட்டவர்களும் மீண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், எண்ணிக்கை குறைவே.

மூன்றாம்-நான்காம் நிலைகளில் புற்றணுக்கள் இருந்தால் குணப்படுத்துவது எளிதில்லை ஏன்?

மார்பகத்தின் ஒருவகை நல்ல திசுக்களை MCF10 என்கிறார்கள். இது ஒருநாளைக்கு ஒன்று பத்தாகப் பெருகும். ஆனால், அதுவே MCF7 எனப்படும் புற்றணுக்களாக மாறிவிட்டால், ஒருநாளைக்குப் பத்தாகப் பல்க வேண்டியது பத்தாயிரமாக உருவாகும் ஆகவே தான் இதை, “புற்று” என்கிறோம். (MCF -Michigan Cancer Foundation இதைக் கண்டறிந்ததால் இப்பெயர் வந்தது)

இவ்வாறு பல்கிப்பெருகும் வேகத்தைக் கொண்டு 1-4 நிலைகளாகப் பகுத்தறியப் படுகிறது. ஒன்று ஆயிரமாகி, இலட்சமாகிக் கோடிகளாக உருவெடுக்கும் போது மார்பகம் போதுவதில்லை. எனவே, மார்பகத்துக்கு நேரடித்தொடர்பில் இருக்கும் எலும்புகளை நோக்கி வளர்கிறது. மார்பில் சுரக்கும் பாலில் சுண்ணாம்பு இருப்பதும் எலும்புகள் அனைத்தும் சுண்ணாம்புப் பாசுபேட்டுகளாக இருப்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆகவேதான், நேரடியாக மார்பகப்புற்று எலும்பைச் சென்றடைந்து எலும்புச்செல்களைச் சிதைத்து எலும்புகளின் மீதும் புற்று வளரத்தொடங்குகிறது. இதற்கு, direct metastasis அல்லது phosphate dependent rapid cell growth என்கிறது புற்றுநோயியல் (oncology).

மார்பகப்புற்று வந்தபிறகு துன்புறுவதைவிட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, நல்ல உணவுப்பழக்கங்களைப் பின்பற்றி வருமுன் காத்துக்கொள்ளுதல் மட்டுமே சிறந்த வழி. ஒவ்வொரு ஆணும் தம் வீட்டிலிருக்கும் பெண்களிடம் மார்பகப்புற்று பற்றியும், வாரத்திற்கு ஒருமுறையாவது, வீட்டிலேயே சோதனை செய்துகொள்ள அறிவுறுத்துங்கள்.

குறிப்பாக, மாதவிடாய் நின்றுவிட்டவர்களும், 35-50 வயதுள்ள அனைவரும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம். 70 வயதுக்கு மேற்பட்ட இங்கிலாந்து பெண்களுக்கு, வயதைக் காரணம் காட்டி சிகிச்சை மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. வீட்டில் அம்மாவைத் தவிர பெண்கள் இல்லாத வீடுகளில் இருக்கும் ஆண்கள், அம்மாவிடம் இதுபற்றிப் பேசி அறிவுறுத்துங்கள்.

இன்னும் தொடர்வேன்…..

செ. அன்புச்செல்வன்
01/02/2019