மாடு என்றால் செல்வம்

Spread the love

வணக்கம் நண்பர்களே!
மாடு என்றால் செல்வம் என்று பொருள்! திருவள்ளுவர் என்ன பொருளில் மாடு என்ற சொல்லைக் கையாண்டார் என்பது தமிழ் படித்த சமூகத்திற்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இல்லாத, மேல் சட்டை அணியாத, திருமணம் போன்ற விழாக் காலங்களில் மட்டுமே வெள்ளை வேட்டி அணிந்த, மற்ற நாட்களில் கோவணம் அணிந்து காட்டு வேலை செய்த என் வேளாண் குடிப் பாட்டன்மார் மாடுகளை எப்படிக் கையாண்டார்கள் என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அவர்கள் வாழ்வில் மாடுகள் எல்லாமாக இருந்தன. அரிசி உணவு எங்கள் இளமைக் காலத்தில் எங்களுக்கு எட்டாக் கனியே! மோர் மட்டுமே என் இளமையில் முக்கிய உணவு. மோர் ஊற்றிய கம்மஞ்சோறு, சோளச்சோறு, ராகிக் களி, அம்பிலி எனப்படும் சோளக்கூழ் என்று மெனு மாறும். ஆனால் மோர் இருந்தால் மட்டுமே இவை உள்ளே போகும். தினமும் பருப்பு மட்டுமே. பருப்பைக் கண்டால் வாந்தியே வரும். அப்போது என்னை உயிருடன் வைத்திருந்தது இந்த மோர் மட்டுமே.

பெண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதென்றால் சொல்லிவிட்டுப் போக மாட்டார்கள். அழுக்கு வேட்டியுடன் ஆண்கள் மட்டுமே மாடு பார்க்க வந்தோம் என்று சொல்லிக் கொண்டு கட்டை வண்டியில் வருவார்கள். நிச்சயதார்த்தம் நடத்த பெண்கள் செல்ல மாட்டார்கள். திருமணத்தன்று தான் பெண்கள் மருமகளைப் பார்க்க முடியும். அது பையனைப் பெற்ற தாயாகவே இருந்தாலும் சரி!

எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் தெரியுமா!
ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ இந்தப் பெரியவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலும் ஒப்பனை செய்து வீட்டில் உட்கார்ந்திருந்தால் தேர்வாக மாட்டார்கள். வயல்களில் உழைக்கும் அல்லது வீட்டில் சமைத்து கொண்டோ மாடு எருமைகளைக் கவனித்துக் கொண்டோ இருந்தால் உடனடியாக தேர்வாகி விடுவர்.

அந்தத் தோட்டங்களில் எவ்வளவு பெரிய குப்பைக் குழி இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டே அவர்களது செல்வச் செழிப்பு தீர்மானிக்கப் பட்டது. பெரிய குப்பைக் குழி என்றால் அதிக வண்டி மாடுகள், உழவு மாடுகள், கறவை மாடுகள் என்று நிச்சயித்தனர்.

ஒரு வீட்டில் திருமணம் நிச்சயம் ஆகிறது. எப்போது திருமணத்தை நடத்துவது? வைத்த வெள்ளாமை வீடு வந்து சேர வேண்டும். வீட்டில் பருப்பு, நெய் நிறைய இருக்க வேண்டும். முக்கியமாக மாட்டுக்குத் தட்டுப் போர் பெரிய அளவில் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் நடைபெறும் திருமண நிகழ்வில் கிராமமே பங்கெடுக்கும். மூன்று வேளையும் அரிசிச் சோறு கிடைக்குமே!

வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து தங்குவார்கள். திருமண வேலைகள் அனைத்தும் செய்வார்கள். சமையலுக்கோ மற்ற எந்த வேலைக்கும் ஆட்கள் கிடையாது. பாத்திரங்கள் கூட வாடகைக்கு எடுக்க மாட்டார்கள். என் தாத்தா வாங்கித் தந்த பெரிய காசி அண்டா மற்றும் தேக்குகள் இன்னும் எங்கள் வீட்டில் உள்ளன. ஆண்களும் அப்போது மட்டும் சமையலில் உதவி செய்வார்கள். இந்த வண்டி எருதுகளுக்குத் தட்டு வேண்டும் அல்லவா? ஆகவே மணப்பெண் வீட்டில் மட்டும் அல்ல. அந்தக் கிராமத்தில் இருக்கும் அனைவர் வீட்டிலும் எருதுகள் கட்டப்படும். தீவனம் தர வேண்டும். இல்லையானால் அது கௌரவத்திற்கு இழுக்காகக் கருதப்படும்.

குப்பைக்குழிகளும் தட்டுப் போர்களும் திருமணங்களை நிச்சயித்தன என்பதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை தானே! எருதுகள் எங்கள் தோழர்கள்! விழாக் காலங்களில் நாங்கள் மட்டும் புதுச் சட்டை போட மாட்டோம். அவைகளுக்கும் குளிப்பாட்டி சலங்கைகள் கட்டிப் பயணத்துக்குத் தயார் படுத்துவோம்.

திருமணம் நடந்து முடிந்த பின்னர் ஒரு கழிவு தோட்டத்தில் இருக்காது. எருதுகள் கட்டியதால் சாணி மூத்திரம் என்று அடுத்த பருவத்தில் பூமி நன்றாக விளையும். இப்போது ஒரு திருமணம் முடிந்தால் எத்தனை கழிவுகள்! தண்ணீர் பாட்டில்கள், ஷாம்பு கவர்கள், பீடாவுக்குக் கூட ஒரு பிளாஸ்டிக் கவர்! கலந்து கொள்ளத் துளியும் மனம் விரும்புவதில்லை. பெண்களும் ஆண்களும் அருவருக்கத்தக்க வகையில் ஒப்பனை என்ன! செயற்கை வாசமூட்டிகளின் கலவையான துர்நாற்றம் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். இதில் வயிறுகள் மட்டும் கவனிக்கப் படாமல் பிதுங்கிக் கொண்டு! உண்டவுடன் மயக்கத்தை வரவழைக்கும் உணவுகள் வேறு பயமுறுத்தும். எல்லாவற்றிலும் அளவற்ற எண்ணெய் அல்லது நெய், செயற்கை நிறமூட்டிகள். உடல்நலம் குறித்த சிந்தனை காற்றில் பறந்து விடும்! எப்போதடா மண்டபத்தை விட்டு ஓடிப் போகலாம் என்று உள்ளது!

இன்னும் எழுத ஆசைதான். பதிவு நீண்டு விட்டது.

நன்றி!

வணக்கம் நண்பர்களே!மாடு என்றால் செல்வம் என்று பொருள்! திருவள்ளுவர் என்ன பொருளில் மாடு என்ற சொல்லைக் கையாண்டார் என்பது…

Posted by Saroja Kumar on Sunday, 2 June 2019

Leave a Reply