மனிதக் கதை – மனிதன் உருவான வரலாறு

Spread the love
“சர்வசக்தி படைத்த கடவுள்தான் உலகை படைத்தார். அவரே இதனை இயக்குபவர். சிருஷ்டி என்னும் இந்த அற்புதம் கடவுளின் அபாரமான தயவின் விளைவே.”
இதைத்தான் எல்லா மதங்களும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கின்றன.
“மனிதக் கதை” என்கிற இந்த நூல் இவற்றையெல்லாம் ஆதாரத்துடன் தவிடுபொடியாக்குகிறது.
மனித குல வரலாறு குறித்து பல நூல்கள் வந்திருந்தாலும் பலவற்றை நாம் படித்திருந்தாலும் இந்த நூலில் உள்ள தகவல்கள் விரிவாகவும் ஆழமானதாகவும் நுணுக்கமாகவும் இடம் பெற்றுள்ளன.
பிரபஞ்ச ரகசியங்களை விளக்குவது இயலாத நிலையில் நமது முன்னோர்கள் கடவுள் மீது பாரத்தை சுமத்தி நழுவி வந்தனர்.
மனித முயற்சிகளை நிராகரித்து துச்சமானதாக ஆன்மீக வாதம் கருதுகிறது.
ஆனால் விலங்கிலிருந்து மனித இனம் தோன்றி இவ்வளவு வளர்ச்சி பெற்று இருப்பதற்கு அவனின் உழைப்புதான் பிரதான காரணமாக இருக்கிறது.
அவன் சந்தித்த சிக்கல்களும் தேவைகளும்தான் வளர்ச்சியை நோக்கியும் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கியும் அவனை நகர்த்தி இருக்கிறது.
மார்க்சியத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமான “பொருள் முதல் வாதம்”தான் இவ்வளவு சமூக வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறது.
பூமியின் தோற்றத்தோடு இந்த நூல் துவங்குகிறது.
அதைத்தொடர்ந்து உயிர்களின் தோற்றம் பல உயிரினங்களுக்கு பிறகு மனித இனத்தின் தோற்றம் என ஆதாரங்களோடு பேசுகிறது.
நவீன அறிவியலின் படி பூமியின் வயது 460 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
மனிதனின் தோற்ற காலம் 10 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இல்லை. பூமியின் வயது ஓர் ஆண்டு என்று கணக்கிட்டால் மனிதன் தோன்றி இரண்டேகால் மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கும்.
இந்த லட்சக்கணக்கான ஆண்டுகளை எப்படி கணக்கிட்டார்கள்?
20 ஆம் நூற்றாண்டில் ரேடியோ ஆக்டிவ் கதிர்கள் என்ற முறையில் தான் இவற்றை அளவிட்டார்கள்.
சில ஆயிரம் ஆண்டு காலத்தை அளக்க ரேடியோ கார்பன் முறையையும் விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
இதன் அடிப்படையில் பூமியின் மீதுள்ள பண்டைய கற்களின் வயது கண்டறியப்பட்டது.
இதன்மூலம் இமயமலைகள் சுமார் 4 கோடி ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் பண்டைய மலைகளில் வயது 300 கோடி ஆண்டுகள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளன.
இதுபோன்ற தகவல்கள் விரிவாக இந்நூலில் ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சூரியனில் மோதி வெடிப்புற்று உருவான பூமி என்கிற கிரகம்
முதலில் நெருப்புக் கோளமாக இருந்தது. காலப்போக்கில் அது குளிர்ந்து அதன் மேல் அடுக்கு கெட்டிப்பட்டது.
குறைந்தபட்சம் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேல் தளம் இன்றைய வடிவில் இருந்தது என சொல்லப்படுகிறது.
முதலில் நீரில் தோன்றிய ஒரு செல் உயிரினமான அமீபாவில் தொடங்கி பல செல் உயிர்கள் தோன்றின.
புழு, பட்டாம்பூச்சி, சிலந்தி பூச்சிகள் ஆக்டோபஸ் போன்ற எலும்புகள் இல்லாத உயிரினங்கள் தோன்றின. இவற்றுக்கு சுவாசப் பைகள் ஒலி எழுப்பும் குரல் வளையும் இல்லை.
இதைத்தொடர்ந்து பரிணாம வளர்ச்சியில் முதுகெலும்புடன் ஆன மீன்கள், தவளைகள் முதலிய ஊர்வன தோன்றின.
இவற்றிலிருந்து ஒரு பிரிவு பறவையினம் ஆனது. அதைத்தொடர்ந்து பாலூட்டி உயிரினங்கள் தோன்றின.
எந்த உயிரும் தன் சுற்றுசூழலில் சீராகவும் சுகமாகவும் வாழ முயற்சி செய்யும். சூழ்நிலையில் மாறும்போது புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள அது முயற்சி செய்யும். அந்த சூழ்நிலையை கடந்து வருவதற்கு தேவையான மாற்றங்கள் பின் தலைமுறைக்கு வந்துசேரும்.
அதன் அடிப்படையிலேயே உயிரினங்கள் வளர்ச்சி இருந்தன.
சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளாத பல இனங்கள் அழிந்து போயின.
ஆஸ்ட்ரோலோபித்திகஸ் என்று அழைக்கப்பட்ட குரங்கு இனத்தில் இருந்து மனிதன் இனம் தோன்றியது கண்டறியப்பட்டது.
இதற்காக உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். ஜாவா ஆதிமனிதன், பீஜிங் ஆதிமனிதன், நியாண்டர்தால் மனிதன், சிம்பன்சி, கொரில்லா போன்றவற்றின் மண்டையோடுகளையும் டிஎன்ஏஐயும் ஆராய்ச்சி செய்தனர்.
இறுதியில் ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்கண்ட மனித இனம் தோன்றியது கண்டறியப்பட்டது.
5, 6 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் தோன்றினான். அவன் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு ஐரோப்பா ஆசியா கண்டங்களில் விரிவடைந்தான்.
இந்த ஆதி மனிதன் கற்களையும் நெருப்பையும் பயன்படுத்த முதலில் கற்றுக் கொண்டான். உணவு சேகரிப்புக்காக கல் கருவிகளையும், மரக் கிளைகளையும் பயன்படுத்தினான்.
கொடிய மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நெருப்பை பயன்படுத்தினான்.
விலங்குகளின் மாமிசத்தை பச்சையாக தின்பதை விட நெருப்பில் விழுந்த மாமிசத்தை தின்னுவது அவனுக்கு எளிதாக இருந்தது. எனவே மாமிசத்தை நெருப்பில் சுட்டு தின்னும் பழக்கத்தை கண்டறிந்தான்.
ஆதி மனிதன் காலத்திலிருந்து சிறு சிறு குழுக்கள் உலகம் முழுவதும் பரவின வெவ்வேறு பிரதேசங்களில் வசித்துவந்த மனித சமூகங்களின் உடல் வெளி குணாம்சங்கள் வெவ்வேறு வடிவில் இருந்தன.
மனிதப் பண்பாட்டின் லட்சக்கணக்கான ஆண்டுகள் பகுதியை கற்காலம் என்று அழைக்கின்றனர்.
கத்திக்கு ஒரு பிடியை மாட்டுவது நமக்கு மிக சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இந்த யோசனை வருவதற்கு மனிதனுக்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆயின. கல் கருவிக்கு பிறகு வில் அம்பை மனிதன் பயன்படுத்தினான்.
உணவுக்காக அன்றைய மனிதன் முழுமையாக இயற்கையின் தயவை நம்பியிருந்தான்.
இந்த ஆதி பொதுவுடமை சமூகத்தில் ஆண்கள் பெண்கள் அனைவரும் சமமே. இவர்களின் உறவுகளில் சுதந்திரம் இருந்தது. மொத்தத்தில் அன்றைய சமூகம் தாய்வழி சமூகமாகவே இருந்தது.
இதைத்தொடர்ந்து விவசாய அறிவை பெற்றான் மனிதன். பெண்கள் தான் முதலில் இந்த அறிவை பெற்றனர்.
தானிய விதைகள் நிலத்தில் விழுந்து அதிலிருந்து புல் முளைத்து அதே வகையான தானியங்கள் விளைவதை கண்டறிந்தனர்.
ஆண்கள் வேட்டைக்காக உணவு சேகரிக்க வெளியே சென்றபோது பெண்கள் இந்த அறிவை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் செய்யத் துவங்கினர்.
இதைத்தொடர்ந்து மனித சமூகம் நீராதாரங்களை தேடி அதன் அருகில் வசிக்கத் துவங்கினர்.
இதைத்தொடர்ந்து மனிதன் உலோகங்களை கண்டறிந்தான். முக்கியமாக இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு காடுகளை அழித்து விவசாயம் செய்வது அவனுக்கு சாத்தியமானது.
மண் பாத்திரங்கள் செய்யும் நுட்பத்தையும் பெண்களே முதலில் கண்டறிந்தனர்.
துணிகள் செய்யும் திறமையையும் கண்டறிந்தான். எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ஊசிகளின் உதவியுடன் தோல், மரப்பட்டைகள், இலைகள் ஆகியவற்றை ஆடைகளாக தயார் செய்து அணிந்தான்.
குகைகளில் வாழ்ந்து வந்த மனிதன் பிறகு கம்புகளை நட்டு அவற்றின் மீது விலங்குகளின் தோலைப் போர்த்தி கூரையாக பயன்படுத்தி வசித்தான்.
இதைத்தொடர்ந்து புற்களாலும் கற்களாலும் வீடுகள் அமைத்தான். பிற்காலத்தில் பச்சை மண், செங்கல் களையும் பொருள்களையும் பயன்படுத்தத் தொடங்கினான்.
கால்நடை வளர்ப்பு அவனுக்கு பேருதவியாக இருந்தது.
முதலில் மாமிசத்திற்காகவே மாடுகளை வளர்த்தான். ஆனால் விரைவிலேயே மாடுகளால் சில பயன்கள் இருப்பதை அறிந்தான். தனது முதுகில் இருந்த சுமையை விலங்குகளின் முதுகில் சுமத்துவதற்கு கற்றுக்கொண்டான். விலங்குகளால் வாகனங்களை இழுக்கச் செய்வதையும் கற்றுக் கொண்டான்.
கிமு 4000 ஆண்டுகளில் ஆயுதங்கள் தயார் செய்ய கற்களுக்கு பதிலாக தாமிரம் பயன்படுத்துதல் துவங்கியது.
கல்லுக்கு பதிலாக உலோகம் பயன்பாட்டிற்கு வருவதற்கு மனிதனுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன.
உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி முறைகள் மாறும்போது சமூக அமைப்பும் மாறியது.
உற்பத்தியில் ஈடுபட்டதும் அதன்மூலம் உணவு தேவை பூர்த்தியானதும் உணவை மிச்சப்படுத்தும் நிலையையும் மனிதன் எட்டினான்.
விவசாயத்தை ஒட்டி இதர பணிகளும் தோன்றின.
இதைத் தொடர்ந்து தான் வர்க்க சமூகம் தோன்றியது.
புதிய பொருளாதார அமைப்பினால் சூழ்நிலை மாறத்தொடங்கியது. பூமி கால்நடை சொத்து இவற்றைப் பங்கிடும் அதிகாரம் கண தலைவரிடம் வந்தது.
சமூகத்தில் பெண்களின் இடம் மெல்ல மெல்ல கீழ் இறங்கத் தொடங்கியது.
தாய்வழி முறை அழிந்து தந்தை வழி சமூகமாக மாறியது.
மனித குழுக்களுக்கிடையே ஏற்பட்ட யுத்தங்களில் எதிரிகளை கொல்வதை தவிர்த்து அவர்களை அடிமைகளாக்கி கொண்டான்.
அவர்களை உற்பத்தி பணியில் ஈடுபடுத்தினர். மேலும் அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே பலகீனமான சமூகங்களின் மீது படையெடுக்கத் துவங்கினர்.
உற்பத்திப் பொருள்கள் அதிகமானதால் வர்த்தக வளர்ச்சிக்கு போக்குவரத்து சாதனங்கள், சுமை தாங்கும் மாடுகள், சக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
முன்னேறிவரும் சமூகத்தில் புதிய பிரச்சினைகள் தோன்றின. குறைந்த எண்ணிக்கையிலான செல்வந்தர்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான உழைப்பாளி அடிமைகளுக்கும் இடையே பிரிவினை அமைந்தது.
இவர்களுக்குள் மோதலைத் தவிர்க்க உயர் வர்க்கத்துக்கு பாதுகாப்பு அளிக்க உழைப்பாளிகளை அடக்கி வைக்கும் தேவை ஏற்பட்டது.
தனி சொத்து, விற்பனை, கடன்கள் வியாபார பாதுகாப்பு, திருட்டு போன்றவை பரவின.
இந்தத் தேவைகளைப் தீர்ப்பதற்காக அரசு என்ற அமைப்பு தோன்றியது.
மன்னன் தெய்வாம்சம் இருப்பதாக கருதப்பட்டான்.
தண்டனை, சட்டங்கள் அதிகாரம் செலுத்த துவங்கின.
இந்தக் காலத்துக்கு முன்னதாகவே இயற்கையை வழிபடும் முறை இருந்தது.
உலகின் பல பகுதிகளில் இதேபோல் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
இந்தியாவில் ஆரிய வருகையையொட்டி மனித இனத்தில் வர்ண அமைப்பு தோன்றியது.
செல்வம் பெருகியதால் அடிமை அரசுகள் உள் கலகங்களால் பலவீனப்பட்டு வந்தன. அந்நியப் படையெடுப்பு தொடங்கியது.
அடிமை சமூக அமைப்பு முடிவடைந்து நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை ஆரம்பமானது.
உழைப்பின் மீதும் உற்பத்தியின் மீதும் நிலப்பிரபுக்களுக்குதான் முன்னுரிமை இருந்தது. உற்பத்தியானதும் நிலப்பிரபுக்கள் முதலில் தங்களது பங்கை எடுத்துக் கொண்டனர்.
அடிமை முறை அமைப்பை விட நிலப்பிரபுத்துவ அமைப்பில் மனிதனுக்கு சிறிது சுதந்திரம் இருந்தது.
உற்பத்தி சாதனங்கள் அவனுடைய தாகவே இருக்கும். உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவன் தன்னிடமே வைத்துக் கொள்ளலாம் என்ற முறை இருந்ததால் வளர்ச்சி ஏற்பட்டது.
உலோகங்களை சுத்தப்படுத்துதல் அவற்றின் பயன்பாடு ஏர், கைத்தறிகள் மேம்பாடு, விவசாயம், தோட்டங்கள் கால்நடை வளர்ப்பு பால்வளம், கைத்தொழில்கள், வியாபார வளர்ச்சி ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன.
உயர் வர்க்கங்களிடம் மிகுதியான பணம் சேர்ந்து வந்தது.
முதலாளித்துவ முறை
——-
15வது நூற்றாண்டில் வாஸ்கோடகாமா ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி வந்து இந்தியாவுக்கு போகும் கடல் பாதையை கண்டுபிடித்தார் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்.
அமெரிக்கா கண்டத்தை கொள்ளையடிப்பதற்கு அங்கு காலனி பகுதிகளை ஏற்படுத்துவதற்கு ஐரோப்பியர்கள் படையெடுத்தனர்.
இதிலிருந்துதான் முதலாளித்துவ முறை ஆரம்பமானது.
நிலபிரபுத்துவ முறையில் குத்தகை விவசாயிகள், கைவினைஞர்கள் உள்ளூர் தேவைகளை தீர்க்க வேண்டிய மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர்.
முதலாளிகள் இவர்களை பட்டறைக்கு கொண்டு வந்தனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு பட்டறைகளில் வேலைகளை ஏற்படுத்தினர். பண்ட உற்பத்தி பல மடங்கு அதிகரித்தது. பிற்காலத்தில் கைகளால் செய்யும் வேலைகளை மேலும் வேகமாக செய்வதற்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இயந்திரங்களை இயக்குவதற்கு நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படியாக முதலாளித்துவ உற்பத்தி உலகம் முழுவதும் முன்னேறிச் சென்றது. மிகுதியான செல்வத்துடன் மூலதனம் குவிந்தது.
பின்னால் முதலாளித்துவ முறையின் வெற்றியை அங்கீகரித்து நிலப்பிரபுத்துவ முறை அதனுடன் உடன்படிக்கை செய்து இருக்கும்.
ஐரோப்பிய முதலாளித்துவ சித்தாந்தம் ஆசியாவிலும் இதர கண்டங்களிலும் நுழைந்தது. அந்த கண்டங்களில் பின்தங்கிய நாடுகளை அது தனது வசப்படுத்திக் கொண்டது.
தனது சரக்குகளின் சந்தையாக அந்த நாடுகளை பயன்படுத்தியதுடன் தனது ஆலைக்கு தேவையான மூலப் பொருட்களை கூட அந்த நாடுகள் இருந்தே கொண்டு செல்லத் துவங்கியது.
முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே போட்டி தீவிரமானது.
இவர்களுக்கிடையே காலனி நாடுகளை கைப்பற்றுவதற்கான பயங்கரமான யுத்தங்கள் நடந்தன முதலாளித்துவ முறை ஏகாதிபத்தியமாக உருவாகி விட்டது.
முதலாளித்துவ முறை உற்பத்திக்கு சமூக வடிவம் கொடுத்தது. ஆனால் அதன் உடமை மட்டும் முதலாளி கைகளிலேயே இருந்தது.
முதலாளித்துவ முறையில் சுரண்டல் அதிகரித்தது. முதலாளித்துவ முறையினால் பாதிக்கப்பட்ட இதர இதர வர்க்கத்தினர் தொழிலாளி வர்க்கத்தினர் கூட்டாக மாறி முதலாளித்துவ முறையை அழிக்க செய்யும் எண்ணம் தோன்றியது.
இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகள் இதற்கு சாட்சியாக உள்ளன.
சோசலிசம் பகல்கனவு இல்லை எனும் உண்மையை அவை நிரூபித்தன.
மார்க்சின் கூற்றுப்படி ஆதி பொதுவுடமை சமூகமாக தோன்றிய மனிதகுலம் பல்வேறு முரண்பாடுகளால் மாறிமாறி முதலாளித்துவ சமூக அமைப்பை அடைந்துள்ளது.
இந்த சமூக அமைப்பில் இருக்கிற சிக்கல்களும் முரண்பாடுகளும் முதலாளித்துவ சமூக அமைப்பை உடைத்து எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சோசலிச சமூக அமைப்பு விரைவில் உருவாகும்.
சோசலிச சமூகத்தில் உபரி செல்வம் சமூக கட்டுப்பாட்டில் இருக்கும், அந்த செல்வம் சமூக வளர்ச்சிக்காக முழுவதுமாக செலவிடப்பட்டு வரும்.
உற்பத்தியில் நிரந்தர வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் விஞ்ஞான முன்னேற்றம் உற்பத்தியில் ஏற்படும் நவீன மாற்றங்கள் இவற்றால் உழைப்பாளர்களின் வாழ்க்கை மேம்பட்டு கொண்டிருக்கும்.
10 லட்சம் ஆண்டுகளில் மனித சமூகம் மாற்றமின்றி நிலையாக இருந்திருக்கவில்லை. அது வளர்ச்சி அடைந்து கொண்டே வந்திருக்கிறது. பல மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றைய கட்டத்தை அடைந்துள்ளது. நிச்சயம் இதிலும் மாற்றம் ஏற்பட்டு சோசலிச சமூகமாக இந்த உலகம் மாறும்.
இதைத்தான் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. அவசியம் வாசியுங்கள்.
நூலாசிரியர்: பிரபாகர் சான்ஸ்கிரி
தமிழில்: க.மாதவ்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.

Leave a Reply