FEATUREDLatestNature

தினம் ஒரு பறவை – மயில்கள்

Spread the love

தினம் ஒரு பறவை – மயில்கள்

by Kalai Selvan

இயற்கை எவ்வளவோ அழகை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது..பறவைகளும் அதிலோர் அங்கம்..

பார்த்தவுடன் மனதைக் கவரும் பறவையினத்தில் மயிலும் ஒன்று..மயில் பற்றி ஒரு கட்டுரை வரைக என்று தேர்வில் கேட்டால் அதன் அழகிய தோகையில் தொடங்கி புத்தகத்தில் வைத்தால் குட்டிபோடுவது (கிடையாது) வரையல்லவா எழுதித் தள்ளுவோம்?

அதுவும் நம் தேசியப் பறவையாயிருப்பதால் அனைவருக்கும் பரிச்சயம்..

நான் சிறுவனாயிருக்கையில் மயிலைப் பார்ப்பதே அரிதாயிருக்கும்..ஆனால் இப்பொழுதெல்லாம் செல்லும் இடமெங்கும் பஞ்சமின்றி மயில்களைப் பார்க்கிறேன்..குறைந்தபட்சம் 5 முதல் 10 க்குள் குழுவாக தரிசு நிலங்களிலும் நெல்வயல்களிலும் காண்கிறேன்.கடந்த 10 ஆண்டுகளில் மயில்கள் கணிசமாகவே பல்கிப்பெருகி இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவியலாது.

இந்திய மயில் / நீலமயில் ( indian peafowl விலங்கியல் பெயர் Pavo cristatus)

ஆண்மயிலை ‘Peacock’ என்றும் பெண்மயிலை ‘Peahen’ என்றும் குறிக்கவேண்டும்.இரண்டையும் சேர்த்து பொதுவாகச் சொல்லும்போது ‘Peafowl’ என்னும் பதம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவிற்கொள்க…

இந்தியாவிலுள்ள நீலமயில்களைப் (அதாவது கழுத்து முழுவதும் நீல நிறம்- பரவல் இந்தியா முழுவதும்) பற்றி தெரிந்துகொள்ளும் இவ்வேளையில், பச்சைமயில் (கழுத்துப்பகுதி பச்சை நிறம்- பரவல் இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா) என்றொரு இனமும், காங்கோ மயில் (ஆப்பிரிக்கா- காங்கோவைச் சேர்ந்தது) என்றொரு இனமும் இருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்..

உலக அளவில் இம்மூன்று வகைதான்..

“நான் சில இடங்களில் வெள்ளை மயில்களைப் பார்த்திருக்கேனே!”

என்று நினைப்பவர்களுக்கு…

வெள்ளை மயில் என்பது ஒரு இனமல்ல..அது நிறக்குறைபாடால் தோன்றும் வண்ணமே!..அறிவியலில் “அல்பினிசம்” பற்றிப் படித்திருக்கிறோம் இல்லையா? அது போன்றொரு மாற்றம்தான் இது..

தோகை விரித்தாடும் வெள்ளை மயில் - சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா
தோகை விரித்தாடும் வெள்ளை மயில் – சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வெள்ளை மயிலை வளர்க்கிறார்கள்.பேளூர் குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் சிலர் “வெள்ளைமயிலைப் பார்த்திருக்கிறோம்” என்று கொடுத்த தகவலின் அடிப்படையில், வாரவிடுமுறை நாள்களில் படப்பதிவுக்கருவியும் கையுமாய்ச் சுற்றிலும் பலனேதுமில்லை..

வெள்ளை மயில் - சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா
வெள்ளை மயில் – சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

மயில்கள் ஆதிகாலத்திலிருந்தே நம் வாழ்வோடு கலந்தவை..
முருகனின் வாகனமாக மயிலை நினைத்து வழிபடுவதும், மக்களில் சிலருக்கு ‘மயில்வாகனம்’, ‘மயில்சாமி’ என்றெல்லாம் பெயர் சூட்டுவதையும் பார்த்துள்ளோம்.

பழங்கால மனிதர்கள் குகைபோன்ற இடங்களில் தங்கியிருந்தபோது குகையின் மேற்பகுதி, பக்கவாட்டுப் பகுதிகளில் தம் எண்ணம்போல் ஓவியங்களைத் தீட்டினர்..பறவைகள்,விலங்குகள், வேட்டைக்காட்சிகள்,சடங்குகள் இவற்றை மையக்கருத்தாகக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் இதில் அடக்கம்..

மத்தியப்பிரதேசம் மாநிலம் சாத்பூரா தேசியப் பூங்காவிலுள்ள குகையில் அங்குவாழும் பூர்வகுடிகளின் முன்னோர்களால் வரையப்பட்டதாகச்சொல்லப்படும் பாறை ஓவியங்களில் மயில் இடம்பெற்றுள்ளது என்பதை
Meenakshi Dubey-Pathak என்பார் தன் கட்டுரையில் குறிக்கிறார்..அவர் வழங்கியிருக்கும் படத்தை இங்கு பதிவு செய்துள்ளேன்.

மத்தியப்பிரதேச பாறை ஓவிய மயில்கள்
மத்தியப்பிரதேச பாறை ஓவிய மயில்கள்

 

தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி கிராமத்தினருகே 2018ல் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால பாறை ஓவியத் தொகுப்பில் மயில்கள் வரைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..

தர்மபுரி மாவட்ட பாறை ஓவிய மயில்கள்- படம் - தென்கொங்கு சதாசிவம்
தர்மபுரி மாவட்ட பாறை ஓவிய மயில்கள்- படம் – தென்கொங்கு சதாசிவம்

இருப்பினும் நான் முதலில் சொன்ன மத்தியப்பிரதேச மாநில ஓவியத்தை ஒப்பிடுகையில் மயிலின் தோற்றம் இங்கு அவ்வளவு நேர்த்தியாயில்லை..காரணம் மயிலின் தோகை அவ்வளவு நீளமாகவோ அல்லது விரித்தபடியோ காட்டப்படவில்லை..வெறும் கொண்டை கொண்டு எவ்வாறு மயிலென உறுதிப்படுத்துவது? தற்போது அருகிவரும் கானமயிலையோ, வரகுக் கோழியையோ, காட்டுக்கோழியையோ, கோழியையோ குறிக்கலாம் அல்லவா? ( ஏனெனில் பெரிய உருவாய் கொண்டை கொண்டுள்ள பறவைகளாக இவை எல்லாவற்றையும் கருதலாம்).

தத்ரூபமாய் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெருங்கற்கால பாறை ஓவியமொன்றில் வெண்சாந்தினால் ஆனால் மயில்கள் ஓவியம் உள்ளது…மயில்களின் கூட்டமே இதில் வரையப்பட்டுள்ளது..

 

மயில் கூட்டம் - கிருஷ்ணகிரி பாறை ஓவியம்
மயில் கூட்டம் – கிருஷ்ணகிரி பாறை ஓவியம்

இதே மாவட்டத்தில் மற்றோர் இடத்தில் செஞ்சாந்தினால் வரையப்பட்ட (தோகை விரிக்காத) நிலையில் பெரிய மயில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது…

தோகை விரிக்காத மயில் தெரிகிறதா?கிருஷ்ணகிரி பாறை ஓவியம்
தோகை விரிக்காத மயில் தெரிகிறதா?கிருஷ்ணகிரி பாறை ஓவியம்

 

முருகனின் வாகனமான மயில் சிலை
முருகனின் வாகனமான மயில் சிலை…மயில் வாயில் கவ்வியுள்ள பாம்பிற்கு நத்தை தண்ணீர் கொண்டு போகிறதோ?  (வேடிக்கையாய் நானெடுத்த படமொன்று)

கோவை மாவட்டம் குமுட்டிபதி பெருங்கற்கால ஓவியத்தொகுப்பிலும் ஓரிடத்தில் மயில், தேர் என இருவேறு கருத்துகள் நிலவும் வகையிலமைந்த ஓவியமொன்றும் உள்ளது.இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மயில் சில ஆயிரமாண்டுகள் முன்னரே மனிதர்களின் மனதைக் கொள்ளையடித்த ஒரு பறவையாயிருந்திருப்பது தெரியவருகிறது..

ஆண்மயில் மிகவும் அழகானது..அதுபோன்றொரு அழகிய கொண்டை, நீல வண்ணக் கழுத்தையும், உடலில் மின்னும் பச்சையையும் விரித்தாடும் பொழுது தோகை முழுவதிலும் அமைந்திருக்கும் கண்களையும் நீங்கள் வேறெந்தப் பறவையிலும் காண முடியாது..தம் இணையைக் கவரவே இந்த அழகிய தோகை..நடனமும் அதற்காகவே!.தோகைகள் விழுந்து புதிதாய் முளைப்பன. இறக்கையின் மேல்பகுதி கறுப்பு, வெள்ளை நிறமாயிருக்கிறது..இருபுறமும் உள்ள இறக்கையின் இறுதியில் பிரகாசமான பழுப்புநிறம் காணப்படும்..

ஆண்மயிலின் அழகிய நீலவண்ணக் கழுத்து
ஆண்மயிலின் அழகிய நீலவண்ணக் கழுத்து

 

தோகை விரித்தாடும் ஆண்மயில்
தோகை விரித்தாடும் ஆண்மயில்

 

 

தோகை விரிக்காத நிலையில் ஆண்மயில்
தோகை விரிக்காத நிலையில் ஆண்மயில்

 

தோகைகள் உதிர்ந்த நிலையில் ஒரு ஆண்மயில்
தோகைகள் உதிர்ந்த நிலையில் ஒரு ஆண்மயில்

 

பெண்மயில் ஆண்மயிலை ஒப்பிடுகையில் அழகு குறைவே..தோகையும் நீளமில்லை..கழுத்தானது பச்சை,கறுப்பு, வெள்ளை நிறங்கள் கலந்தது…

வேலியின்மீது இரண்டு ஆண்மயில்களுக்கு நடுவில் பெண்மயில்கள்
வேலியின்மீது இரண்டு ஆண்மயில்களுக்கு நடுவில் பெண்மயில்கள்

 

மயில்களால் ஏற்படும் தொந்தரவுகள் குறித்து நீங்கள் ஒரு விவசாயியிடம் கேட்டால் அழாத குறையாய் நிறைய சொல்லுவார்..

சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஒரு கட்டுரையில், “இட்டேரி” எனப்படும் சூழல் பெருமளவு அழிக்கப்பட்டதே நிறைய பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறப்பட்டிருந்தது..

இரண்டுபுறமும் புதர்போல வளர்ந்த தாவரங்களோடு, நடுவில் மண்பாதையாய் அமைந்திருப்பதுதான் இட்டேரி..
இட்டேரி மட்டுமல்ல…இன்று சிறு புதர்க்காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..

பல்லுயிர் சூழல் மண்டலமாக இருந்த இதில் எண்ணற்ற உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தவையாய் உணவுச் சங்கிலியில் பிணைந்திருந்தன..இதனுள் கிடைத்த சிறு உயிரினங்கள், புழு பூச்சிகள், பாம்புகளே மயில்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தன.என்றைக்கு இந்த இட்டேரிகளின் அழிவு தொடங்கியதோ அன்றே மயில்களும் அவற்றை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து தானியங்களை உண்ண ஆரம்பித்து விட்டன.

மேலும் இதே சூழலில் வசித்த காட்டுப் பூனைகளும், வங்கு நரிகள் என்று சொல்லப்பட்ட குள்ளநரிகளும் மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் உண்டு அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்தன..

காட்டுப் பூனைகளும், வங்குநரியும் என்று அருகியதோ அன்றிலிருந்து மயில்களுக்கு அச்சுறுத்தல் இல்லையாதலால் இன்று பல்கிப் பெருகியுள்ளன..

ஒரு ஏரிக்கரையில் அமர்ந்து தும்பிகளைப் படம்பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் , ஒரு முதியவரான விவசாயி இன்னொரு இளைஞரிடம் , வங்கு நரியினைப் பற்றியும்,அவை இல்லாததால் இன்று மயில்கள் பெருகி விட்டது பற்றியும் தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.. “நாம் பல புத்தகங்களைத் தேடிப் படித்துப் பெறும் இந்த அரிய தகவலை இவ்வளவு அசால்ட்டாகச் சொல்கிறாரே” என்று நினைத்துக் கொண்டே தும்பியைத் தவற விட்டேன்..

 

பறந்து செல்லும் மயில் ஒன்று..
பறந்து செல்லும் மயில் ஒன்று..

மயில்கள் எழுப்பும் ஒலியை மரபுப்படி அகவுதல் என்கிறோம்.ஒரு டிரம்பெட் கலைஞன் வாசிப்பதற்கு முன் காற்றைச் செலுத்தி தனது கருவியைச் சோதிப்பது போல மயில்கள் அவ்வப்போது ஒலியெழுப்பும்.சமயத்தில் காடே அதிரும்படி, ஒரு பசியெடுத்த குழந்தை வீறிட்டு கத்துவதைப் போல “குவா…குவா..” என பேரொலி எழுப்பும்…

அருகிலுள்ள சிறுகரடு ஒன்றில் மாலைவேளையில் பட்டுப்போன மரம் ஒன்றில் மயில்கள் அடைய வரும்..அந்திச் சூரியனின் பின்புல வெளிச்சத்தில் கறுப்புநிற உருவங்களாய் மயில்கள் தெரிவது அவ்வளவு அழகாயிருக்கும்..

மாலைவேளையில் மயில்கள் மரத்தில் ஒடுங்கும் காட்சி
மாலைவேளையில் மயில்கள் மரத்தில் ஒடுங்கும் காட்சி

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில் முதன்முதலாக இந்தியாவின் தேசியப்பறவையாக கானமயிலை தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட தாம்.பிறகு ‘Great indian Bustard’ என்கிற அதன் பெயரில் உள்ள ‘Bustard ‘ என்னும் சொல்லை வாசிக்கத்தெரியாதவர் மாற்றி உச்சரித்து விடக்கூடும் என்று கருதி கைவிடப்பட்டதாம்.. இந்தியாவில் இப்போது இந்த கானமயில்கள் மிகவும் அருகி வருகின்றன..தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு இறுதியாக கோவை,சூலூர் விமான நிலைய ஓடுபாதையில் காணப்பட்டதாகக் குறிப்புள்ளது.1924 ஆம் ஆண்டு திருச்சிக்கருகில் பிடிக்கப்பட்ட கானமயிலொன்றின் பதப்படுத்தப்பட்ட உடலானது அங்குள்ள செயின்ட் ஜோசெப் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது என்கிற தகவலும் திரு.முகமது அலி அவர்களின் ‘வட்டமிடும் கழுகு ‘ நூலின் மூலம் அறிய முடிகிறது.

கானமயில் - நன்றி விக்கிபீடியா..
கானமயில் – நன்றி விக்கிபீடியா..

பட்டியல் 1 இனத்தைச் சேர்ந்த மயில்கள் கொல்லப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வனத்துறை சட்டங்கள் இருந்தும், சில இடங்களில் விவசாயத்திற்கு ஊறு விளைவித்த காரணத்திற்காய் மயில்கள் விஷம் வைத்தெல்லாம் கொல்லப்பட்டதாக நாளேடுகளில் செய்திகள் வருகின்றன..மயில்கள் இதைவிடவே இன்னும் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது..இவ்வேளையில் அவை விளைநிலங்களைபாழ்படுத்தாமலிருக்க வேண்டிய அறிவியல் பூர்வமான வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த முனைய வேண்டும்..

அதை விடுத்து அதனைக் கொல்லவோ, வேட்டையாடவோ முனைந்தால் கான மயிலுக்கு நேர்ந்த கதியே இதற்கும் ஏற்படும்..

அன்புடன்,
கலை

Leave a Reply