பழவேற்காடு

Spread the love

சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு செல்ல எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சென்னையிலிருந்து மதியம் கிளம்பி, மாலை 4.30 மணிக்கு தான் படகு இருந்த இடத்திற்கு சேர்ந்தோம். நேரம் குறைவாக இருப்பதால் பூ நாரைகளை (Greater Flamingo) மட்டும் பார்த்தால் போதும் என கிளம்பினோம். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு பிறகு தூரத்தில் ததும்பும் காணல் நீரினூடே நீண்ட கால்கள் கொண்ட பூ நாரை பறவைகளை காண முடிந்தது. இந்த பறவைகளை நான் நேரில் காண்பது இதுவே முதல் முறை. ஆனால், படங்களில் நிறைய பார்த்தாயிற்று. எனக்கு ஒரே மாதிரியான படங்கள் எடுப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை. எனவே, சற்று வேறு விதமான படங்களை எடுக்க முயற்சி செய்தேன்.

சூரியன் புகைப்படக் கருவிக்கு நேர் எதிரே இருக்கும் போது, (Backlighting) முன்னால் இருப்பது அனைத்தும், சற்று நிறமிழந்து கருமையாய் தோன்றும். புகைப்படங்கள் இந்த சூழ்நிலையில் எடுப்பது சற்று சவாலான ஒன்று. வெள்ளையும், கருப்பும் மட்டுமே உங்களுக்கு இருக்கும் வண்ணங்கள்.

சூரிய அஸ்தமனம் நெருங்க, நேர் எதிரே இல்லாது, பக்கவாட்டில் (Side Lighting) இருந்து கிடைக்கும் சாந்தமான, ரம்மியமான ஒளி புகைப்படம் எடுக்க மிகச் சிறந்த ஒன்று. இங்கே வண்ணங்கள் பல. உங்களின் கற்பனைக் கதவுகளை திறக்கக் கூடிய அனைத்தையும் கொண்ட ஓர் ஒளி அது.

இரண்டு வகை ஒளியையும் உபயோகித்து இருக்கிறேன். என்னுடைய புகைப்பட கருவின் எல்லைகளை இந்த இடத்தில் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. வன உயிர் புகைப்பட கலையை நன்கு பயிற்சி செய்ய பழவேற்காடு மிகச் சிறந்த இடம். இயற்கை என்றைக்கும் நாம் எதிர்பார்க்கும் சந்தர்ப்பங்களை தராது. கிடைப்பதை வைத்து, உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

சரியாக மாலை 6.30-க்கு கரை வந்து சேர்ந்தோம். சிறப்பான ஒரு மாலையாக அமைந்தது.

ஒரே இடத்தில் இல்லாது, 2 முறை பறந்து வந்த பூ நாரை கூட்டங்களுக்கும், என்னை அழைத்து சென்ற என் நண்பர், மற்றும் எங்கள் படகை செலுத்திய பொறுமை மிக்க மீனவ நண்பருக்கும் நன்றி.

Calvin Jose 

Leave a Reply