நீரினை தேக்கும் சோலைக்காடுகளும் இயற்கை பேரிடர்களும்

Spread the love

நீரினை தேக்கும் சோலைக்காடுகளும்
இயற்கை பேரிடர்களும்.
***************************************
இயற்கையே ஒரு அற்புத வனம் மனிதக்காலடி படா காலத்தில். அவ்வற்புத வனங்களின் தொடர்ச்சியே மேற்கு தொடர்ச்சி மலை. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அற்புதங்களின் ஒன்றே சோலைக்காடுகள்.

சோலைக்காடுகள் தனித்துவம் என்ன ?
*******************************************
சோலைக்காடுகள் மோன்டேன் டிராப்பிக்கல் புல்வெளிகளில் ஒருவகை காடுகள். ஆப்ரிக்கா அமெரிக்கா மற்றும் ஆசிய கண்டத்திலுள்ள மோன்டேன் காடுகளிலிருந்து சற்றே வேறுபட்ட காடுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள Shola forests.

முப்பத்தைந்தாயிரம் வருடங்கள் முன் மனிதக்காலடிகள் படா காலம் முன்பிருந்தே உருவான அரிய வனங்கள் சோலைக்காடுகள். இவை நீரினை உருவாக்கும் அற்புத சோலைகள். உருவாக்கிய நீரினை சேமிக்கும் தலைமேலுள்ள நீர்த்தொட்டிகள் ( overhead water tank ). இவை முழுவதுமாக இருந்தவரை இயற்கை பேரிடர்கள் நேர்ந்தில்லை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில். ஒற்றைத்தாவரங்களும் பணப்பயிர்களும் வந்த பின்னரே சோலைகள் உருக்குலைந்து விட்டது. அதுவே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் சாவு மணியாக ஒலிக்கிறது.

சோலைக்காடுகள் எங்கெங்கு உள்ளது உலகில் ?
*******************************************
நீலகிரி உயிர்கோளகம் எனும் நீலகிரி பயோஸ்பியர் தான் சோலைகாடுகளின் மொத்த இருப்பிடம். தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகா மலைப்பகுதிகளே சோலைகளின் ஆட்சியகம். இவ்விடங்களில் உள்ள வனப்பகுதிகளில் உயர்வான இடங்களில் அமைந்துள்ள அத்தனை வனங்களுமே கிட்டத்தட்ட சோலைக்காடுகள் தான் ஆங்கிலேயர்கள் காலடி படும்முன். அதன்பின் ஆரம்பம் சோலைக்காடுகளின் அழிவு.

மனிதனின் சுவாசப்பை நுரையீரல் ஆனால் உலகின் சுவாசப்பை சோலைக்காடுகள்.

அவை தற்போது மிகுதியாக உள்ளது நம் நாட்டில் நம் மாநிலத்தின் நீலகிரி மலைகளிலேயே என்பது பலரும் அறியாத ஒரு விடயம் என்பது வேதனைக்குரியதே. சுவாசப்பை கோளாரடைந்தால் மனிதன் அழிவான், அதுபோல் உலகின் சுவாசப்பை கோளாரடைந்தால் உலகிற்கே தீங்கு ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வனங்கள் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, அகஸ்தியமலை, பழனிமலை, வால்பாறை வனப்பகுதியில் அடர்த்தியாக இருந்தது. கேரளத்தில் மூணாறு மலைப்பகுதிகள், இடுக்கி மாவட்டம், அமைதி பள்ளத்தாக்கு, பரம்பிகுளம் பகுதிகளில் இருந்தது. தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானலில் முற்றிலும் அழித்துவிட்டோம். வால்பாறை ஆனைமலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் உள்ளன. நீலகிரியிலும் எழுபது சதவீதம் அழித்துவிட்டோம், மீதமுள்ள சோலைக்காடுகள் அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து, மேற்கு நீர்பிடிப்பு பகுதிகள், லாங்க்வுட் சோலா, கோடநாடு, கீழ் கோத்தகிரி போன்ற இடங்களில் உள்ளன. கேரளத்தில் மூணாறு பகுதியிலுள்ள மன்னவன் சோலா, புல்லரடி சோலா, ஆனைமுடி சோலா, பாம்படம் சோலா, இடவரா சோலா மற்றும் வயநாட்டிலுள்ள பிரம்மகிரி மற்றும் செம்பரா மலைகளில் சோலைக்காடுகள் உள்ளன.

சோலைக்காடு எனும் அதிசயம்.
***********************************
இச்சோலைவனங்கள் இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள வனம்.

இவ்வனங்களின் சீதோசன நிலை 15-20 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது அருகிலுள்ள பகுதிகளில் பூஜியத்திலிருந்து முப்பது டிகிரி வரை சீதோசன மாற்றம் ஏற்பட்டாலும் இவ்வனங்களில் மேற்கூறிய சீதோசமே என்றும் இருக்கும். இந்த சீதோசன நிலையாலே இப்பகுதியில் இயல்பாகவே மழையின் அளவு அதிகம். சுமாராக வருடம் மூன்றாயிரம் மிமி அளவு மழை இங்கு பொழியும்.

இவ்வனங்கள் இரட்டை அடுக்கு வனங்கள். மேலடுக்கு பத்து மீட்டர் உயரமுள்ள குட்டை மரங்கள் கொண்டது. கீழ் அடுக்கு புல், செடி, கொடி மற்றும் அடர் புதர்களையும் தரையினில் புற்கள் ஆல்கே எனும் பூஞ்சை பாசிகளும் நிறைந்தது.

மேலடுக்கு தாண்டி ஒரு கதிர் சூரியவொளி கீழடுக்கை அண்டாத அடர்வனம் சோலைவனம்.

இவ்வனம் காற்றிலுள்ள ஈரப்பசையையும் தம்முள் இழுத்து சேகரித்துக் கொள்ளும். ஆகையால் மழை இல்லாத பொழுதிலும் நீரினை பஞ்சுக்குள் சேகரிப்பதை போல் புல்லுக்குள்ளும் உதிர்ந்த இலைகளிலும் சேகரிக்கும் வனமாக உள்ளது.

இவ்வனப்பகுதியே நீலகிரியில் உள்ள அத்தனை ஓடைகளின் பிறப்பிடம். பன்னிரண்டு ஓடைகள் உருவாகி பலயிடங்களில் ஒன்றாக இணைந்து பவானி ஆறு எனும் பிரம்மாண்டத்தை இவ்வனம் உருவாக்குகின்றது. இதுபோல அகஸ்தியவனம் பூங்குழி பகுதிகளில் உருவாகும் நதிகளே தாமிரபரணி மற்றும் வைகை நதி.

இவ்வனப் பகுதியில் வெயில்காலம் குளிர்காலம் என்று இருகூரு இல்லை.
இவ்வனங்களில் மழைக்காலம் மழைபொழியாத காலம் என்றிரண்டு காலநிலையே உள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை மழையில்லா காலம். மே முதல் டிசம்பர் வரை மழைக்காலம்.

நதிகளின் தாய் சோலைவனம்.
**********************************
நீலகிரியில் உள்ள சோலைக்காடுகளே பவானி ஆற்றின் பனிக்குடம். இதோ பனிக்குடம் என்னும் தாயின் அற்புத பிரதேசம் தாண்டி வந்து இதை வாசித்துக்கொண்டிருக்கும் முகமறியா சமகால நண்பனே ! வாசித்த பின் உன் ரீதியான பிரதிபலிப்பை நான் எதிர்நோக்குகிறேன். ஏதேனுமொன்றை சமகால சமுதாயத்துக்கு தந்து போக !

மனித உயிரின் பிறப்பிடம் எவ்வாறு தாயின் கர்ப்பப்பையை மையமிட்டிருக்கிறதோ அதுபோலவே ஆதி காலந்தொட்டு பவானி நதியின் பிறப்பிடம் நீலகிரி மலைப்பிரதேசத்தின் சோலைக்காடுகளை
மையமிட்டே அமைந்திருக்கிறது.

சேயின் நலமும் பிரசவத்தின் சுகமும் கர்ப்ப்பையினுள் உள்ள பனிக்குடத்தின் நீர் நிலையை பொறுத்தே அமைகிறது மனிதர்களுக்கு. அதுபோலவே தமிழகத்தின் இரண்டாம் பெரிய நதியான பவானி ஆறு சமநிலத்தினில் தவழ்வதும் ஓடுவதும் மலைதேசத்தில் உள்ள அதன் பிறப்பிடமான சோலைக்காடுகள் எனும் நீர்க்குடத்தை நம்பியே உள்ளது.

இது மட்டுமா சோலைவனங்கள் எவ்வளவு அதிகமான மழை பெய்தாலும் அம்மழை நீரினை தம்மடியில் சேகரித்து விடும் தன்மையுள்ளது. ஆகையால் சேமித்தது போக மீதியே ஓடைகளாகவும் ஆறாகவும் சமதளம் நோக்கி ஓடுகிறது. ஆகையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை சோலைக்காடுகள் தடுக்கிறது. ஆகையால் இதன் பெயர் Overhead water tank. சேகரித்த நீரினை தம்முள்ளேயே பாதுகாத்து மழைக்காலம் இல்லா நேரங்களில் சிறிது சிறிதாக வெளியேற்றி வற்றா ஓடைகளை தம்முள் கொண்டுள்ளது சோலைக்காடுகள். அதனால் தான் பவானி, தாமிரபரணி வைகை போன்ற ஆறுகள் ஜீவந்திகள். ஆனால் வைகை உருவாகும் இடத்திலுள்ள சோலைவனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதால் வைகை சீவத்தன்மையை இழந்துவிட்டது.

சோலைக்காடுகளின் அழிவும் பேரிடர்களும்.
***********************************
சோலைக்காடுகளை பாதுகாக்காவிடில் இரு விதமான பேரிடர்கள் ஏற்படும், ஒன்று பற்றாக்குறையினால் ஏற்படுவது மற்றொன்று மிகுதியால் ஏற்படுவது.

சரியாக கவனித்து பாருங்கள், ஆங்கிலேயர்கள் காலடி படும்முன் வெள்ளத்தினால் ஏற்படும் பேரிடர்கள் என்பது நீலகிரி மலையில் இல்லை எனலாம். ஆனால் அதன் பின்னர் எத்தனையோ காட்டாற்று வெள்ளங்கள், நிலச்சரிவுகள் என பல வகையினில் பாதிப்புக்கு நீலகிரி மலை ஆட்பட்டிருக்கின்றது. ஏன் ? சோலைக்காடுகள் சூறையாடப்பட்டதே காரணம்.

இருநூறாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் நீலகிரி மலையில் காலடி எடுத்து வைத்த பின்னே இவ்வனங்களின் அழிவு ஆரம்பமானது.

ஆங்கிலேயர்கள் இவ்வனங்களின் தன்மை அறியாது சொலைக்காடுகளை அழித்து யூகலிப்டஸ், வாட்டில், பைன் மற்றும் போன்ற மரங்களை காடுகளில் நட்டனர். இதன் பின்னர் நீலகிரி, மூணார் மற்றும் வால்பாறை போன்ற இடங்கள் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும் பயிரிட்டு மேம்படுத்தவும் ஏதுவாக இருப்பதால் மேலும் சோலைக்காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை உருவாக்கினர். இதனால் பாதிக்கும் மேலான சோலைவனங்கள் அதன் செயலறியாது அழிக்கப்பட்டன.

பின் வந்த காலங்களில் ஆங்கிலேய காய்கறிகளான பீன்ஸ், கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பணந்தரும் விவசாயம் செயல்பாட்டினால் மேலும் சோலைக்காடுகள் அழிந்தன.

இதனால் நீலகிரி பகுதியில் மழை பெய்யும் போது பொழிந்த நீரினை சேகரிக்க இயலாத ஒற்றைத்தாவர வனங்களும் பணப்பயிர் நிலங்களும் நீரினை அப்படியே கீழிறக்குகின்றது. இதனால் தான் காட்டாற்று வெள்ளங்கலும் நிலச்சரிவுகளும் மிகுதியாக உள்ளது தற்காலத்தில்.

சமீப காலத்தில் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பேரிடரின் காரணங்கள் பல இருந்தாலும் அதி முக்கியமான காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலைவனங்கள் மற்றும் சதுப்புநில காடுகளின் அழிவே முதன்மையானது. கேரளத்தின் ஐந்தில் ஒரு பகுதி சோலைக்காடுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள். இவை கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது கடந்த பத்து வருடமாக. இதனால் அதே அளவு மழைப்பொழிவு இருந்தாலும் நீர் தேக்கும் வனங்கள் இல்லா நிலையில் வெள்ளப்பெருக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதில் மிகப்பெரிய பேரிடராக இந்த வருடம் கேரளத்தில் ஏற்பட்ட நிகழ்வு.

சோலைக்காடுகள் அழிந்தால் இயற்கை தந்த தற்காப்பு அற்றுப்போய் வெள்ளங்களும் நிலச்சரிவுகளும் அதிகரிக்கும் என்பது கண்கூடா கண்ட காட்சிகள் தற்காலமாக.

இரண்டாவதாக பற்றாக்குறையினால் ஏற்படும் பேரிடரை காண்போம். சோலைக்காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் பாதிப்பையும் சோலைவனங்களின் பெருமையினையும் உணர்ந்த உலக நாடுகள் இதனை மேலும் உருவாக்க பல விதங்களில் அரசுக்கு உதவி நல்கியது. இதன் பிறகாவது நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் என்ன ஆயிற்று சோலைக்காடுகள் உருவாக்கும் திட்டம் ?

முப்பது வருடங்கள் முன்பு மூவாயிரம் சிற்றோடைகள் சோலைவனத்தின் நீர்ப்பிடிப்பு சதுப்புநிலங்களில் உருவாகின. தற்போது வெறும் ஐநூறு முதல் ஆயிரம் சிற்றோடைகளே உள்ளது. இவ்வோடைகளே பைகாரா, கல்லட்டி, மோயார், காட்டேரி, குந்தா மற்றும் கல்லாறு போன்ற சிற்றாறுகளை உருவாக்கி பவானி நதியாக மாவட்டங்கள் நான்கிற்கு தாகம் தணிக்கிறது.

தற்போதைய சோலைவனங்களின் நிலை.
***************************************
சோலைவனங்களின் அற்புதங்கள் தெரிந்த பின்னர் நீலகிரியின் இழந்த பெருமையை நிலைநாட்ட அல்லவா எல்லா பணிகளும் இருந்திருக்க வேண்டும். ஆனால் பல வகைகளில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்பதே மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது.

அதன் பின்னர் இப்போது நட்சத்திர உணவு விடுதிகளிலும் பீட்ஷா பர்கர் கடைகளுக்கும் தேவையான ப்ரோக்கோலி, சௌ சௌ, ஜுக்கினி மற்றும் செலரி போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகிறது.

இது மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காரனேஷன் வகை பூக்களும் அதிகமாக வளர்க்க படுகிறது.

மேற்கூறிய காய்கறிகளும் பூவும் வளர்க்க அதிகப்படியான நீர் தேவைப்படுகிறது. கூக்கல்துறை போன்ற இடங்களில் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் மேலான ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இதன் மூலம் சதுப்புநிலத்தின் நீர் மிக அதிகமாக உறிஞ்சப்படுகிறது.

அதிக மக்கள் உபயோகிக்காத இவ்வகை விவசாயத்தால் சோலைக்காடுகளின் சதுப்பு நிலங்கள் பாழாகி வருகிறது. இது மட்டுமல்லாது பல இடங்களில் சதுப்புநிலங்களில் இருந்து வரும் நீரோடைகள் கான்கிரீட் வாய்க்கால்களாக மாற்றப்படுவதால் நீரூற்று தடை செய்யப்படுகிறது. இதனால் இயற்கையாக உருவாக வேண்டிய சுனைகள் அடைபட்டு போயின.

இவை போதாதென்று பல நீரோடைகள் இருக்கும் இடங்களில் கான்கிரீட் சொகுசு கட்டிடங்கள் முளைத்து விட்டன. இதனால் சதுப்புநிலக்காடுகள் அழிவுக்கு ஆளாகிவிட்டது.

இதே நிலை இனியும் தொடர்ந்தால் உலகின் இயற்கை அதிசயங்களின் ஒன்றான சோலைவனங்களை நாம் இழக்க நேரும் இனி வரும் காலத்தில். இதனால் பவானி நதியின் கர்ப்பக்கூடமாக இருக்கும் நீலகிரி முற்றிலும் செயலற்றுப் போய் கீழ் வரும் நதியின் நாதி அழிந்துவிடும்.

அப்படி ஒரு நிலை வந்தால் வற்றாத நதியாக திகழும் பவானியும் வற்றிவிடும் நிலை நோக்கி நாம் செல்ல நேரிடும். ஏற்கனவே வைகை நதி மழை இல்லா காலத்தில் வற்றிவிடுவது போல் பவானியும் ஆகும் காலம் வெகுதூரம் இல்லை.

பவானியின் பனிக்குடமாய் திகழும் சோலைக்காடுகளை நாம் காப்பாற்றாவிட்டால் ஜீவநதியும் ஜீவநாடியில்லாது அழிந்து விடும் நிலை அருகிலே.

மக்களும் அரசாங்கமும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே பவானித்தாயின் நீர் தமிழகத்துக்கு வளம் தரும். இல்லாவிடில் பற்றாக்குறையினால் வறட்சியும் மழைப்பொழிவினால் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் அதிகரிக்கும் இனி வரும் காலம்.

இனியும் உறக்கம் கொள்ளாமல் உரிய முன்னேற்பாடுகளைச் செய்தால் மட்டுமே நதியோடு நாம் வாழலாம்….
இல்லையேல்
நாடியடங்கி
நாதியற்றுப் போவோம் என்பதை மனதில் நிறுத்திக் கொள்வோமாக…!

#மரு_நா_மகேசுவரன்,
#சுப_மருத்துவமனை,
#மேட்டுப்பாளையம்.

Leave a Reply