LatestNewsPolitics

நைஷ்டிக பிரம்மசாரி யார்

Spread the love

அய்யப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி எனவேதான் இளம் வயதுப் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது.மீறி வந்தால் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்ற ஓயாத கூச்சலை கேட்கிறோம் .எனவே,அந்த நைஷ்டிக பிரம்மச்சரியத்தை பற்றியும்,அதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும்,இந்த கதையை படிக்க நேர்ந்தது. சற்று நீளமான கதைதான்! கொஞ்சம் பொறுமையோடு படியுங்கள்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், உண்மையான நைஷ்டிக பிரம்மச்சரியத்தின் அர்த்தப்படி் அய்யப்பனை கேவலப்படுத்துகிறவர்களின்  புனித பித்தலாட்டத்தை கிழித்து தொங்க விடுகிறது! படியுங்கள்.!!

“ஒரு நாள் பிரம்ம லோகத்தில், ப்ரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையே நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதில் ஓர் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சைக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடு நாரதர் துர்வாச முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார்.

நாரதரை வரவேற்று, வந்த விஷயம் என்ன என்று கேட்டார் துர்வாசர். பிரம்ம லோகத்தில் நடந்த சர்ச்சையை விளக்கி, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார் நாரதர்.

சந்தேகமின்றி நைஷ்டிக பிரம்மசாரி அந்த பகவான் “ஸ்ரீ கிருஷ்ணரே” தான் என்றார் துர்வாசர். அதற்கு விளக்கம் கேட்டார் நாரதர்.

நாரதா, பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி.

பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறார்.

அவர் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவர் கண்களுக்கு ஒன்றுதான். அவர் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை.

அவரை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே!

அவர் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள்.

பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவரே “நைஷ்டிக பிரம்மசாரி” என்றார் துர்வாசர்.

நாரதா, உனக்கு இன்னுமொரு உண்மையையும் விளக்குகிறேன். திரேதாயுகத்தில் பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரித்த போது, தந்தை சொல் காக்க வனவாசத்தை மேற்கொண்டார். வனவாசத்தில் ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் தபஸ்விகளும் தங்களுடன், தங்கி வாழ வேண்டும் என விரும்பினர். ஆனால் ஸ்ரீ ராமன், ஓர் இடத்திலும் தங்காமல், வனத்தில் திரிந்து கொண்டிருந்தார். அப்போது தபஸ்விகளும் முனிவர்களும் பகவானின் பிரேமைக்காகவும் அன்புக்காகவும், ஆலிங்கனத்துக்காகவும் ஏங்கித் தவித்தனர்.

அவர்களுடைய தவத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே அடுத்த யுகத்தில், அவர்களை பிருந்தாவனத்தில் கோபிகளாக்கி, ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்பாலும் பிரேமையாலும் ஆட்கொண்டிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரையில் கோபியர் எல்லாம் அவருடைய பக்தர்கள். அவருடைய பிரேமை பவித்திரமானது. அதில் காமத்துக்கு இடம் இல்லை. எனவே அவரே “நைஷ்டிக பிரம்மசாரி” என விளக்கம் அளித்தார் துர்வாசர்.

ஆண், பெண் என்ற சரீர பேதத்தை மறந்து பார்க்கும்போதுதான் ஸ்ரீகிருஷ்ணரை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் ஜீவாத்மாக்களை உய்விக்க வந்த பரமாத்மா என்பதை நாரதர் புரிந்து கொண்டார்.

பின்னால் குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன், எல்லா ஜீவாத்மாக்களிலும் தான் நிறைந்திருப்பதையும், தனக்கு பேதங்கள் எதுவும் கிடையாது என்பதையும் எடுத்துக் கூறினார்.

அந்தத் தத்துவத்தை இந்தச் சம்பவத்தின் மூலம் நாரதர் உணர்ந்து கொண்டார். நாரதர் துர்வாசருக்கு நன்றி சொன்னார். அப்போதும் “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்றார் துர்வாசர்.

இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்த மகிழ்ச்சியில் நாராயண நாமத்தை பாடிக் கொண்டே பிரம்மலோகம் சென்றார் நாரதர். தன் தந்தை பிரம்மதேவரை சந்தித்து, இந்த அரிய சந்தர்ப்பத்தை தனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.”