EntertainmentFEATUREDLatestSocialmedia

பரியேறும் பெருமாள்

Spread the love

பரியேறும் பெருமாளில் மாரி செல்வராஜ் தலித் நிலைப்பாட்டோடு நின்றுவிடாமல் அதன் மறுபக்கத்தையும் பார்க்க முயற்சிக்கிறார். சாதிய வன்மத்தை கையிலெடுப்பவர்களும் ஒருவகையில் சாதியத்தின்(victims) ‘பலியாடுகளே’. 21ஆம் நூற்றாண்டில் சாதிய ஆணவத்துக்காகக் கொலை செய்வதை ‘குலசாமிக்குச் செய்யும் சேவையாக’ கருதும் மனநிலையின் இடமென்ன? பாய்ந்துவரும் ரயில்முன் நின்று வடக்கிருந்து உயிர்விடுவதைப் போல மேஸ்திரித்தாத்தா உயிர்விடத்துணிகிறார். இதுதான் முக்கியச்செய்தியாக எனக்குத் தோன்றுகிறது. சாதிய ஆணவம் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாதியம் மட்டுமல்ல. மத அடிப்படை வாதமும்கூடத்தான். சங்கிகளும் கூட ரயில்முன் பாயத்தான் போகிறார்கள். என்ன.. அவர்களுக்கான ரயில் வரக் கொஞ்சம் தாமதமாகக்கூடும். ஒரு கலைஞன் செய்ய வேண்டிய வேலை இதுதான். வாழ் நாள் முழுதும் தன் சாதிக்காக கொலைகளைச் செய்த மேஸ்திரித்தாத்தாவின் வாழ்க்கை ஒரு வரிச் செய்தியாக டீக்கடையில் தொங்குவதோடு முடிந்துபோகிறது. சாதியப் பெருமைக்காகக் கொலைகள் செய்து வழக்குகளைச் சந்திக்க நேர்ந்த பலரின் குடும்பங்கள் சின்னா பின்னமாகிக் கிடப்பதை நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இத்தகைய கொலைகளை ஊக்குவிக்கும் அமைப்புகள், ஸ்பான்சர்கள் படிப்படியாக விலகிப் போய், மொத்த இழப்பும் அந்தத் ‘தியாகிகளின்’ குடும்பங்களின் தலைமேல் இறங்குவதை கவனிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. Born on 4th July எனும் படத்தில் 20வயதில் வியட்நாம் போரில் இரண்டு கால்களையும் இழந்த நாயகன் ‘நாட்டுக்காகப் பெரும் தியாகம் செய்ததான’ உணர்வோடு வீட்டுக்கு வந்து சேர்கிறான். அவன் சொல்லும் போர் பெருமைகளைக் கேட்கும் அவகாசமும் மனநிலையும் குடும்பத்தினரிடமும், யாரிடமும் இல்லை என்பது அவனுக்குப் பேரிடியாக இருக்கிறது. எங்களுடைய தியாகத்திற்கான இடமென்ன? என்ற உளைச்சலில் தவிக்கிறான். போரே அபத்தம் எனும்போது கொலைகளைச் செய்தவர்கள், கால்களை இழந்ததை எதன் பொருட்டு பொருட்படுத்த முடியும் என்ற பொது மனநிலை நாயகனை நரகத்துக்குள் தள்ளுகிறது. சகமனிதனைக் (அந்நிய நாட்டவனாக இருந்தாலும்) அழிக்கத்துணிவதைத் தேச பக்தியின் பேரில்கூட கொண்டாட முடியாது என்ற இடத்திற்கு உலகம் நகர்ந்துகொண்டிருக்கும் போது சாதிய ஆணவத்துக்காகத் தன்னையே பலியாக்கிக் கொள்ளத் துணிகிறவர்களுக்குச் சொல்லவேண்டிய செய்தி இதுதான்.

இப்படத்தில் வரும் அப்பா பாத்திரம் கவனமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அப்பாக்களின் பிரச்சனை சாதி மட்டுமல்ல என்பதை எதிர்த்தரப்பிலிருந்து சொல்லும்நேர்மை இயக்குநருக்கு வாய்த்திருக்கிறது. இறுதிக்காட்சியில் நாயகி அப்பாவுக்கும் காதலனுக்கும் தேநீர் வாங்கி வருகிறாள். இரண்டும் கண்ணாடிக் குவளைகள். இரண்டு குவளைகள். இரட்டைக் குவளைகள் அல்ல. ஒரே தரத்திலானவை. ஆனால் ஒன்றில் கருப்புத்தேநீர். அப்பா சொல்கிறார். பாக்கலாம்டே. வரும்காலத்துல எதுவேணா நடக்கலாம். குவளைகள் முன்னரங்கில் பிரதானமாய் தென்பட மூவரும் முதுகைக் காட்டியபடி நடக்கிறார்கள். அருகருகாக நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கிடையே கிலோமீட்டர் கணக்கில் இடைவெளி விரிந்து கிடப்பது நிதர்சனமாகக் கூட இருக்கலாம். ஆனால் இடைவெளிகள் குறைந்துவிட்டது என்ற நம்பிக்கையை தூவிச்செல்கிறார் இயக்குநர். அதுதானே ஒரு கலையின் வேலையாக இருக்க முடியும்.

எப்போதுமே விசயங்கள் மட்டுமே சினிமா அல்ல என்பதை நான் நம்புகிறேன். முதலில் அது சினிமா எனும் கலைவடியை எட்டியிருக்கவேண்டும். மற்ற பேச்செல்லாம் அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்பதே என் தரப்பு. நாய் அற்புதமான குறியீடாகவும் காட்சிப்பதிவாகவும் உருமாறியிருக்கிறது. வறண்ட செம்மண் வெளிகளில் தாவிப்பாயும் நாய்களின் காட்சிகள் அற்புதமான ஓவியப்படிமங்களாகப் பதிந்துவிடுகின்றன. மண்மனத்திற்கு எதிர்த்திசையில் பின்னனி இசை வடிவமைக்கப்பட்டிருப்பது திட்டமிட்டதாகத் தெரிகிறது. இந்த ‘ஹைபிரீட்’ இசை அருமையாக பொருந்திபொருயிருக்கிறது. இரண்டு பாடல்கள் அபாரமானவை. கூத்துப்ப்பாடலாக வருவது அப்பட்டமான நாட்டார் இசை என்றால்… நான் யார் எனும் பாடல் அப்பட்டமான போஸ்ட் மார்டன். ‘நான் யார்’ இந்த ஆண்டின் சிறந்த ‘திரைப்படக் காட்சிப் பாடல்’ என்பேன். கொஞ்சம் திகட்டும் அளவுக்கு குறியீடுகள். குறைத்திருக்கலாம்.(பாடல் வரிகளையும் இசை வகைமையையும் பார்க்கும்போது ‘நான் யார்’ பாடலை தமிழின் முதல் ‘தலித் பாப் பாடல்’ என்று சொல்லலாம்.( சில மாதங்களுக்கு முன் மகாராஷ்றாவில் எழுச்சிபெற்றுவரும் ‘தலித் பாப்’ இசைபற்றிய கட்டுரை ஒன்றைப் பார்க்க நேர்ந்தது) ராப் (லயத்தோடு பேசுவது) எல்லா இடங்களிலும் பொருந்தி வருவதில்லை. கருப்பி என்ற பாடலை என்னால் ரசிக்க முடியவில்லை. கருப்பிக்கு நடக்கும் ஈமச்சடங்கும் எதற்காக என்று விளங்கவில்லை.

பரியனின் தந்தை எனும் கூத்துக்கலைஞர் பாத்திரமும் அதை ஏற்று நடித்திருக்கும் உண்மையான கூத்துக்கலைஞரும் அவர் நிர்வாணமாகத் துரத்தப்படுவதும் விவரிக்கமுடியாத துயரத்தை மனதில் ஏற்றிவிடுகிறது. படத்தின் மிக வலுவான பாத்திரம் இவர்தான்.

திரையரங்கில் காணக்கிடைத்த பார்வையாளர்களின் கனத்த அமைதியும், எத்தரப்பிலிருந்தும் நிராகரிப்புக்குரல்கள் எழாமல் இருப்பதும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.
வாழ்த்துகள் மாரிசெல்வராஜுக்கு. அதைவிட ரஞ்சித் எனும் தயாரிப்பாளர் இல்லை என்றால் இப்படம் சாத்தியமாகியிருக்காது என்பதால் அவருக்கு நம் முதல் வாழ்த்தைச் சொல்லவேண்டும்.