புதர் வானம்பாடி

Spread the love

Jerden’s Bush Lark
புதர் வானம்பாடி….

வானம்பாடிப் பறவைகளைப் பார்க்காதவர்கள் இருக்கலாம் ஆனால் அவற்றின் பெயர்களைக் கேட்காதவர்கவர்கள் குறைவே.. வானம் பாடிப் பறவைகள் அந்த அளவிற்குப் பெயர் பெற்றவை என்பதே இதற்குக் காரணமாகும் .

 

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சிவந்தவால் வானம்பாடி, புதர் வானம்பாடி , சாம்பல்தலை வானம்பாடி, சிவந்த இறக்கை வானம்பாடி , கொண்டை வானம்பாடி ,சின்ன வானம்பாடி எனப் பல வகை வானம் பாடிகள் காணப்படுகின்றன. வானம்பாடிகள் பொதுவாகக் குட்டையான கால்களையும் தடித்த அலகுகளையும் கொண்டவை .இவற்றுள் புதர் வானம்பாடிகள் கேரளா தமிழ்நாடு மற்றும் இந்தியக் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் அடையாளம் காணப் பட்டுள்ளன .இந்தியாவின் மற்று பகுதிகளில் இவை அடையாளம் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற வில்லை. இணையாகவோ தனியாகவோ சிறு கூட்டங்களாகவோ பாறைகள் தரிசு நிலங்கள் சிற் சிறு புதர்க்காடுகள் போன்றவற்றுள் இவற்றைக் காணலாம். புல் விதைகள் , தானியங்கள், சிறிய பூச்சிகள் போன்றவற்றை இவை இரையாக உட்கொள்கின்றன. மதிய நேரங்களில் புழுதி மண்கள் பாறைகள் போன்றவற்றில் ஓய்வு கொள்ளும் இவை காலை மாலை நேரங்களில் இரை தேடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. மண்குளியல் செய்வதில் மற்ற வானம்பாடிகளை விட இவை அதிகம் ஆர்வம் கொண்டவை. இனப் பெருக்க காலங்களில் ஆண் பறவைகள் அடிக்கடி வானத்தை நோக்கிப் பறந்து இனிமையாகப் பாடும் தன்மை கொண்டவை. இவை வறண்ட நிலங்களில் சிறிய குடிசை போன்று கூடமைத்துக் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதை ஒருமுறை நான் கவனத்திருக்கிறேன் . எல்லாப் பகுதிகளிலும் இது போன்றுதான் கூடமைக் கின்றனவா ? என்பதைப் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். முனைவர் க.இரத்தினம் அவர்களுடைய தமிழ் நாட்டுப் பறவைகள் என்ற நூலில் இவை கோப்பை வடிவில் கூடுகள் அமைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் பறவை இரண்டு முதல் மூன்று வரையிலான முட்டைகள் இடும். ஆண் பெண் ஆகியவை மாறி மாறி அடைகாத்து குஞ்சுகளை விரியச் செய்கின்றன. இரையூட்டுவதிலும் பெற்றோர்கள் சம உரிமையை நிலைநாட்டுகின்றன.

அனைவருக்கும் உலகச் சுற்றுச்சூழல் தின நல் வாழ்த்துகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *