தினம் ஒரு பறவை – காகங்கள்

Spread the love

தினம் ஒரு பறவை –  காகங்கள்

Kalai Selvan – காட்சிகள் மூலம் கதை சொல்பவர்

நம்மிடையே…நம்மோடு வசிக்கும், நம்மை நன்கு புரிந்து வாழும் ஒரு புத்திசாலி பறவையினம்தான் காகங்கள்..

காகங்கள் நம் வாழ்வியலோடு பிணைந்தவை ..

“இறந்த நம் முன்னோர்கள் காகங்களாக உருமாறி பூமியில் வாழ்கிறார்கள் என்று கருதி உணவளிப்பது..

காகம் கரைந்த திசையிலிருந்து விருந்தினர்கள் வருவார்கள் என நினைப்பது…

காகம், சனிபகவான் வாகனம்…அதற்கு சோறிட்டால் சனிபகவான் அருள் கிடைக்கும் என்று நம்புவது..”

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…நம்மவர்கள் (மூட) நம்பிக்கைகளுக்கு..

சேவலுக்கு அடுத்தபடியாய் நிறைய கிராமங்கள், குடியிருப்புப் பகுதிகளில் இவர்கள்தான் அலாரம்…

வீட்டிற்கருகில் ஒரு பெரிய மரம் இருந்துவிட்டால் போதும்..காலை எழும்போது கா…கா…கா…என அனைத்துக் காகங்களும் எழுப்பும் பேரொலியைக் கேட்டபின்பு நமக்கு தூக்கம வருமா என்ன?

நம்மைச்சுற்றி இரண்டு வகை காகங்கள் இருக்கின்றன..

1.காகம் அல்லது காக்கை..( House crow, விலங்கியல் பெயர் – Corvus splendens)

2.அண்டங்காக்கை ( Indian jungle crow, விலங்கியல் பெயர் – Corvus macrorhynchos culminatus)

இமயமலைப் பகுதியில் வசிக்கும் தடித்த அலகுள்ள காகங்களின் (Large -billed crow, Corvus macrorhynchos) உள்ளினங்களாக நேபாளம், பங்களாதேஷ், அந்தமான் பகுதிகளில் வசிக்கும் கிழக்கிந்திய அண்டங்காக்கைகளும்( Eastern Jungle crow, Corvus macrorhynchos levaillantii) நம்ம இந்திய அண்டங்காக்கைகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..

முதல் வகை நாம் சாதாரணமாய்ப் பார்ப்பது..நம் வீட்டிற்கு வருவது..காகம் என்றாலே கருப்பு என்று நாம் சொன்னாலும், இறக்கை, வால்பகுதி, அலகு தலைப்பகுதியோடு இணையுமிடத்தைச் சுற்றிலும் மட்டும் கருப்பு..மற்ற இடமெல்லாம் சாம்பல் நிறமாயிருக்கிறது காகத்திற்கு..

இரண்டாவது வகையான அண்டங்காக்கை முதல் வகையைவிட அளவில் பெரியது..இதுதான் முழுக்க முழுக்க கருமை நிறம்..காகத்தோடு ஒப்பிடும்போது பெரும்பாலும் இவை எண்ணிக்கையில் குறைந்தே காணப்படுகின்றன..முன்பெல்லாம் அண்டங்காக்கையை அவ்வளவாகக் காண இயலாது..இப்பொழுதெல்லாம் கிராமம், நகரமென்று பாராமல் இரண்டுமே கூட்டமாக சுற்றித்திரிகின்றன..தோராமயாக பத்து காகமிருந்தால் அவற்றில் ஒன்று, இரண்டு அண்டங்காக்கையைப் பார்க்கிறேன்..!

அண்டங்காக்கை (Indian jungle crow)
அண்டங்காக்கை (Indian jungle crow)

காகம் ஒரு அனைத்துண்ணி..அதாவது தாவர பகுதிப் பொருள்களையும் உண்ணும், இறைச்சியையும் உண்ணும்..

காகங்கள் ஆகச்சிறந்த துப்புரவாளர்கள்..

‘ஆகாயத்தோட்டி’ என்றழைப்பது நினைவிருக்கலாம்.நாம் சாப்பிடும்போது வீணாகும் சோற்றுப் பருக்கை முதற்கொண்டு, மீதமிருந்து வீணாகக் கொட்டும் உணவுகள், காய்கறி/ இறைச்சிக் கழிவுகள் என சகலத்தையும் உண்ணும்.. தினம்தோறும் பயணிக்கும் சாலைகளில் வாகனங்களால் அடிபட்டு உயிர்துறக்கும் பெருச்சாளிகள் (கிராமத்து சாலைகளில் இது மிக அதிகம்), பாம்புகள், சமயங்களில் அடிபட்ட நாய்களைக் கூட கூட்டமாய் தனது அலகால் சதையைக் கொத்தித் தின்பதைப் பார்த்திருக்கிறேன்..இவர்கள் இல்லையெனில் இந்தக் கழிவுகள் சூழலை எப்படி மோசமாய் பாதித்து தொற்றுகளை ஏற்படுத்தும் எனக் கற்பனை கூட செய்து பார்க்கவியலவில்லை..

பெட்டிக்கடைகளில் விற்கப்படும் உணவுப்பண்டங்கள், வடை, போண்டா, சமயத்தில் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முறுக்கு முதலான உணவுப் பொருள்களையும் அசந்த நேரத்தில் “திடீர்த்தாக்குதலாய்” பறித்துச் செல்வதுண்டு..எங்கள் கிராமத்துப் பகுதியிலெல்லாம் பருந்துகளைவிட காக்கைகளிடமிருந்துதான் பிறந்த கோழிக்குஞ்சுகளை காப்பாற்றுவது பெரும்பாடாயிருக்கும்..

பெரிய மரங்கள், மின்கம்பங்களில் நன்றாக உறுதியாகவுள்ள சிறுகுச்சிகளைக் கொண்டு கூடு அமைக்கும்..சாதாரணமான நாள்களிலேயே காகத்தின் கூடு அருகில் நாம் யாரும் அவ்வளவு எளிதாய் செல்ல முடியாது, முட்டையோ, குஞ்சுகளோ இருந்தால் சொல்லவே வேண்டாம்…

கூடுகட்டத்தெரியாத குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடுவதும், காகமும் ஏமாளியாய் குயிலின் முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொரிப்பதும்., பின்பு கரிய நிறத்தில் இருப்பதால் கண்டுபிடிக்க இயலாமல் அது கூவ ஆரம்பிக்கும்போது “அச்சச்சோ…உன்னையவா அடைகாத்து பெத்தேன்?” என்று திட்டிக் கொண்டே (ஆண்/பெண் குயில்களை) விரட்டி அடிப்பதும் வாடிக்கை…

காகத்திற்காக காத்திருக்கும் பெண் குயில்
காகத்திற்காக காத்திருக்கும் பெண் குயில்

அதிசயமாய்.., ஒருநாள் மதிய உணவு வேளையில் மாணவர்கள் சிந்திய சோற்றுப் பருக்கைகளை சேகரித்த ஒரு தாய்க்காகம் பள்ளி வளாகத்திலிருந்த பெண் குயிலுக்கு ஊட்டுவதைக் கண்டு பெரும் வியப்படைந்தேன்..

குயிலுக்கு இரையூட்டும் காகம்
குயிலுக்கு இரையூட்டும் காகம்

ஆண்குயில்கூட ஒலி எழுப்பாமல் இருந்தாலும், கருமை நிறமாயிருப்பதால் தாய்க்காகம் விட்டுவிடும் என வைத்துக் கொள்வோம்.. நிச்சயமாய் பெண்குயிலுக்கு நிறவேறுபாடே நன்றாகவே காட்டிக் கொடுத்திருக்கும்..அப்படி இருந்தும் காகம் ஏன் இப்படிச் செய்கிறது என்று குழப்பமாகவே இருந்தது..ஏனென்றால் நான் பார்த்த காட்சிகள் எல்லாமே காகம், குயில்களை விரட்டுவது போலத்தான்.. 

இன்னொரு விஷயம் காகங்கள் குறித்து …

“காக்கைக் கரவா கரைந்துண்ணும்” என்பார் வள்ளுவர்..கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை காகத்தின் குணமாகச் சொல்வர்..நாமாக அளிக்கும் உணவுக்குத்தான் அது பொருந்துமோ என்னவோ?

அதுவே முயன்று பிடிக்கும் கோழிக்குஞ்சுகள், ஓணான், சிறு பூச்சிகளை தூக்கிக் கொண்டு ஓடுவதையே நான் பார்த்திருக்கிறேன்..அதனை பகிர முன்வருவதில்லை ..பின் தொடர்ந்து இன்னும் சில காகங்கள் ஓடுவதை நான் பார்த்துள்ளேன்..( ஒருவேளை நமக்குச் சுவையான உணவொன்று கிடைத்துவிட்டால் அடுத்தவருக்கு மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுகிறோமே, அப்படியாய் இருக்குமோ? )

இன்னொரு விஷயம் நன்றாகவே நினைவிருக்கிறது..அருகிலுள்ள மரவள்ளிக் கிழங்கு ஆலையில் இருந்து களத்தில் காயவைத்திருக்கும் ஜவ்வரிசிக் கட்டிகளை காகங்கள் தூக்கி வந்து கூரையின் அடியிலும் வீடுகளின் ஓட்டின் அடியில் உள்ள இடைவெளியிலும் மறைத்து வைக்கும்…திரும்ப சாப்பிட வருமா என்றெல்லாம் தெரியாது…அதற்குள் இதனை நாங்கள் கண்ணுற்றால் , அதனை எடுத்து சாப்பிடவும் செய்திருக்கிறோம்..சில சமயம் வாயில் வைத்திருக்கும் ஜவ்வரிசிக் கட்டியினை காகத்தை அடிப்பது போல் கையை வீசி விரட்டிவிட்டு கைப்பற்றியும் ருசித்திருக்கிறோம்..(யார்க்கிட்ட?) இதெல்லாம் சிறுவயது நிகழ்வு.. 

ஜவ்வரிசி ஆலை இயங்காமல் நின்றுபோனதால் இது போன்ற நிகழ்வுகள் மட்டும் நினைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது..

பரவல், இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பினும், இதற்கும் சில அச்சுறுத்தல்கள் இருக்கின்றன..

கிராமத்துப் பக்கம் ஒரு வழக்கமிருக்கிறது..மற்ற பறவைகளை பயமுறுத்த ஒரு காகத்தை எப்படியாவது கொன்று தொங்கவிடும் வழக்கம்தான் அது..அதாவது இவ்வாறு செய்வதால் மற்ற காகங்கள் பயந்து வராதாம்.. 

 

கிராமத்து காடுகளில் காணப்படும் பழக்கம்..இப்படி காகத்தைக் கொன்று தொங்கவிடுவது.
கிராமத்து காடுகளில் காணப்படும் பழக்கம்..இப்படி காகத்தைக் கொன்று தொங்கவிடுவது.

 

அப்படி கொன்று தொங்கவிடப்பட்ட சோளக்காட்டில் சாதாரணமாய் தானியம் உண்ணும் காகங்கள்
அப்படி கொன்று தொங்கவிடப்பட்ட சோளக்காட்டில் சாதாரணமாய் தானியம் உண்ணும் காகங்கள்

சில வேட்டைக்காரர்கள் பெருமளவில் காகங்களை வேட்டையாடி அதனை உணவகங்களுக்கு விநியோகிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம்…

விஷம் வைத்துக் கொல்லப்படும்  விலங்குகளை காகங்கள் தீண்டுமாவென தெரியவில்லை..அவ்வாறு உண்டால் நமக்கு பெரும் உதவி செய்துவரும் காகங்களை கொல்வதற்கு நாமே காரணமாகிறோம்…(பாறுகழுகுகளின் நிலை நாம் அறிந்துள்ளோமல்லவா?) எனவே அவ்வாறு இறக்கும் எலி முதலான சிறுவிலங்குகள் புதைக்கப்பட வேண்டும்..

சமயத்தில் மின்சாரத்தில் அடிபட்டும் காகங்கள் இறப்பதுண்டு..

இவையெல்லாம் அச்சுறுத்தல்கள்..

புறப்படும் இடமும் தெரியாமல், சென்று சேரும் இடமும் தெரியாமல் ஆயிரக்கணக்கில் தினமும் காகங்கள் மாலை 5 மணிமுதல், 6.30 மணி வரை கூட்டம் கூட்டமாய்ப் பறப்பதைப் பார்த்திருக்கிறேன்..கோதுமலை, வடகிழக்கு திசையில் இருந்து (சேலம்- கோதுமலை, அதன் பின்னே உள்ளே பகுதிகள்) தென்மேற்காக (ஜருகுமலை நோக்கி) ஒவ்வொரு நாளும் சாதாரணமாய் 1600-1800 காகங்கள் ஒரே திசையில் பறந்து செல்லும்..

புத்திசாலி பறவையினம் காகம் இடப்பெயர்வு..
நான் சொன்ன மிகப்பெரும் இடப்பெயர்வு..

எதற்காக இந்த இடப்பெயர்வு என்றே தெரியவில்லை…தினமும் இது நடக்கிறது..ஊரடங்கு ஆரம்பித்த நாள்களில் எண்ணிக்கை குறைவாயும் தற்போது வழக்கம்போல ஆயிரக்கணக்கிலும் உள்ளது..இருக்குமிடத்தில் எல்லாமே கிடைக்கிறதே! உணவுத்தேவைக்கு என்று கொள்ள முடியுமா? என்ற வினா எழாமல் இல்லை…

பெரிய ,வலிமையான கூரிய நகங்களை உடைய கழுகு, பருந்து இவற்றை காகங்கள் துரத்தி கலங்கடிப்பதெல்லாம் வேற லெவல்..ஒரு முறை இந்திய புள்ளிக் கழுகை
(Indian spotted Eagle) வானில் பறந்தபடியே நம்ம வீட்டுக் காகம் அவ்வளவு உயரத்தில் துரத்தி துரத்தி படுத்தி எடுத்தது!

இந்திய புள்ளிக் கழுகை துரத்தி கலங்கடித்த காகம்
இந்திய புள்ளிக் கழுகை துரத்தி கலங்கடித்த காகம்

இந்தக்காட்சியைப் படம்பிடித்த எனக்கு

“பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.” என்னும் குறள் நினைவிற்கு வந்தது..

தன்னம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் சிறந்த உதாரணம் இது!

யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஆபத்தில் இருந்தாலோ எப்படி அத்தனை பேர் கூடுவார்களோ தெரியாது! மாஸ் காட்டுவானுங்க…! ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டு.. 

அன்பிலும் சளைத்தவர்கள் அல்ல…மதிய வேளையில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் போது வெட்டியாய் இராமல், பெண் காகத்திற்கு இறகுகளை கோதி விடுவது,அதன் தலையில் தன் அலகால் சொறிந்துவிடுவது போன்ற செய்கைகளைச் செய்து இணையின் அன்பைச் சம்பாதிப்பதில் குறியாய் இருப்பார்கள்..  ஆண்காகங்கள்..

உடற்குறைபாடுள்ள காகம் ஒன்று..தினமும் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் பார்ப்பேன்...
உடற்குறைபாடுள்ள காகம் ஒன்று..தினமும் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் பார்ப்பேன்…

இன்னொரு சிறந்த பண்பு, பெருமரங்கள் இயற்கையில் முளைக்க காகமும் முக்கிய காரணம்..அதன் எச்சத்திலிருந்து வெளிவரும் விதைகள் குறிப்பாய் வேம்பு, ஆல், அரசு முதலியவை படுவீரியமாய் முளைத்து விடும் என்பது இயற்கையின் இன்னொரு விந்தை..(சமயத்தில் கட்டிடங்களில் முளைத்தும் நம்மை கடுப்பாக்கி விடும் அது வேறு விஷயம்)..

அத்தனையும் மரமாகும்...துரதிஷ்டம்...பாறைமேல் போட்டுவிட்டது
அத்தனையும் மரமாகும்…துரதிஷ்டம்…பாறைமேல் போட்டுவிட்டது

இருந்தாலும் அதிகமாயுள்ள நிறைகளை கருத்தில்கொண்டு…,

குறைகளை புறந்தள்ளி

காகம்தானே என எள்ளாமல்

அதனையும் காதல் செய்வோம்!

அன்புடன்,
கலை.

Kalai Selvan – காட்சிகள் மூலம் கதை சொல்பவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *