மனிதர்களின் பாதுகாப்பு வேலி அறுபடுகிறது

Spread the love

மனிதர்களின் பாதுகாப்பு வேலி அறுபடுகிறது!
– நரேஷ்

Elamurugan Sekar அவர்கள் பதிவில் இருந்து!

உலக மக்களுக்கு அவர்கள் செய்யும் தவறுகளை எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. உலகின் வளமான நிலப்பகுதியில் ஐந்தில் ஒரு பங்கு கடந்த 15 ஆண்டுகளுக்குள் மட்டும் சீரழிந்திருக்கிறது!

– பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐநா மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து (United Nation’s Convention to Combat Desertification – UNCCD)

ஒரு தலைமுறையையே வளர்த்தெடுக்கக்கூடிய அளவுக்கான இயற்கை வளத்தை வெறும் நுகர்வுக்காகவும் பொருளாதாரத்துக்காகவும் நாம் சீரழித்திருக்கிறோம். அப்படியென்றால் இயற்கைச் சீற்றங்களின் வேகத்தையும் அளவையும் நாம் அதிகப்படுத்தியிருக்கிறோம் என்றுதான் பொருள். இது மிகவும் நுணுக்கமான இணைவு. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சீற்றங்கள் என்பது புவியின் இயல்பு. மனிதர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் புயல் பெருமழை போன்றவை புவியில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். அதன் தாக்கத்தை உள்வாங்குவதும் குறைப்பதும் இயற்கை வளங்கள்தான். சொல்லப்போனால், இயற்கைச் சீற்றங்கள் வருவதே உயிர்களின் தேவைக்காகத்தான். புயல் வீசுவதும் பெருமழை பெய்வதும் அடுத்தடுத்த வருடங்களில் வரவிருக்கும் பருவநிலையை எதிர்கொள்ளும் ஆதாரப் பொருள்களை வழங்கத்தான்.

உதாரணமாக சமீபத்திய கேரள வெள்ளத்தையும், கஜா புயலையும் எடுத்துக்கொள்வோம். டெல்டா பகுதிகளில் பொருளாதாரத்துக்காக வளர்க்கப்பட்ட தென்னை மரங்களைத் தவிர வேறெந்த நிலத்தின் ஆதி மரங்களும் இல்லை. கடற்கரையோரங்களில் அரணாக நின்றிருந்த பனை மரங்களும் சொற்பப் பணத்துக்காக செங்கல் சூளைகளுக்கு விற்கப்பட்டன. விறகுக்காக வெட்டப்பட்டன. வீசிய புயலின் தாக்கத்தைத் தடுக்கவும் உள்வாங்கவும் இயற்கை அரண்கள் இல்லாததே இவ்வளவு பொருளாதார இழப்புகளுக்கும் காரணம் என்பது நாம் உணர வேண்டிய பாடம்.

கேரள வெள்ளத்தை எடுத்துக்கொண்டால், பெய்த மழையின் அளவு சராசரியைவிடச் சற்று அதிகமானதுதான். ஆனால், அவ்வளவு பெரிய வெள்ளம் வந்ததற்கு மழை மட்டுமே காரணம் அல்ல என்பதை இந்திய வானியல் ஆய்வு மையமே ஒப்புக்கொண்டது. கேரள மாநில மலைகளின் பெரும்பாலானவை தேயிலைத் தோட்டங்களுக்காகவும் ஏலக்காய் எஸ்டேட்களுக்காகவும் மொட்டையடிக்கப்பட்டன. பெய்யும் மழையைப் பிடித்துவைத்து வடித்துவிடும் வகையில்தான் மலைகளின் வடிவமைப்பு இருக்கும். உச்சியில் புல்வெளிகள் வழியாகவும் சரிவுகளில் பெருமரங்கள் வழியாகவும் சமவெளிப் பகுதிகளில் ஊற்றுகள் வழியாகவும் பெய்யும் மழைநீரை உள்வாங்கித் தக்கவைத்துத் திரும்பத் தரும் இயற்கைக் கட்டமைப்பு இந்த மலைகளில் இல்லை. பொருளாதாரம் தரக்கூடிய கட்டமைப்புகளை மட்டும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் மனிதர்கள். இதன் வெளிப்படையான விளைவுதான் பெருவெள்ளமும் பெருத்த சேதமும்.

இயற்கை வளங்கள் மிக வேகமாகக் காணாமல் போவதென்பது, மனிதர்களின் பாதுகாப்பு வேலி அதிவேகமாக அறுபடுகிறது என்பதைத்தான் உணர்த்துகிறது. இங்கே காட்டு விலங்குகள் குறித்துக் கவலைப்படும் நேரமெல்லாம் கடந்துவிட்டது. ஏனென்றால் காட்டு உயிர்களின் எண்ணிக்கை 89 சதவிகிதம் குறைந்துவிட்டது. மலைகள் அழிக்கப்பட்டதால் விலங்குகள் அழிந்தன. விலங்குகள் இல்லாததால் இனி மலைகளை மீட்டெடுக்கவும் முடியாது. ஏனென்றால் காடுகளின் விதைப் பரவலைச் சீர்படுத்திப் பராமரிப்பது காட்டு விலங்குகளும் பறவையினங்களும்தான்.

காடுகளில் ஒவ்வொரு நாளும் உழுதல், பாத்தி அமைத்தல், விதைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் ஆகிய செயல்கள் நடந்துகொண்டே இருக்கும். இயற்கையின் மிகவும் ஆச்சரியமான செயல்பாடு இது. ஒவ்வொரு நாளும் காட்டுப்பன்றிகள் நிலத்தை உழுதுகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பறவைகளும் இன்ன பிற தாவர உண்ணிகளும் விதைகளை விதைத்துக்கொண்டே இருக்கின்றன. யானைகள், காட்டெருமைகள் போன்ற பேருயிரிகள் போகிறபோக்கில் விதைகளை நிலத்தினுள் அழுத்திப் பாத்தி அமைத்துச் செல்கின்றன. ஏற்கெனவே ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்கள், மழைக்காலத்தில் பிடித்துவைத்த நீரை நிலத்தினுள் கசியவிடும்போது விதைகள் துளிர்க்கின்றன. ஒவ்வொரு நாளும் காடுகள் உணவாகிக் கரைகின்றன. உணவளித்ததின் விளைவாக ஒவ்வொரு நாளும் காடுகள் விரிகின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தச் சங்கிலி கொடூரமாக அறுக்கப்பட்டது. ஐந்து கோடி வருடங்களுக்கும் மேலாக நிலையாக இருந்த வளங்களை வெறும் 5,000 நாட்களில் நாம் அழித்திருக்கிறோம். இவற்றை மீட்டுருவாக்கம் செய்ய மனிதர்களால் நிச்சயம் முடியாது. இயற்கை இயல்பாக விரிந்தால்தான் உண்டு. அதற்குக் குறைந்தது 100 ஆண்டுகளாவது தேவைப்படும்.

எனவே, இனி வரும் 100 ஆண்டுகள் நாம் எதுவும் செய்யாமல் இயற்கையை இயல்பாக இருக்கவிட்டால் தப்பிப் பிழைப்பதற்கான குறைந்தபட்ச ஆதாரம் உறுதிசெய்யப்படும். அப்படி இல்லையேல் அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய பேரழிவுகளைச் சந்திப்போம். அடுத்த 100 ஆண்டுகளில் மனித இனத்தின் பெரும்பகுதி துடைத்தழிக்கப்பட்டிருக்கும்.

இது நடக்கக்கூடும் என்னும் நிகழ்தகவு (Probability) அல்ல. நடந்தே தீரும் என்னும் யதார்த்த உண்மை (Fact).

Leave a Reply