மது நாட்டுக்கும் வீட்டுக்கும் காட்டுக்கும் கேடு

Spread the love

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் “காட்டுக்கும்” கேடு!   – விழிப்புணர்வே அற்ற தமிழ் சமூகம்

amarbharathy 

தீபாவளி அன்று காலை 10.30 மணி அளவில் திருவண்ணாமலையில் இருந்து போளூர் வழி ஜவ்வாது மலைக்கு நானும் அப்பாவும் புறப்பட்டோம். போளூர் ஊருக்குள் சென்று தான், ஜமுனாமரத்தூர் (ஜவ்வாது மலையின் முக்கியமான ஊர்) செல்ல வேண்டும். தீபாவளி தினமாகையால் ஊர்த் தெருக்களிலெல்லாம் பட்டாசுகள் வெடித்துத் தள்ளிக்கொண்டு இருந்தனர் மக்கள். இளைஞர்கள், மூவர் நால்வராக இருசக்கர வாகனங்களில் ஜவ்வாது மலை நோக்கி சென்றவாறு இருந்தனர். ஒருவரும் ஹெல்மட் அணியவில்லை; இருவராகக் கூட இல்லை – மூவராகத் தான் முக்கால்வாசி இளைஞர்கள் செல்வதைக் காணமுடிந்தது.அடிவாரம் முடிந்து காடு தொடங்கும் இடத்தில் ஒரு சம்பிரதாய செக் போஸ்டும், ஆர்வமில்லாத ஒரே ஒரு வனக் காவலரும் மட்டும் தான்!

ஜவ்வாது மலைகாடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்று அல்லாமல், பெரிய வனவிலங்குகள் இல்லாத வனப்பகுதியாகும். முயல், புள்ளி மான்,உடும்புகள், பாம்பு வகைகள் ஆகியன எப்போதும் பார்க்கலாம். யானைகள், கரடிகள் அங்கிருக்கும் மக்கள் நினைவில் மட்டுமே எஞ்சிய பெருவிலங்குகள்; அவ்வப்போது தலை காட்டவும் செய்யும்! சில நாட்களாகவே மழை பெய்து விட்டிருந்த காரணத்தினால் உண்டான அபரிமிதமான தாவர வளர்ச்சி, காட்டுக்கு அழகிய புது பச்சைமையை கொடுத்திருந்தது; கூடவே ஏகமாய் பட்டாம்பூச்சிகளும் அங்குமிங்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அலைந்தவாறு இருந்தன.

காடு தொடங்கிய இடம் முதல் கிட்டத்தட்ட 20 கிமீ வரைதான் மேல்சொன்ன அழகிய காட்சியெல்லாம். அதற்கு பிறகு கண்ட காட்சிகள் தான், என்னை எழுதத் தூண்டியது…

போளூரில் இருசக்கர வாகனங்களில் கிளம்பி சென்றுகொண்டிருந்தார்களே இளைஞர்கள்- அவர்கள் யாவரும் தமிழக அரசின் டாஸ்மாக் தீபாவளி இலக்கை அடைய உதவும் குடிமகன்கள்! காட்டில் அவர்களுக்கு பிடித்த இடத்தில், அது மர நிழலோ, ஓடையின் கரையோ, சிலர் ரோட்டோரத்திலோ அமர்ந்து பட்டப்பகலிலேயே மது அருந்திக் கொண்டிருந்தனர். எனக்கு இங்கே எழுந்த கேள்விகள் பல. பண்டிகை நாள் அன்று மது அருந்த தோன்றியது ஏன்? மது அருந்துவது வீட்டில் செய்யாமல், ஊர் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் வந்து மது அருந்துவது ஏன்? இவை தனி மனிதர்களைக் கண்டு நான் கேட்பது. அரசாங்கத்துக்கு கேட்பவை இவை:
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்க இலக்கெல்லாம் வைத்து அசுரத்தனமாக மது விற்பது ஏன்? வனத்துறை என்ற ஒன்று பாதுக்கக்கப்பட்ட இடத்தில் எப்படி இது போன்ற சம்பவங்களை அனுமதிக்கிறது? நான் ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் மட்டும் குடிகாரர்களைப் பார்த்துவிட்டு இதை எழுதவில்லை, ஜமுனாமரத்தூர் தாண்டி அமிர்தி வழியே இறங்கும்போது போளூர் அருகே பார்த்ததை விடவும் அதிகமாக மக்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வந்து குழுவாக குடிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மது அருந்திய கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கோப்பைகள், இவை தவிர குடும்பமாக வந்து உணவு உண்டு போட்ட குப்பைகள் என காட்டுக்குள் இவர்கள் செய்த அழிச்சாட்டியம் எல்லாம் மீட்கமுடியாத இழப்பு. யார் அந்தக் காட்டில் வந்து அந்தக் குப்பைகளை அகற்ற போகிறார்கள்? அங்கே மேயும் மாடுகளும் மான்களும் தானே அவற்றை உண்ணும்? ஜெயமோகனின் யானை டாக்டர் நினைவில் வந்து போனது: அந்தக் கண்ணாடி பாட்டில்களின் சில்லுகள் பதம் பார்க்கப் போவது இவைகளின் குளம்புகளைத் தானே!

இது தவிர அதிவேகமாக வாகனங்கள் செலுத்தி சாலைகளில் கிலி ஏற்றிக்கொண்டு சென்றனர் சில குடிமகன்கள். ஓரிருவர் முழு போதையில் வண்டியில் காட்டில் போன இடத்திலெல்லாம் பட்டாசு கொளுத்திப் போட்ட வண்ணம் இருந்தனர்! பைத்தியங்கள் என்று ஓரம் கட்டிவிட முடியாத சமூகக் குற்றவாளிகளாகவே நான் இவர்களைப் பார்க்கிறேன்!
சிற்றூரான போளூர் வேலூர் பக்கமே இப்படி என்றால், கோவை அருகிலுள்ள ஊட்டி, பொன்னியம்மன் கோவில் வனப்பகுதி போன்றவையும், இன்னும் பெயர் தெரியாத எண்ணற்ற மலைகளின் கதியும் தான் என்ன? இவையல்லாமல் தமிழகக் காடுகள் மொத்தத்தில் மட்டும் இந்த தீபாவளி எத்தனை கேடுகள் செய்ததோ!

இந்தப் பயணத்திலிருந்து இருவேறு விஷயங்கள் தெரிகிறது: மது அருந்தித் தம் உடல்நலமும் கெடுத்துக்கொள்கிறோம்; மதுவைக் காட்டில் அருந்தி காட்டின் நலத்தையும் நாசம் செய்கிறோம். ஆயிரம் வருட நாகரிகம் என்று வீணாய் மார்தட்டிக் கொள்ளும் விழிப்புணர்வே அற்றத் தமிழ் சமூகம் இது!

-அமர பாரதி
28.10.2019
https://www.facebook.com/amara.bharathy?fref=gs&__tn__=%2CdC-R-R&eid=ARDmiM2RzJZiYwUJWw3B-soUnGTxI-1djQq0oY0xls32Je4q_liUX4Nu3YOUS6bnWTk2qjWXqkjD_xqY&hc_ref=ART5rzE7KvbG1tYKd6by4pADIjPwP5kDk-pjvAi9XAGFdxZsSAV5rELWRHPa5bSyVwE&dti=1005740812946122&hc_location=group

 

Leave a Reply