நூறு நானோ மீட்டர் கொலையாளி கொரோனா

Spread the love

நூறு நானோ மீட்டர் கொலையாளி-கொரோனா
– ராஜ்சிவா(ங்க்)

வைரஸை நேரடியாக அழிக்கப் பெரும்பாலும் மருந்துகள் கிடையாது.

வைரஸ் என்பது பாக்டீரியா போன்று அன்டிபயாட்டிக் கொடுத்து அழிக்கக் கூடிய ஒன்றல்ல. அதுவொரு உயிரியும் கிடையாது.

வைரஸ் என்பது பாக்டீரியா போன்று அன்டிபயாட்டிக் கொடுத்து அழிக்கக் கூடிய ஒன்றல்ல. அதுவொரு உயிரியும் கிடையாது. தான் வாழ, இன்னுமொரு உயிர்க் கலத்தின்மேலேறிப் பயணம் செய்யும் தேரோட்டி. இந்த வைரஸை அழிக்கும் மருந்து வெளியேதான் இல்லையேயொழிய, அது நம் உடலுக்குள் இருக்கிறது. அந்த மருந்துதான் நம் ‘நோயெதிர்ப்புச் சக்தி’ (Immune sytem). சிஸ்டம் சரியில்லை என்று நாட்டை நடத்திவிடலாம். ஆனால், இந்த சிஸ்டம் சரியில்லாவிட்டால் உயிர் வாழமுடியாது.

மனித உடல் ஒரு ஆச்சரிய அட்சய பாத்திரம். எந்த நோய்க்கு, என்ன மருந்து தேவையெனத் தெரிந்து, அதை வழங்கக்கூடிய கற்பகதரு. ஆனாலும், அதுவொரு சோம்பேறி. எதையும் சட்டை செய்யாமல் நடக்கும் ஆமை. ஏதாவது ஒரு வைரஸ் நோய் தாக்கிவிட்டால், “போய்ச் சண்டையிட்டு வா!” என வெண்குருதித் துணிக்கைகளைக் கைகாட்டி அனுப்பி வைக்கும். அவ்வளவுதான், மீண்டும் தூக்கம். கேம் ஆஃப் த்ரோணின் வடக்குப் பெருஞ்சுவரைக் காக்கும் வீரர்கள்போல, இட்ட பணிக்கு யுத்தம் செய்து செத்துப் போகும் இந்தக் குருதித் துணிக்கைகள். சண்டையின் தீவிரத்தில் உடல் சூடாகும். அதற்குமேல் எதுவும் நடக்காது. மேலும் மேலும் சண்டை மட்டும் நடந்து கொண்டிருக்கும். ஒரு பயனும் இல்லை.

சண்டையில் வெப்பம் அதிகரித்துக் காய்ச்சல் என உடம்பு உதறும். அப்புறம் மருத்துவரிடம் போகவேண்டும். சிஸ்டம் சரியில்லை என்பதை மருத்துவர் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார். அதற்கு எந்த மருந்து கொடுக்கலாம் என்பதையும் அறிந்து வைத்திருப்பார். அவருக்கும் தெரியும், வைரஸை நேரடியாக அழிப்பதற்கு மருந்தே கிடையாதென்று. ஆனாலும் அவர் மருந்து கொடுப்பார். அந்த மருந்து எதற்குத் தெரியுமா? தூங்கிக் கொண்டிருக்கும் நம் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடுவதற்குத்தான். மருத்துவர் கொடுக்கும் மருந்தும் வைரஸை அழிப்பதில்லை. நோயெதிர்ப்பு சக்தியை மட்டும் தூண்டிவிடும். அந்த சக்தியே வைரஸ்களைச் சுற்றிவளைத்துக் கொல்கின்றன.

வைரஸ்களின் மனிதனுடனான யுத்தம் அத்துடன் முடிந்துவிடுவதில்லை. இப்படி வந்தால் இனி வேலைக்காகாது என்று, வேறு வடிவமெடுக்கும். புதுப் பெயருடனும், புதுப் பொலிவுடனும், புதிய வைரஸாக மேலதிக வீரியத்துடன் மனிதனைத் தாக்க முயற்சிக்கும். இப்போது, முதலில் கொடுத்த அதே மருந்தைக் கொடுத்து உருவாகும் நோயெதிர்ப்பு சக்தியினால் இந்தப் புதிய வைரஸைக் கொல்ல முடியாது. அதற்குப் புது விதத்தில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும். அதனால், அதற்கெனப் புதிய மருந்து தேவையாகிறது.

இப்படி ஒவ்வொரு வகை வைரஸ் தொற்றுக்கும் ஒவ்வொரு வகையில் புதிய மருந்து தேவைப்படுகிறது. நம்மவர்களில் சிலர் சொல்வதுபோல, டெங்கு வைரஸுக்குக் கொடுக்கும் நில வேம்பை, கொரோணாவுக்குக் (Covid 19) கொடுக்க முடியுமோ தெரியாது. அதற்கெனப் புதியவகை மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இதுவரை நம்மிடம் எத்தனை வகை மருந்துகள் இருந்தாலும் இந்தக் கொரோணா வைரஸை, எந்தவகை மருந்தினால் அழிக்கலாம் என்பதை, அந்த நோய் வந்த நூறுக்கும் மேற்பட்டவர்களுக்குக் கொடுத்து, அதில் பெரும்பாண்மையானவர்கள் பிழைத்தால், அந்த மருந்தே சரியானது எனக் கொள்ளலாம்.

எனவே, கொரோணா வைரஸுக்கு மருந்து எங்களிடம் ஏற்கனவே உண்டு என்று சொல்வது பொறுப்பான விசயமில்லை. அவற்றை நோயுள்ள பலருக்குக் கொடுத்து நிரூபணம் செய்தால் மட்டுமே பொறுப்பாகும். அது நிரூபணமாகினால், அனைவருக்கும் மகிழ்ச்சியே!

நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தையோ, உணவு முறைகளையோ இங்கு குறைத்துச் சொல்லவில்லை. அது எனக்குக்கூட உயர்ந்ததே! நானும் அதை மதிக்கிறேன். நம் உணவு வகைகள் நோயெதிர்ப்பு சக்தியைப் பொதுவாகத் தூண்டி வைத்திருக்கக் கூடியவைதான். ஆனால், இந்த வைரஸுக்கு அவை சரியானவைதான் என்று போகும்போக்கில் சொல்லிவிடக் கூடாது. மருத்துவர்களுக்கும், மருந்தைக் கையாள்பவர்களுக்கும் கூடுதலான பொறுப்புணர்வுகள் தேவை. அவர்களை மக்கள் கண்மூடிக்கொண்டு நம்புவார்கள். கடவுளுக்கும் நிகரானவர்களாகக் கருதுவார்கள். அதனால், அதற்குரிய பொறுப்புடன் அவர்களும் நடக்க வேண்டும். எழுந்தமானத்திற்குக் கொரோணா வைரஸுக்கு மருந்து இதுதான் என்று சொல்லிவிடக் கூடாது.

நம் பாரம்பரிய மருத்துவத்திலும், உணவிலும் கொரோணா நோய் சுகமானால், எனக்கும் அது பெரு மகிழ்ச்சிதான். அதன் பெருமை எனக்கும் உண்டுதான்.

@ ராஜ் சிவா

Leave a Reply