FEATUREDLatestNature

பட்டைக் கழுத்து ஆந்தை Indian scops owl

Spread the love

பட்டைக் கழுத்து ஆந்தை – (Indian scops owl): பறவை அனுபவம்
Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம்!… சாலையோரத்தில் காக்கைக்கும் ஆந்தைக் குட்டிக்கும் இடையே சண்டை… வாகனத்தை நிறுத்திவிட்டு, கேமிராவை ‘செட்-அப்’ செய்துக்கொண்டு அருகில் ஓடினேன். காகம் பயந்து ஓடிவிட, அதனினும் அதிகம் பயந்த ஆந்தைக்குட்டி அதிர்ச்சியில் அவ்விடத்திலேயே நிலைகொண்டது… ஒருநிமிடம் இரண்டு நிமிடம் அல்ல… ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள்!… எனக்காக…

வெகு அருகில் சென்று ஆந்தையைப் படம் பிடிக்க முடிந்தது… அணு அணுவாக அதன் இயங்கியலை ரசிக்க முடிந்தது. கேமிரா வாங்கி ஓரளவு பழகிவிட்டாலும், இந்த ஆந்தையை வெகு அருகில் படம் பிடிக்கும் போது, கைகளில் லேசான உதறல்!

பின்பக்கம் இருந்து நான் ‘கிளிக்’ செய்ய, சட்டென தலையை அப்படியே மின்னல் வேகத்தில் பின் திருப்பி, கேமிராவைப் பார்த்து ஆந்தை ஒரு லுக் விட கிரங்கிப்போனேன்!

’அடிபட்ட ஆந்தைப்பா… அது அவ்ளோ தான்…’ என்று ஒருவர் ஜாதகம் சொல்ல, தொடர்ந்தது எனது கிளிக்கிங் வேலை… நான் ஆந்தையை சுற்றி சுற்றி படம் எடுக்க, அது உடலைத் திருப்பாமல் தலையை மட்டுமே சுற்றி சுற்றி எனக்கு முகம் கொடுக்க, கேமிரா குதூகலித்தது. ’அடிபட்ட ஆந்தைதானே, ஒன்றும் செய்யாது’ என எவ்வளவு அருகில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகில் சென்று படம்பிடித்தேன்!… அதன் கழுத்துத் தசைகளின் அசைவுகள் இன்னும் என கண்ணுக்குள்ளே!

கால் மணிநேரத்திற்குப் பிறகு, லேசாக முன்னோக்கி பறப்பது போல பறந்து, அப்படியே திரும்பி பின்னிருந்த மரக்கிளையில் தஞ்சம் அடைந்தது. முதலில் என்னை நோக்கி பாய்வதைப் போல ஒரு கிலி ஏற்பட்டாலும், ‘அப்பாடா ஆந்தை காயம் படவில்லை’ என்பதில் மகிழ்ச்சி எனக்கு! மரத்தில் சென்று அமர்ந்தும் அதன் மிரட்சியான பார்வை கேமிராவுக்குள் ஊடுருவியது… ‘இன்னுமாடா நீ கிளம்புள…’ இது ஆந்தையின் மைண்ட் வாய்ஸ்!…

சட்டென திரும்பும் த்ரிஷாவைப் பார்த்தவுடன், ’அவ என்ன பாத்துட்டா சார்…’னு வர விண்ணைத்தாண்டி வருவாயா டயலாக் போல, சட்சட்டென திரும்பிய ஆந்தையை பார்த்ததும், ‘அவ என்ன பாத்துக்குட்டே இருக்காமா…’ என மனைவியிடம் சிரித்துக்கொண்டே சொல்லவும் முடிந்தது.

ஆந்தையைப் பார்த்ததும் புகைப்படம் எடுக்கலாம் என்று தான் அருகில் சென்றேன். ஆனால் பறவை ஆர்வலர்களிடம் பேசிய பிறகு தான் புரிந்தது, என்னால் காக்கையிடமிருந்து அந்த ஆந்தைக் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று!…

உருமறைத் தோற்றம் காரணமாக அவ்வளவு எளிதாக கண்டுப்பிடிக்க முடியாத ஆந்தையினம்… பாவம் அதற்கான வாழ்வியல் போராட்டத்தில் எனக்கு தரிசனம் கொடுத்திருக்கிறது… நெஞ்சுப் பகுதியில் வரிகள், கழுத்துப் பகுதியில் பட்டை… கொம்பு போல சிறிய சிறகுத் தூவிகள்… பட்டைக் கழுத்து ஆந்தைக்கான அடையாளம்…

’மற்ற இரைகொல்லிப் பறவைகளிடம் சிக்காமல், நீடூடி வாழ்ந்து பலருக்கும் தரிசனம் கொடுத்து மகிழ்விப்பாயாக…’ என வாழ்த்தும் உன் ரசிகன்…

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
https://www.facebook.com/drvikramkumarsiddha?__tn__=%2CdC-R-R&eid=ARDDlPOL8BJ3zFEKkUG8ZxgMBL8SHFnAh_XpkecANWItIxe6cvTleYJrP8Aqf93hphlUosIlbc3_3qKu&hc_ref=ARSbl4iR53IaojbGOVsL4C82qAZ4nOdq8rYyJ_AhvqKq0hDS4gMGCDX-4l0IHw5boDw&fref=nf

Leave a Reply