FEATUREDLatestNature

தினம் ஒரு பறவை – நீர்க்கோழிகள்

Spread the love

தினம் ஒரு பறவை – நீர்க்கோழிகள்

கலைச்செல்வன் 

கொஞ்சம் நீர்நிலைகள் பக்கம் இன்றைக்கு போய்விட்டு வருவோம். பறவைகள் ஒவ்வொன்றும் அவை வாழும் இடத்திற்கு ஏற்றபடி தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன.

நம்ம ஊரில் நீர்நிலைகளுக்குப் பஞ்சமே இல்லை.ஏரி,குளம்,கண்மாய்,குட்டை என நம் முன்னோர்கள் நீர் மேலாண்மையைக் கருத்தில்கொண்டு நிறைய நீர்நிலைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.அந்த நீர்நிலைகள் மீன்,நண்டு,தவளை,நீர்ப்பறவைகள் என பலவையும் பல்கிப் பெருக ஆதாரமாயிருந்தது.அந்த சூழ்நிலை மண்டலமே தனி.ஒன்றையொன்று சார்ந்து வாழ்பவை.

நீர்நிலைகள் அழகான சூழலியல் மண்டலங்கள்.

ஏரிகள் அழகான சூழலியல் மண்டலங்கள் -சேலம் குமரகிரி ஏரி
ஏரிகள் அழகான சூழலியல் மண்டலங்கள் -சேலம் குமரகிரி ஏரி

சில பறவைகள் அவ்வப்போது நீர்நிலைகள் பக்கம் வந்து போவன. சில பறவைகள் இரைதேடுவது,வாழ்க்கை,கூடுகட்டுவது, இனப்பெருக்கம் எல்லாமே நீர்நிலைகள் நடுவிலுள்ள மண்தரையிலோ,அல்லது கரைகளையொட்டியுள்ள புதர்கள், மரங்களில்தான்.

இன்று நாம் நீர்நிலைகளில் இருக்கக் கூடிய சில ‘கோழி’ வகையறாக்களைப் பார்ப்போம். பரவல் இந்தியா முழுவதும் உள்ளதும், எளிதில் பார்க்க முடிபவைகளை மட்டுமே கொடுத்திருக்கேன்.

1.நீல தாழைக்கோழி ( Purple Swamphen விலங்கியல் பெயர் – Porphyrio porphyrio)

2.தாழைக்கோழி (Common moorhen விலங்கியல் பெயர் – Gallinula chloropus)

3.நாமக்கோழி ( Common coot விலங்கியல் பெயர் – Fulica atra )


4.வெண்மார்பு கானாங்கோழி (White-breasted waterhen விலங்கியல் பெயர் Amaurornis phoenicurus)

நீர்நிலையில் வசிக்கும் வாத்துகளுக்கும் கோழிகளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே விரல் இடையில் காணப்படும் விரலிடைச் சவ்வுகள்தான்.அதாவது கால் விரல்களை இணைக்கும் சவ்வுபோன்ற அமைப்பு.நீந்தும் போது நமக்கு மேலே தெரிவதெல்லாம் வாத்துகளின் அமைதியான உருவம்தான்.ஆனா சத்தமில்லாமல் தண்ணீருக்குள் கால்கள் துடுப்புபோல அசைந்துகொண்டே இருக்கும். அதனால்தான் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல முடிகிறது.

மேற்கண்ட பறவைகள் விரலிடைச்சவ்வு போன்ற அமைப்பு இல்லை. மாறாக மேற்கண்ட பறவைகளுக்கும் தண்ணீர்மேல் கானப்படும் ஆகாயத் தாமரை போன்ற நீர்வாழ் தாவரங்களின் மேல் பரப்பில் நடந்து செல்வதற்கு ஏதுவாக நீளமான விரல்கள் உண்டு. இதனால் இவை சர்வசாதாரணமாக நீர்ப்பரப்பின் மேலுள்ள தாவரங்களின் மேல் பற்றி நடக்கவோ ஆபத்து காலங்களில் வேகமாக ஓடவோ உதவுகின்றன. இன்னும் சொல்வதென்றால் தாழைக்கோழிகள், நாமக் கோழிகள் வாத்துகளைப் போலவே நன்றாக நீந்துகின்றன. இவைகளுக்கு விரல்களிடையே சவ்வு இருப்பதில்லை..மாறாக விரல்களில் பட்டையான சவ்வுகள் போன்ற அமைப்புகள் இருக்கிறது….

நீல தாழைக்கோழி நன்றாக பெரிய உருவம்.பெயருக்கேற்றபடி நீல நிறம், வெளிர்நீல நிறம் கலந்து காணப்படுகிறது. சாம்பல் நிற தலை. சிவந்த அலகு. அலகின் மேல் பகுதியில் இருந்து நெற்றி, தலையுச்சி வரை கண்புருவம் போல செல்லும் செந்நிற பட்டை தனித்த அடையாளம். நீல தாழைக் கோழியில் பல உள்ளினங்கள் இருப்பதால் நம் இந்தியப்பகுதியில் இருப்பவைகளை சாம்பல் தாழைக்கோழி (Grey-headed swamphen) என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இளம் செந்நிறமாய் அமைந்துள்ள கால்கள். இளம் பறவையில் மேற்கண்ட வண்ணங்கள் அனைத்துமே மாறுபட்டிருக்கிறது. அதிகளவில் நான் பார்ப்பவை இவ்வகைக் கோழிகளே.

சாம்பல் தாழைக்கோழி
சாம்பல் தாழைக்கோழி

தாழைக்கோழிக்கு சிவப்பு நிறம் கொண்ட அலகின் நுனியில் உள்ள மஞ்சள் நிறம் தனித்த அடையாளம்.

சாம்பல் தாழைக்கோழி
சாம்பல் தாழைக்கோழி அலகின் சிவந்த நிறம் நெற்றிவரை நீண்டு நீட்சியாய் காணப்படுகிறது

அலகின் சிவந்த நிறம் நெற்றிவரை நீண்டு நீட்சியாய் காணப்படுகிறது. உடல் கருஞ்சாம்பல் நிறம்.இறக்கைகளில் கரும்பழுப்பு இருப்பதையும், இறபுறமும் வெள்ளை நிறப் பட்டைகள் (white wing batch) இருப்பதையும் காணமுடிகிறது. கால்கள் மஞ்சள் நிறம்.

இளம் பருவ சாம்பல் தாழைக்கோழி
இளம் பருவ சாம்பல் தாழைக்கோழி
தாழைக்கோழி இணை
தாழைக்கோழி இணை
தாழைக்கோழி
தாழைக்கோழி

 

3.நாமக்கோழி ( Common coot விலங்கியல் பெயர் –

நாமக்கோழி
நாமக்கோழி

 

நாமக்கோழி
நாமக்கோழி

நாமக்கோழி நாமம் வைத்தது போன்ற வெண்ணிறப் பட்டையால் அந்தப் பெயர் பெறுகிறது. உடல் முழுவதும் கருப்பு, கருஞ்சாம்பல் கலந்து காணப்படுகிறது. அலகு வெண்மை நிறம் .தண்ணீருக்குள் இவை அவ்வப்போது முக்குளித்துச் செல்வதை காண முடியும்.

 

வெண்மார்பு கானாங்கோழி, அதன் தலைப்பகுதியிலிருந்து கீழ்ப்புறமாக நெஞ்சு, வயிறு, பின்பகுதி வரை வெள்ளை நிறம் கொண்டது.மார்புப் பகுதி வெண்மை நிறமாதலால் அந்தப்பெயர் பெறுகிறது.மேற்பகுதி, இறக்கைகள் கருப்பு நிறம். வாலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும், வால் நுனியானது தூக்கியபடியும் இருக்கும்.

வெண்மார்பு கானாங்கோழி
வெண்மார்பு கானாங்கோழி
மாணவன் வரைந்த வெண்மார்பு கானாங்கோழி
மாணவன் வரைந்த வெண்மார்பு கானாங்கோழி

கானக்கோழி வேறு; கானாங்கோழி வேறு.

கானக் கோழியென்பது (கானம்- காடு) காட்டில் வசிக்கும் காட்டுக்கோழியைக் குறிக்கும்.
சங்க இலக்கியங்களில் இந்த வெண்மார்பு கானாங்கோழியானது கம்புள் என பாடப்பட்டுள்ளது.

“மேற்றுறைக் கொளீஇய கழாலிற் கீழ்த்துறை
உடுவார் அருந்தம் பருவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசிபிணித்
தெண்கட் கிணையிற் பிறழும் ஊரன்”

என்கிறது அகநானூறு 356 ஆம் பாடல்.இதில் கம்புள் என்று குறிக்கப்படுவது வெண்மார்பு கானாங்கோழி ஆகும்.

“பழனக் கம்புள் பயிர்பெடை யகவும்
கழனி யூர”
என ஐங்குறுநூறும் (பாடல் 60),

“வண்டிறை கொணட கமழ்பூம் பொய்கைக்
கம்புட் சேவ லின்றுயி லிரிய”

என மதுரைக் காஞ்சி வரிகளும் குறிப்பதை
“தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்” என்னும் நூலால் அறியமுடிகிறது.

மற்ற நீர்ப்பறவைகளெல்லாம் சாந்தமாக இருக்கிற இடமே தெரியாமல் இருக்கும்போது, இந்த கம்புள் கோழிகள் மட்டும் கத்தி ஊரையே கூட்டிவிடும்.ஏதோ ஆபத்தில் மாட்டிக் கொண்டதோ என நினைத்து ஒரு நிமிடம் திகைத்துப் போய் நிற்பேன். அவ்வளவு உரத்த குரலில் “குக்..குக்…குக்..குர்ரே…குக்..குக்…குர்ரே” இப்படியெல்லாம் ஒலி எழுப்பக் கேட்டிருக்கிறேன்.

பெரிய அளவில் ஏரி, குளம் அருகில் இல்லாமல் விவசாயிகளின் கிணறு, வாய்க்கால்கள் அருகிலும், சமயங்களில் பாறைகளில் அமைந்துள்ள பாழிகள் அருகிலுள்ள கள்ளிச் செடிகளிலும் கண்டிருக்கிறேன்.

நீர்ப்பறவைகளுக்கு இருக்கும் பெரிய ஆபத்தே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும், கழிவு நீர் கலப்பும்தான்.இவை இரண்டு காரணிகளுமே நீர்ப்பறவைகளின் இனப்பெருக்கத்தையும், அவற்றின் உணவுத்தேவையையும் பெரிதும் பாதிக்கும்.

பெரும்பாலான நீர்நிலைகளின் முகமெல்லாம் அழகானதாக ,பார்ப்பதற்கு அழகியலோடு காட்சி தருகின்றன. முதுகுப் பகுதியைப் பார்த்தால் ஊரின் ஒட்டுமொத்த சாக்கடை நீரும் கலக்கும்படி செய்திருப்பர். போதாக்குறைக்கு சில ஏரிகளில் அமைந்துள்ள தீவு போன்ற திட்டுப்பகுதிகளில் குடியும் கும்மாளமுமாய் சில இளைஞர்கள் பட்டாளமும் இருக்கும்.அவர்கள் தொட்டுக்கொள்ள (Side dish) அங்கேயே சமைக்கும் உணவினைக் கேட்டால் அதிர்ச்சியாயிருக்கும். அவை வேறொன்றுமல்ல..வேட்டையாடிக் கொன்று கிடைக்கும் நீர்வாழ்ப் பறவைகளும், அவை கிடைக்காதபோது அதன் முட்டைகளும்தான்.சேலத்திலேயே பல ஏரிகளை உதாரணம் சொல்வேன்.

“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

அன்புடன் ,
கலை

Leave a Reply