FEATUREDLatestஅறிவியல்

துயில் வாதம் (Sleep Paralysis)

Spread the love

துயில் வாதம் (Sleep Paralysis) வாழ்க்கையில ஒரு தடவையாச்சும் இதை அனுபவிச்சுருப்பீங்க. ஏற்கனவே இதைப் பத்தி சொல்லிருக்கேன். அது எங்கே இருக்குன்னு தெரியலை மறுபடியும் சொல்றேன்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, சோஃபால உக்காந்துக்கிட்டு கன்னத்துல கையை வச்சுக்கிட்டு மடியில மடிக்கணிணியை வச்சுக்கிட்டு அப்டீயே தூங்கிப் போயிட்டேன் போல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் Edge of Tomorrowனு ஒரு படம் பாதி பார்த்தேன். TimeLoop கான்செப்ட்னு ஆர்வமா பார்த்தாலும் அப்பவே தூக்கம் வந்துச்சு. அதுனால அதை நிறுத்திட்டேன். அதுல Mimicsனு சில ஏலியன்கள் வரும். (Mimicsனு ஒரு இமேஜ் ப்ராசசிங் சாஃப்ட்வேரும் இருக்கு. என்ன ஒரு பொருத்தம்…)

தூக்கத்துல எனக்கு ஒரு கனவு. எனக்கு எதிர்ல இருக்குற டேபிள்ல இருந்து திடீர்னு அந்த ஏலியன் வருது. அது என் மேல தாவி என்னைப் பிடிக்கப் போகுதுன்னு எனக்குத் தெரியுது. அதைத் தடுக்கவும், தாக்கவும் நான் முயற்சி செய்ய நினைக்கிறேன் ஆனா முடியலை. என் கை கால்களை அசைக்க முடியலை. ஒரு மாதிரியான அவஸ்தையான நிலையில இருக்கேன். நான் செயல்படாட்டி அது என்னையக் கொன்று விடும்.

நான் கைகால்களை அசைக்கவே ரொம்பப் பிரயத்தனப்படுறேன். என்னோட சக்தி முழுதும் அதுல வீணாகுது. ரொம்ப அசதியா உணர்றேன். ஆனாலும், வாய் விட்டுக் கத்துறேன். அப்ப என்னைத் தாண்டி நண்பர்கள் சில பேரு நடமாடுறதையும் உணர்றேன். (நிஜமாவே அவங்க இருக்காங்க.) அவர்களை நோக்கி வாய்விட்டு சத்தமா கத்துறேன். ஆனா, ஒருத்தரும் என்னையக் கவனிச்ச மாதிரி தெரியலை.

என் சத்தம் வெளியில் கேட்பது, என் காது வழியாகவே எனக்குத் தெரிகின்றது. ஆனால், அவர்களுக்கு ஏன் கேட்கவில்லை என்பதுதான் புதிராக இருந்தது. என்னைத் தொடு, என்னைத் தொடு என்று கத்துகிறேன். என் நாக்கு வறண்டு போவது தெரிகின்றது. அந்த ஏலியன் என் மேல் பாய்வதற்கு எத்தனித்து ஒரிரு வினாடிகளுக்குள் இந்த நீண்ட அவஸ்தை எனக்கு நிகழ்கிறது.

பின் ஒருவழியாக என்னால் என் கைகால்களை அசைக்க முடிகிறது, வாயில் உமிழ்நீரும் சுரக்க ஆரம்பிக்கிறது. மெதுமெதுவே அந்த ஏலியன் காட்சி என்னை விட்டு அகன்றுவிடுகிறது. இப்பொழுது சுயநினைவிற்கு வருகிறேன்.

இது போன்று வேறு சில காட்சிகளோடு எனக்கு அடிக்கடி இது நிகழும். இது என்ன? எப்படி நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? எப்படித் தவிர்க்கலாம்?

துயில் வாதம் என்பது உறக்கத்தின் போது தற்காலிகமாக உடலை இயக்க முடியாமற் போகும் ஒரு நிலையாகும். இது சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரைக்கும் நீடிக்கக்கூடும்.

நமக்கெல்லாம் தெரியும், உறக்கத்தின் போது REM மற்றும் Non-REM என்று இருநிலைகள் உண்டு என்று. இதில் REM நிலையின் போதே கனவுகள் தோன்றுகின்றன. மிகக்குறுகிய நேரத்திற்குள் நீண்ட காட்சிகள் கனவாக வந்து போய்விடும். நமக்குத் தெரியாது.

நாம் உறங்கச் செல்லும்பொழுது நம் மூளை நம் மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் தளர்வுறச் செய்து ஆசுவாசப்படுத்தி வைக்கும். அவற்றை Mind Conscious மற்றும் Body Conscious என்று சொல்வோம். அப்படி உடல் தசைகள் தளர்வாக இருக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு பயங்கர கனவு காரணமாக, ஏதோ ஆபத்து நிகழப் போகின்றது என்று Mind Conscious முதலில் விழித்துக்கொண்டு Body Consciousயை அவசரகதியில் எழுப்ப முற்படும். ஆனால், மனம் விழித்துக்கொள்ளும் வேகத்தில் உடற்தசைகள் விழித்துக்கொள்ளாது.

அதுசமயம், மூளை உடலை அசை, கைகளைப் பயன்படுத்து, கால்களால் எட்டி உதை என்று தொடர்ந்து கட்டளைகள் கொடுத்தும், தளர்வுற்றிருக்கும் தசைகளும், இயக்க மோட்டார்களும் கீழ்ப்படிந்து செயல்படாவிட்டால், மூளையானது, ஆபத்தின் மீட்டர் அளவை உச்சம் என்று காட்டும்.

ஆபத்து, ஆனால் செயல்பட முடியாத அவஸ்தையான நிலையில் ஏற்படும் இக்கட்டைத்தான் நாம் துயில் வாதம் என்கிறோம். அது சமயம், மூளையானது விழித்துக்கொண்டிருக்கும். மற்ற புலனுறுப்புகளான காது, மூக்கு வழியாக புறச்சூழல் நிகழ்வுகளை உள்வாங்கும். நம் கனவில் அவற்றையும் ஒரு பகுதியாகச் சேர்த்து கனவை மிக சுவாரஸ்யப்படுத்தும் அல்லது பயங்கரப்படுத்தும்.

சமயங்களில் நாம் கண்களை விழித்துக் கூட பார்ப்போம். அது சமயம் பார்க்கும் சில காட்சிகளையும் உள்வாங்குவோம். ஆனால், உறக்கத்தில் இருந்து விழிப்போம் இல்லை. அக்காட்சிகளும் கனவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்படலாம்.

மூச்சு விடக்கூட முடியாதது போல் உணரலாம். இத்தோடு தொலைந்தோம் என்றுகூடத் தோன்றும். இனி பிழைக்கவே மாட்டோம் என்றெல்லாம் நினைப்போம். ஆனால், எல்லாம் தற்காலிகம்தான். அப்பொழுது நம்மை யாராவது லேசாகத் தொட்டாலே போதும். நம் தசைகளை இயக்கும் மோட்டார்கள் விழித்துக்கொண்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும். அவஸ்தை நிலையும் மறைந்து போகும். அப்படி யாரும் தொடாவிட்டாலும், கொஞ்ச நேரத்தில் மூளையின் தொடர் இம்சையால் நம் தசைகள் எப்படியும் இயக்கத்திற்கு வந்துவிடும்.

அது சமயம் சத்தமாகக் குரலெழுப்பவும் செய்வோம். ஆனால், வெளியே யாருக்கும் கேட்காது. அப்படியே கேட்டாலும், அது ஏதோ முனகுவதைப் போல இருக்கும். நமக்குதான் பெருங்குரலெடுத்துக் கத்துவது போல் தோன்றும்.

இது பெரும்பாலும், மிகக் கடுமையான வேலைப்பளுவிற்குப் பின்னர் உறங்கும்பொழுதும், சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கம் கெட்ட நிலையிலும் ஏற்படும்.

இதைத்தான் கிராமங்களில் அமுக்குவான் என்று சொல்வார்கள். ஒரு இயல்பான நிகழ்வை நாம் கேட்ட பேய்க்கதைகளின் காரணமாக, நம் மூளை அதனுடன் தொடர்பு படுத்தி, மோகினியோ, பிசாசோ நம் மீது அமர்ந்து கொண்டு நம்மை அமுக்குவதாக நினைத்துக்கொள்வோம்.

முறையான தூக்கம், காற்றோட்டமிக்க அறை, வசதியான நிலையில் படுக்கை போன்றவற்றால் இந்த துயில்வாதம் வராமல் தடுக்கலாம். வந்துவிட்ட நிலையில் அருகிலிருக்கும் யாராவது நம்மை லேசாகத் தொட்டாலே போதும். அதுவும் இல்லாவிட்டால், அமைதியாக, பகுதி பகுதியாக நம் உடல் உறுப்புகளை அசைக்க முயற்சி செய்யலாம். வீண்கற்பனைகளைப் புறந்தள்ளி, இது இயல்பான நிகழ்வு என்று திரும்பத் திரும்ப மூளைக்குச் சொல்லலாம். அல்லது, மூளையின் பிதற்றல்களை, கற்பனைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதுவாகவே சரியாகிவிடும்.

பாபு

Leave a Reply