புள்ளிமூக்கு வாத்து – Spotbill Duck

Spread the love

புள்ளிமூக்கு வாத்து (Spotbill Duck)

செங்கால் வாத்து, பெரிய தாரா, புள்ளிமூக்கன் என்றெல்லாம் அழைக்கப்படும் புள்ளி மூக்கு வாத்து, சாதா வாத்தின் அளவுள்ள பறவை. அழகிய வண்ணங்களைக் கொண்ட நீர்ப்பறவை இது. எளிதில் அடையாளம் காணக்கூடிய பறவையும் கூட.
புள்ளிமூக்கு வாத்தின் முதுகு அடர்பழுப்பு நிறமானது. தலையும், முகமும் வெளிர்நிறம். இதன் முதன்மைச் சிறகுகள் வெள்ளை நிறமானவை. கால்கள் ஆரஞ்சு கலந்த செம்பவள நிறமாகக் காட்சி தரும். செங்கால் வாத்து என இது அழைக்கப்பட இந்த சிவப்பு நிறக் கால்களே காரணம். 
புள்ளிமூக்கு வாத்தின் அலகு கருப்புநிறம். அதன் நுனியில் பளிச்சிடும் மஞ்சள் நிறம் மிளிரும். ஆண் வாத்தின் மூக்கும், முகமும் இணையும் இடத்தில் ஆரஞ்சுநிறம் கலந்த 2 செம்புள்ளிகள் அழகு செய்யும். புள்ளிமூக்கு வாத்து என இது அழைக்கப்பட இந்த புள்ளிகளே காரணம். கண்களைச் சுற்றி மைதீட்டி வந்ததுபோல ஆண்
புள்ளிமூக்கு வாத்து எழிலுற காட்சிதரும்.
புள்ளிமூக்கு வாத்தில் பெண்பறவைக்கு ஆண் பறவை அளவுக்கு பளிச்சிடும் நிறம் இல்லை. சற்று நிறம்குன்றி மாற்று குறைந்து, ஆணை விட சற்று சிறியதாக பெண் வாத்து காணப்படும்.
புள்ளிமூக்கு வாத்துகள், நீந்தும்போது அவற்றின் முதன்மைச் சிறகுகள் தெளிவாக அழகாகத் தெரியும். புள்ளிமூக்கு வாத்துகள் நீருக்குள் மூழ்கி இரை தேடாது. நீரின் மேற்பரப்பில் இணைசேர்ந்து நீந்தியபடி தலையைக் குப்புறக் கவிழ்த்தி, லாகவமாக நிமிர்த்தி, நீருக்குள் இவை இரைதேடும். பாசிகளை இரையாகத் தேடி உண்ணும். ஆபத்து அணுகினால் நீருக்குள் முக்குளித்து சற்றுநேரம்வரை அங்கே தங்கியிருக்கும்.
சைவப்பறவைதான் என்றாலும் புள்ளிமூக்கு வாத்து சிறுபூச்சிகளையும், நத்தைகளையும் உணவாகக் கொள்ளும். நெல்வயல்களில் நெல்லுடன், நெல்லுக்கு தீங்கு இழைக்கக் கூடிய பூச்சிகளையும் இது இரையாக்கும்.
காலை மாலை வேளைகளில் உணவு தேடும் இந்தப் பறவை, பகல்வேளைகளில் நீரில் நீந்தியபடி கண்களை மூடி சிறிய பூனைத்தூக்கம் போடும்.
புள்ளிமூக்கு வாத்து நீண்டதொலைவுக்குப் பறக்கக் கூடியது. ஆனால், தரையில் இருந்து மேலெழும்பி பறக்க இது சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.
இனப்பெருக்கத்துக்குப்பின் ஆண், பெண் வாத்துகள் இரண்டும் ஒரே வேளையில் இறகுத் தூவல்களை உதிர்த்துக் கொள்ளும். பின்னர் புதிய இறகுகளை இயற்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்.