FEATUREDLatestNature

பாம்பு அ(பி)டிக்கப் போறீங்களா

Spread the love

பாம்பு அ(பி)டிக்கப் போறீங்களா?

10 ஆண்டுகளுக்கு முன் நான் தற்பொழுது வசிக்கும் இந்தக் கிராமத்திற்கு வருவதற்கு முன்பு பாம்பு என்றால் அது அடித்துக்கொல்லப்படவேண்டிய ஒரு விஷ ஜந்து என்ற அளவிலே பெரும்பாலான உங்களைப் போலவே நானும் இருந்தேன். பாம்பை எல்லாம் அடிக்கக்கூடாது, அத அப்படியே விட்டுட்டா அதும்பாட்டுக்குப் போயிடும், நாம நம்ம வேலையைப் பார்க்கப் போயிடனும் என்ற என் அப்பாவின் அறிவுரை மூளையின் அக்கறையில்லாத சேமிப்புக் கிடங்கில் இருந்தது.

கிராமத்திற்கு வந்தபிறகு நிலமை அப்படி இருக்கவில்லை. தினம் 3லிருந்து 5 பாம்புகளைப் பார்ப்பதென்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டபொழுதில் நான் ஒரு முடிவெடுத்தேன். இருக்கும் காசெல்லாம் போட்டு கிராமத்தில் தோட்டத்துடன் ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற கனவை அடைந்தாயிற்று. பாம்பு, பூரான், நட்டுவாக்களி என்று பல ஜீவன்களுடன்தான் இனி வாழப் பழகவேண்டும். வேறு வழி இல்லை இவ்வளவு சாதாரணமாகப் பாம்புகள் உலாவுகிறதென்றால் அவற்றின் வசிப்பிடம் இது. அதனுடன் நாமும் வசிக்கவேண்டும், ஆக முதலில் பாம்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் அவசியம் என்ற முடிவுக்கு வந்தேன்.

இந்த முடிவெல்லாம் நான் அலசி ஆராய்ந்து எடுக்கவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தது, அதற்குள்ளாகவே இரண்டுமுறை பாம்புகள் என் வீட்டிற்குள் வந்துவிட்டன. இரண்டையுமே நான் அடித்துக்கொல்லவில்லை, அது விஷமுடையதா, விஷமில்லாததா என்று அறியாமலேயே கிச்சனுக்குள் நுழைந்த குட்டி ஒன்றை கையில் நிறைய துணியைச் சுற்றி ஒரு மாதிரிப் பிடித்து வெளியே விட்டுவிட்டேன்.

மற்றொரு பாம்பை, டிஸ்கவரி சேனலில் ராஜநாகத்தை கர்நாடகக் காடுகளில் பிடித்த டெக்னிக்கில் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பாட்டிலில் கருப்பு பாலிதீன் கவரைச் சுற்றி அந்தப் பக்கம் அந்தப் பாம்பை வரவழைத்து பிடித்து அதை அப்படியே எடுத்துக்கொண்டு கிண்டி பாம்புப் பண்ணைக்குச் சென்று என் பிரச்சனையைச் சொல்லி நான் கொண்டு வந்த பாம்பைக் காட்டினேன். பிறந்த குழந்தையை ஒரு மருத்துவர் கையிலெடுப்பதைப் போல அந்தப் பாம்பை அந்த பாம்புப் பண்ணை அதிகாரி கையாண்டார். இது Keeled Back ம்ம்,, தமிழ்ல என்ன கொம்பேரி மூக்கன்னு சொல்வாங்கன்னு நினைக்கறேன், வளர்க்கப் போறீங்களா? என்று என்னைக் கேட்டார். அவசரமாகத் தலையாட்டி அதுக்கு அவசியமே இல்லைசார், நிறைய வீட்டுத் தோட்டத்துல உலாவுது என்று என் பல சந்தேகங்களுக்கு அவர் பதில் சொன்னார்.

01. மனிதன் இந்த உலகில் தோன்றுவதற்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பாம்புகள் வந்துவிட்டன. ஆக பாம்புகளைப் பொருத்தவரை நாம் அவற்றிற்கு வந்தேறிகள்.

02. பாம்புகளில் பல வகைகள் உண்டு, இந்தியாவில் அதிகம் விஷமுடையவை என்று கருதப்படும் (Deadly four) வகைகள் நான்கு:

ராஜநாகம் ( King Cobra)
நல்லபாம்பு (Naja Naja or Spectacled Cobra)
கண்ணாடி விரியன் (Russell’s Viper)
கட்டு விரியன் (Common Krait)

இதைத் தவிரவும் சில விஷமுள்ள வகைகள் உண்டு, அவை எல்லாம் சில நிலப்பரப்புகளில் மட்டுமே வசிக்கக் கூடியவை, இந்தியா முழுக்க சாதாரணமாகக் காணக்கிடைப்பவை அல்ல. இந்த நான்கு மட்டும் ஏன் Deadly four என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றால், இந்த பாம்புகள் (ராஜ நாகம் தவிர்த்து) மக்கள் வசிப்பிடங்களில் குறிப்பாக வயல் சார்ந்த கிராமங்களில் அதிகம் இருப்பதாலும், மக்கள் அதிகம் இவற்றிடம் கடி படுவதாலும்தான், ராஜநாகம் மழைக்காடுகள் இருக்கும் பிரதேசங்களில் காடுகளை அழித்துக் குடியேறி, “கவர்ன்மென்ட்டுதான் எதாச்சும் பண்ணனும் யானை வூட்டுக்குள்ளார பூந்துடுச்சி..” என்று டிவியில் பேட்டி கொடுக்கும் தங்கள் வசிப்பிடத்தில் ஆக்கிரமித்த மக்களுடன் ஏற்படும் சம்பவங்களாலும் அதிக விஷத்தை உட் செலுத்தும் அளவிற்கான அழகான நீண்ட உடலமைப்பைப் பெற்றிருப்பதாலும்.

03. மேலே உள்ள நான்கைத் தவிர்த்து பெரும்பாலும் நீங்கள் காணும் பாம்புகள் எல்லாமே மிகவும் அப்பாவி ரகம், எல்லாமே தண்ணீர்ப்பாம்பு வகையைச் சார்ந்தவை (எல்லாப் பாம்புகளுமே நன்றாக நீந்தும்) நீளமாகவும், வேகமாகவும் செல்லக்கூடிய சாரைப் பாம்பு (Rat Snake) கடித்தால் அதிகபட்சம் ஒரு டிடி ஊசியே போதும் (அது எலிகளைக் உண்டு வாழ்வதால் அதன் பற்கள் மூலம் உங்களுக்கு செப்டிக் ஆகாமல் இருக்க) இது தவிர்த்து உங்கள் கண்களில் படும் வகையில் Mild Venomous என்று சொல்லக்கூடிய வகை ஒன்று உண்டென்றால் அது பச்சைப் பாம்பு (Common Vine Snake) மற்றும் Common Cat Snake. அதாவது இந்தியாவின் பெரும்பாலான நில அமைப்புகளில் வாழும் பாம்புகள் மட்டுமே இங்கே அதிக விஷமுள்ளதிலும், குறைந்த விஷமுள்ளதிலும் குறிப்பிட்டிருக்கிறேன். மேற்கூறிய இரண்டு விஷ அளவுகளிலும் இன்னும் பல்வேறு வகைப் பாம்புகள் உள்ளன அவை எல்லாம் இந்தியா முழுமைக்குமானது அல்ல. அந்தமான் நல்ல பாம்பு, மலபார் பிட் வைப்பர், மெடொ பிட் வைபர் என்பதெல்லாம் நாட்டின் ஒவ்வொரு மூலையில் மட்டுமே வசிப்பவை. அதிகம் குழப்பிக்கொள்ளாமல் தமிழ்நாட்டில் அதிகம் காணக்கிடைப்பவை பற்றி மட்டுமே பேசுவோம்.

ஆக நம்மூரில் ராஜ நாகம் தவிர்த்து, மற்ற மூன்று கில்லாடிகளான, நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியனில், நல்லபாம்பு படமெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அது உடலை விரித்துப் பெரியதாகக் காண்பித்து உங்களை (அல்லது எதிராளியை) பயமுறுத்தி தப்பிச் செல்ல அது கடைபிடிக்கும் ஒரு உபாயம். அதற்குக் கற்பூரம் காண்பித்து, ஆத்தா மகமாயி என்று அலறி (சத்தியமா பாம்புக்கு காது கேக்காதுங்க. உங்கள் காலடி அதிர்வையும், அசைவையும் மட்டுமே உணரும்) கடைசியில் அதன் மண்டையில் கட்டையால் அடித்து வீரத்தைக் காண்பித்து பழிவாங்க அதன் காதலன் வருவதற்குள் அதைக் கொளுத்தி சடங்கெல்லாம் செய்தாலும் (சில சமயம் அந்த இடத்திற்கு தேடி பாம்பு வரும், அதன் காரணம் இனப்பெருக்கத்திற்காக அதன் உடலில் வெளிப்படும் ஒரு வாசனைத் திரவம் நீங்கள் அதை அடித்துக்கொல்லும்பொழுது வெளிப்படுவதால், அதை நுகர்ந்து ‘பழகலாம் வர்றியா’ன்னு நம்மாளு கூப்டுதுபோலியே என்று இனப்பெருக்கத்திற்கு வரும் அப்பாவிப் பாம்புதானே ஒழிய, யார்ரா அவன் எங்காள போட்டது என்று பழி வாங்க வரும் கேவலமான மனிதப் பிறவியல்ல.)

உண்மையில் நல்லபாம்புகள் என்று இல்லை எல்லாப் பாம்புகளுமே மிகவும் சங்கோஜப்படும் பயந்த சுபாவமுள்ள ஒரு விலங்கினமே. உங்களைப் பார்த்ததும் (அல்லது எதிரியை) அது உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்லவே வழி பார்க்கும், அந்த வழியில் நீங்கள் இருந்தாலோ அல்லது அதை நீங்கள் விரட்டினாலோ, தெரியாமல் மிதித்தாலோ, கையாண்டாலோ, அது உங்களைத் தாக்க முடிவெடுக்கிறது. ஆக உங்கள் வழியில் பாம்பைப் பார்த்தால் உங்கள் வழியில் நீங்கள் சென்றுவிட்டால் அதன் வழியில் அமைதியாக அது சென்றுவிடும். (வாழு வாழவிடு)

இதில் ஒரே ஒரு வகை மட்டுமே விதிவிலக்கு, பொதுவாக விரைவாக நகர்ந்து சென்று மறைந்துவிடும் பாம்புகள் மத்தியில், கண்ணாடிவிரியன் மட்டுமே அப்படியே சுருண்டுகொண்டு தாக்கத் தயாராக இருக்கும். மற்றபாம்புகளைப் போல சட்டென்று அதனால் இடத்தைக் காலி செய்ய முடியாது, அதன் உடல் அமைப்பு அப்படி எனவே ஒரு கொசுவத்திச் சுருளைப் போல அது தன் உடலை ஒரு ஸ்ப்ரிங் போலப் பயன்படுத்தித் தன்னைக் காத்துக்கொள்ள முடிவெடுக்கிறது. இங்கும் நீங்கள் அதனைத் துன்புறுத்தாது உங்கள் வழி சென்றுவிட்டால் அதன் பாட்டுக்கு அதன் வாழ்க்கையை வாழச் சென்றுவிடும்.

கண்ணாடிவிரியன் பற்றிய மேலும் சில சுவாரசியத் தகவல்கள்:

பெரும்பாலும், மாலை மலர், தினத்தந்தி வகையறா தினசரிகளில் கிராமத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு என்று ஐந்தடிக்குள் தலை முக்கோணமாகவும், வால் சிறியதாகவும், உடல் தடிமனாகவும் நான்குபேர் பிடித்திருக்கும்படி ஒரு போட்டோவுடன் செய்தியை நீங்கள் படித்தால், 99.99 % அது கண்ணாடிவிரியனாகத்தான் இருக்கும், ஏனென்றால் உடல் நிறமும் அதில் இருக்கும் டிசைன்களும், உடல் அமைப்பும் ஏறக்குறைய மலைப்பாம்பை ஒத்திருக்கும் என்பதால். ஆனால், ஏதேனும் இரையை விழுங்கிவிட்டு மயக்கத்தில் இருக்கும் அந்தப் பாம்பு கடிக்க ஆரம்பித்தால் போட்டோவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் போட்டோவில் மாலை போடவைத்து சொர்கத்துக்கு அனுப்பும் வல்லமை உடையது கண்ணாடி விரியன். வன இலாகா முதல், தீயணைப்புத் துறையினர் வரை போதிய பாம்புகளைப் பற்றிய ஞானமில்லாமலேயே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இதை சமூகப் பொறுப்பில்லாமல் தினசரிகளும் மக்களிடையே சென்று சேர்க்கின்றன.

மேலும், கண்ணாடி விரியன் தாக்கும் இடைவெளி (Striking distance) என்பது நன்றாகப் பாம்புகளைக் கையாளத் தெரிந்த தொழில்முறை பாம்புபிடிக்கும் அன்பர்களுக்கே சவாலான ஒன்று, மிகவும் Unpredictable பாம்பு இது, எப்பொழுது எந்தக் கணத்தில் தாக்கும் என்றே வருடக்கணக்கில் கையாண்டிருந்தாலும் முடிவெடுக்க முடியாது. குட்டிபோட ஆரம்பித்தால் (பாம்புகள் முட்டையும் இடும், குட்டியும் போடும்) ஒரே பிரசவத்தில் அட்டகாசமான விஷத்துடன் 50+ குட்டிகளை சர்வசாதாரணமாகப் போடும். பொதுவாக இரவில் தெரியாமல் காலில் மிதித்து அல்லது சுருண்டுகிட்டுத்தானே இருக்கு என்று Striking distance தெரியாமல் அருகில் சென்று கடி வாங்குபவர்கள், மலைப்பாம்பு என்று கையில் எடுத்து கடிவாங்குபவர்கள் அதிகம்.

அடுத்ததாகக் கட்டுவிரியன். கருப்பு நிறத்தில் வெள்ளை வரிகளையுடைய இந்தப் பாம்பு இரவில் அதிகமாக நடமாடக்கூடிய பாம்பு வகை, இரவில் தரையில் படுத்திருப்பவரின் அருகில் இதுவும் சென்று அவர் தூக்கத்தில் கை, கால்களை அசைத்துத் திரும்பும்பொழுது கடித்துவிடும். கடித்தால் வலி தெரியாது என்பதால் சொர்கத்தில் பரமன் “வாலே ஆன்ட்டனி, சொகமாருக்கியா?” என்று கேட்கும்பொழுதுதான் நீங்கள் அமரராகிவிட்டதே உங்களுக்குத் தெரியவரும். “நைட்டு நல்லா சாப்ட்டுட்டு தூங்கப் போனாருப்பா, காலைல பார்த்தா ஆளு அவுட், பேய் எதுனா அடிச்சிருக்குமா?” என்ற கிராமத்துக் கதைகளில் பல இதன் காரணமாக இருக்கலாம்.

எல்லா விஷப்பாம்புகளும் கடித்த உடனே மரணம் நிச்சயமா?
சில பாம்புகளுக்கு மட்டும் ஏன் விஷம் இருக்கிறது? ஏன் மற்ற பாம்புகளுக்கு இல்லை?
விஷமுள்ள பாம்பு கடித்தால் மந்திரம், வாயை வைத்து உறிஞ்சுவது, நாட்டு மருந்து பச்சிலை, அருகிலுள்ள அரசு மருத்துவமனை இவற்றில் எது சிறந்தது?
பாம்புகளின் வகைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்?
என் வீட்டிற்கு ஏன் பாம்புகள் வருகிறது?
இந்திய வனப் பாதுகாப்பு சட்டம் 1972 ஷெட்யூல் 1 முதல் 4 வரை எதைப் பாதுகாக்கிறது, என்ன தண்டனைகள் போன்ற விவரங்கள் தெரியுமா?

போன்றவைகளை, அடுத்த பதிவில் பார்ப்போம் 🙂

#புரியட்டும்_தெளியட்டும்
#பாம்புகள்
By Shankar ji..
#மீள்ஸ்

Leave a Reply