FEATUREDLatestNature

மயில்

Spread the love

#புதுவையில் மயிலை கண்டேன் என்றால் பலரும் சிரிப்பார்கள்

ஆனால் இரவு நேரங்களில் எனது வீட்டின் அருகாமையில் உள்ள தோப்புகளில் மயிலின் அகவல் சப்த்தம் அபாய அலாரமாய் கேட்டுக்கொண்டே இருக்கும்

இங்கே மயில்கள் உள்ளது என்பதை மட்டும் உள்ளம் உணர்த்திக் கொண்டே இருக்கும், என்றாவது ஒரு நாள் எப்படியாவது அவைகளை புகைப்படங்கள் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையும் அவ்வப்போது அகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்சிகளே கிடைக்காத விரக்தியில் வண்டில் மெதுவாய் ஒரு ஒற்றை அடி பாதையில் சென்றுக் கொண்டிருந்த சமயம்

எங்கிருந்தோ அகவுகின்ற ஒரு மயிலின் சப்த்தம் காலை பனியோடு சேர்ந்து மெல்லிய பாடலாய் இரு செவிகளிலும் வந்து இசை விருந்தளித்தது

அகவும் இடத்தை நோக்கி வேகமாய் விரைந்தது வாகண சக்கரங்கள், வாகனத்தை சத்தமில்லாமல் சென்று நிறுத்திவிட்டு வேலி செடிகளை மெலிதாய் ஒதுக்கி பார்த்தபோது

ஒரு விளை நிலத்தில் நான்கு மயில்கள் தங்களுக்கே இவ்வுலகம் சொந்தம் என்பது போல் உல்லாசமாய் உலாவி கொண்டிருந்தது

பார்த்ததும் கண்கள் முழுவதும் பரவசம், கண்களை சற்று நேரம் நம்பமுடியவில்லை

ஞாயிற்றுக்கிழமை அசதியில் எவருடைய நடமாட்டமும் இல்லாததால் ஒன்றையொன்று கொத்தி கொஞ்சிக் கொண்டு ஆனந்தமாய் இடையூறுகள் இல்லாமல் அழகாய் பறந்து திரிந்து நடந்துக் கொண்டிருந்தன

சோளம் அறுவடை செய்து சற்று நாட்களே ஆகிருந்த நிலம் என்பதால் மண்ணில் உதிர்ந்த சோளங்களை மன்னர் போல அவைகள் ருசித்து ரசித்து அதிகாலை உணவு வேட்டையாடி கொண்டிருந்தன

மெல்லிய பனி பொழிவில் மூன்று ஒய்யாரிகளோடு ஒரு ஆண் மயில் ஒய்யாரமாக மன்னரை போன்று அங்கே சுற்றி வருவதை பார்த்த போது புவியின் அந்தப்புரமாகவே அவ்விடம் காட்சியளித்தது

மயில் வரும் மண் மகத்துவம் பெறும்🌳

மயில்கள் விவசாயத்தின் தோழமைகள்🌾

அங்கே நிலத்தை ஒட்டியுள்ள வீடுகள் இன்னும் மூன்றே ஆண்டுகளில் அவ்விளை நிலங்களை ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்து

மறுபடியும் இவைகளை நம்மால் இங்கு காண முடியுமா? கிடைத்த வாய்ப்பை இழந்துவிட கூடாதென்று ஆதங்கத்தோடு அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது

உயிரியல் பூங்காவில் எத்தனையோ முறை காட்சிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைத்தும் மயிலை நான் இதுவரை காட்சிப்படுத்தியதில்லை, மயிலை மட்டுமல்ல மற்ற மிருகங்களையும் உட்பட

அடைத்து வைத்து காட்சி படுத்துபட்டிருக்கும் மிருகங்களை காட்சிபடுத்துவதில் எந்தவொரு உயிரோட்டமும் இல்லை,

அபபடியே சிலர் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட மிருகங்களை சமயங்களில் புகைப்படங்களாக காட்டும் போது

எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கெட்ட நேரம்? இங்கே கைதிகளாக வந்து மாட்டிக் கொண்டோம் என்று பரிதவிப்போடு பார்க்கும் பாவமான முகபாவனைகள் மனதை சஞ்சலம் செய்யும்

எனது ஊரில் எனது மண்ணில், எனது கிராமத்தில் எனக்கு பிடித்த ஒரு பறவையை முதன் முதலில் ஆத்மார்த்தமாக சுதந்திரமாக திரியவிட்டு காட்சிப்படுத்துகிறேன் என்றபோது

மனம் முழுவதும் மகிழ்ந்து இது என்னுடைய சொந்த மயில் என்பதை போலவே ஒரு உணர்வையும், உரிமையையும் அந்த சூழ்நிலை இனிதாய் ஏற்படுத்தி என் இதயத்தை பரவசப்படுத்தியது

இது புகைப்படமாகவே இருந்தாலும் இதற்க்கு பெயர் வைத்து தீனி வைக்காதது மட்டுமே மிச்சம்

இன்னும் பதினைந்து வருடங்கள் கழித்து இப்புகைப்படத்தோடு என் நினைவுகள் ஓரமாய் அமர்ந்து தனிமையில் அசைபோடும் அற்புத பொக்கிஷமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

புலரா காலையில் மனதை இதமாய் வருடி சென்ற மயில் தோகைகள்.

-அருண்🌷

Leave a Reply