FEATUREDLatestSocialmedia

பேனா காதல்

Spread the love

பதினோராம் வகுப்பு தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், வீட்டில் சல்லி பைசா இருக்காது, கால் வயிறு அரை வயிற்று கஞ்சிக்கே திண்டாட்டம், அம்மா எப்படியாவது எங்கள் பசியாற வைப்பாள், தீடிர் வறுமை செய்வதறியாது முழி பிதுங்கி இருந்த தருணம்,
ஒரு பேனாவின் மீது ஆசை ஊற்று பெருக்கெடுத்தது, கேம்லின் பௌண்டெயின் பேனா உயரம் குறைவாக, தடிமனாக இருக்கும் அப்போது முப்பது ரூபாய் இருக்குமென நினைக்கிறேன், அதிலும் டீல் (Teal) கலர் மீது பிரியம், பள்ளி முடிந்து மாலை நேரம் தெருவில் உள்ள ஒன்றிரண்டு வயது என்னை விட மூத்தவர்களுடன் ஊர் உற்றுவது வழக்கம் அதில் சிலர் மேஸ்திரிகள், அதில் அசோக் என்பவர் பக்கத்து வீடு, நாலு யூனிட் ஜல்லி ரெண்டாவது மாடிக்கு ஏத்தனும், 300 ரூபாய் தருவாங்கன்னு பேசிகிட்டு இருந்தாரு மூன்று நபர்கள் சென்றோம், நாலு யூனிட் பெரு ஜல்லியை சிமெண்ட் பையை பாதியாக மடக்கி ஆள் மாத்தி அள்ளிக் கொடுத்து மாடிக்கு தூக்கினோம், ஆளுக்கு நூறு, மறு நாள் நேராக சென்று வாசவி ஸ்டாரில் அந்த பேனாவை வாங்கி வெள்ளை யூனிபார்மில் குத்திய பிறகே ஒரு திருப்தி, செருக்கு எல்லாம் நான் உழைத்து ஆசைப்பட்டதை அடைந்து இருக்கிறேன்னல்லவா.

பேனா மீது அப்படி ஒரு காதல் உண்டு, தீடிரென ஒரு நாள் நண்பர் ஜுல்பிஹார் தான் பயன்படுத்திய மாண்ட் பிளான்க் பேனா பரிசாக கொடுத்தார் விலை முப்பதாயிரம், நாஞ்சில் சம்பத் அவர்களை சந்திக்கும் போது மாபாசண்ட் புத்தகம் ஒன்றை அவருக்கு கொடுத்தேன் உங்க மொபைல் நம்பர் எழுதி குடுங்க பாஸ்கர் என்றார் சம்பத், பேனா கொண்டு போகவில்லை, பக்கத்தில் இருந்த Srini Kaarthi அவர்கள் அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை கொடுத்து எழுதச் சொன்னார், எழுதி விட்டு திருப்பிக் கொடுத்தேன் நீங்க தான் நிறைய எழுதனும் உங்க பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார், அது ஃபேபர் காஸ்டில் ஈ-மோஷன் பேனா பத்தாயிரம் வரை இருக்கலாம். விலை ஒருபுறம் இருக்கட்டும், தான் நேசிக்கும், நபருக்கு மிகவும் விரும்பி வாங்கிய ஒரு உடமையை கொடுக்கும் போது விலைமதிக்க முடியாத அன்பை பொதிந்து வைத்தே கொடுக்கிறார்கள், ஆனால் அதற்கு தகுந்த நபராக நாம் மாறி வருகிறோம் எனும் போது கூடுதல் மனநிறைவை தருகிறது, மூன்று பேனாக்களும் வாழ்வின் உன்னத பரிசுகள்.

நட் ஹாம்சன் (Knut Hamsun) பசி புத்தகம் குறித்து நேற்று யாரோ முகநூலில் எழுதி இருந்தார்கள், ஒரு இடத்தில் ஹாம்சன் பென்சில் இல்லாமல் தான் எழுத வேண்டிய முக்கியமான கட்டுரை தடைப்படு நிற்பதை எழுதி இருப்பார் பசி புத்தகம் இத்தனை கதைகளை நினைவுக்கு கொண்டு வந்தது.

பென்சில் இல்லாத காரணத்தால் மர நாற்காலியை தலையில் தூக்கிக் கொண்டே ஒரு மணி நேரம் முட்டி போட வைத்த காரணத்தால் பள்ளிக்கு முழுக்கு போட்டவரின் மகனல்லவா நான். பேனா பென்சில் மீது மட்டுமல்ல கல்வி மீதும் காதல் வயப்பட இப்படி பல காரணங்கள் உண்டு.

#பாஸ்கி

Leave a Reply