மருத்துவமனையின் நோய்க்கு சிகிச்சை

Spread the love

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையின் அலட்சியமும் அவலட்சணமும்

திருப்பூர்- பெருமாநல்லூர் சாலையில், போயம்பாளையம் பிரிவு பகுதியில் வசிக்கும் #முருகன் என்பவர் பல்லகவுண்டம்பாளையம் சென்றுவிட்டு திரும்பும் வழியில் செங்கப்பள்ளி அருகில் விபத்தில் சிக்கியுள்ளார்.

கை மற்றும் தலைப்பகுதியில் பலத்த அடிபட்டவருக்கு ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், அங்கு அவருக்கு எந்த வித சிகிச்சையும் அளிக்காமல், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக படுக்கையும் கொடுக்காமல், தரையில் உட்கார வைத்து உள்ளனர். இது பற்றி அவரது மகனும், CPIM கட்சி தோழருமான ரமேஷ், எனக்கு தகவல் தெரிவித்தார். நானும், கட்சிக் கிளைச் செயலாளர் தோழர் மகேஷ்வரனும் மருத்துவமனைக்கு சென்று, நடந்தவற்றை விசாரித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது, வார்டில் பணியில் இருந்த ஒருவர், அடிபட்டவரிடம் “இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் ஏன் முடிவு எடுக்காமல் இருக்கிறீர்கள்” என கடுமையாக, மிரட்டும் தொனியில் பேசினார்.

அப்போது நாங்கள், தலையிட்டு அவர் ” வைத்தியம் பார்க்க வந்திருக்கிறார். அவர் என்ன முடிவெடுப்பார். அவருக்குப் படுக்கை கொடுத்து, சிகிச்சை கொடுங்கள்” என்று சொன்னோம். அதற்கு அவர்,” படுக்கை காலி இல்லை வெளியே சென்று பார்த்து கொள்ளுங்கள்” என்றார். அதற்கு நாங்கள், “சரி. டாக்டர் சொல்லட்டும். அவரிடம் தகவல் சொல்லுங்கள்” என்றோம்.

“டாக்டர் வரமாட்டார், நீங்கள் சென்று பாருங்கள்” என்றார். பிறகு, அடிபட்டவரையும் அழைத்துக் கொண்டு டாக்டரைச் சந்தித்து பேசினோம். அவர் சொன்னது, “ஞாயிற்றுக் கிழமை ஆதலால், படுக்கை காலி இல்லை. தரையில் படுக்க அனுமதிக்கிறோம். நாளை படுக்கை காலியானால் மாற்றி கொடுக்குறோம்” என்றார்.” சரி, தற்போது அவருக்கு சிகிச்சையாவது கொடுங்கள்” என்றோம். “எல்லாமே நாளைக்கு 11 மணிக்குத்தான் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து சிகிச்சை செய்ய முடியும். வலி ஊசி மட்டும் தற்போது போடுகிறோம்” என்றார். இதைக் கேட்ட அவர் குடும்பத்தினர்,” தலையில் அடிபட்டுள்ளதால், உடனடியாக வெளியில் சென்று பார்த்து கொள்கிறோம். டிஸ்சார்ஜ் எழுதி கொடுங்கள்” என்றனர்.
இதுதான், திருப்பூர் அரசு மாவட்ட மருத்துவமனையின் நிலைமை.

இப்படி, நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விபத்தில் சிக்கிய 4 பேர், ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி, அவசர சிகிச்சைப் பிரிவு வராந்தாவில், வீல்சேரில் ஏன் என்று கேட்க நாதியற்று உட்கார வைக்கப்பட்டிருந்தது, பார்க்கவே கோரமாக இருந்தது.

மக்கள், மாவட்டம் முழுவதும் இருந்து நம்பிக்கையோடு, அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டுமே இருந்தது, மக்கள் நலனைப் பாதுகாப்பதில் இருந்து அரசு ஒதுங்கி இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

முதலுதவி சிகிச்சைப் பிரிவில், வராந்தாவில் தனியார் மருத்துவமனை ஏஜென்டுகள், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வழக்குரைஞர்கள் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம், குறைந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என பேரம் பேசுகின்றனர்.

எங்களையும் ஒரு டிரைவர், புதிய ஏஜென்டுகள் என நினைத்திருப்பாரோ என்னவோ, மிரட்டும் தொனியில் போசினார். நான் அங்கு பணியில் இருந்த பெண் காவலரிடம் செல்லி அவரை வெளியேற்றினேன்.

ஒன்று மட்டும் புரிகிறது.

நோயாளிக்கு படுக்கை இல்லை.
உடனடி சிகிச்சை இல்லை.
பிறகு நோயாளிகள் என்ன செய்வார்கள்?
தனியார் மருத்துவமனையை நோக்கி துரத்தும் உத்திதான், இது.

இதில் எல்லோரும் கூட்டுக் களவாணிகள் என்பது உறுதியாகிறது. நான் கூறிய சம்பவங்கள், நாங்கள் அங்கிருந்த ஒரு மணி நேரத்தில் பார்த்தது மட்டும் தான்.

நீண்ட போராட்டமே, மருத்துவமனையின் நோய்க்கு சிகிச்சையாக இருக்கும்.

பதிவு :
#தோழர்_எம்.என்.நடராஜ், CPIM, திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்.