புலிகளை எதற்கு பாதுகாக்க வேண்டும் ?

Spread the love

புலிகளை எதற்கு பாதுகாக்க வேண்டும் ?

அழகாக மேயும் மான்களை வேட்டையாடும் கொன்றுண்ணியை, மனிதர்கள் பயப்படும் வீரியமான விலங்கை எதற்கு பாதுகாப்பது என்பது பலருக்கு புரியாத புதிர். அதை இந்த பதிவில் தெளிவு செய்வோம்.

எந்த ஒரு இயற்கை சூழலும் சரியாக செயல்படுகிறதா என்று நாம் புரிந்து கொள்ள சில குறியீடுகள் தேவைப்படுகின்றன. பல்லுயிர் சூழல் (Bio Diversity) சிறப்பாக இருந்தால் இயற்கை சமநிலை சரியான வழியில் செல்கிறது என்பதை உணரலாம். பல்லுயிர் சூழல் புற்கள் முதல் விண்ணைத் தொடும் மரங்கள், சின்னப் பூச்சிகள், பறவைகள் முதல் கட்டுமஸ்தான யானை வரை சகலத்தையும் அடக்கியது. இதிலுள்ள அனைத்து உயிர்களும் சூழலை சிறப்பாக வைத்துக்கொள்ள தன்னால் இயன்றதை செய்து கொண்டுள்ளன.

இவற்றின் நல்வாழ்வு இயற்கை சமநிலைக்கு அடிப்படை. இயற்கை சமநிலையே மனிதர்கள் வாழ்விற்கும் அடிப்படை. சிறப்பான மழையை, நல்ல காற்றை, தோதான பருவ காலங்களை சார்ந்தே மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சமநிலையை அளவீடு செய்வது மனிதர்கள் பூமியில் வாழ்வதற்கு எழுதிக்கொள்ளும் தேர்வு போன்றது. சரி,
இந்த சமநிலையை எவ்வாறு அளப்பது ? பல்லுயிர் சூழலில் உள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக எண்ணி, படித்து புரிந்துகொள்வது என்பது கடற்கரை மணலை எண்ணி அளப்பது, காற்றை கட்டிவைப்பது போன்ற இயலாத காரியம். இங்கே தான் புலிகள் மிக முக்கிய இயற்கை சமநிலை குறியீடுகளாக வருகின்றன.

உணவுச் சங்கிலி பற்றி அனைவரும் அறிவர். புலிகள் இந்த உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் உயிரினம். எடுத்துக்காட்டாக மண்ணில் இருந்து புல், புல்லை மான், மானை புலி, கடைசியில் புலியை மண் சாப்பிடும் நிலையே உணவு சங்கிலி தொடர்.

புலிகளின் வாழிட தேவைகள் மிக அதிகம். பல்லுயிர் சூழல் பெருக்கம் சிறப்பான இடங்களில் மட்டுமே புலிகளால் வாழ முடியும். புலிகளை கணக்கிடுவது எளிது. எறும்புகளை போல எண்ணிலடங்கா எண்ணிக்கையில் புலிகள் இருக்காது. ஒரு புலி இருக்கும் காடு பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளம், பல்லுயிர் பெருக்கம் சிறப்பான காடுகளின் அடிப்படை. சிறப்பான, பரந்து விரிந்த காடுகள் பருவநிலை மாற்றங்களின் அளவீடு. சரியான பருவ நிலை மனித வாழ்க்கையின் அச்சாரம். எனவே தான் இயற்கையை காப்பாற்றுவதில் புலிகளை முன்னிலைப்படுத்தி உலகமே செயல்படுகின்றது.

பல்லுயிர் சூழலின் தொடர்பில் உள்ள சமநிலையில் ஒரு சிறு துரும்பை கிள்ளி இருந்தாலும் அது மிகப்பெரும் பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக உண்டாகும். மனிதர்களால் இருப்பதைக் காக்க முடியும், இயற்கையை மறு உருவாக்கம் செய்ய முடியாது. இதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம்.

நாம் சுவாசிக்கும் காற்றில், குடிக்கும் தண்ணீரில் நம் பங்கு ஒரு துளியும் இல்லை. ஆனால், எங்கோ காட்டின் மூலையில், உலாவும் புலியின் பங்கு மிக மிக அதிகம். புலியின் பல்லில், மீசையில், நகங்களில், தோலில், எலும்புகளில், பாடங்களில் ஓர் உபயோகமும் இல்லை, பெருமையும் இல்லை. உயிரோடு, கம்பீரமாக நம் காடுகளை அவை ஆட்சி செய்கையில் தான் பெருமையும், நன்மையும் நம் நல்வாழ்வும்.

நன்றி.

#organisationforwildlife #owl

Leave a Reply