தினம் ஒரு பறவை – கரிச்சான்கள் -Drongo’s

Spread the love

தினம் ஒரு பறவை –  கரிச்சான்கள் (Drongo’s)

by: Kalai Selvan

பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் நாம் எல்லோரும் சாதாரணமாய் காண்பதுதான் கரிச்சான் குருவிகள்..மின்கம்பிகளில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கும்..திடீரென பறந்துசென்று பூச்சியைப் பிடித்துவந்து அதே இடத்தில் அமர்ந்து உண்ணும்..(பஞ்சுருட்டான் பற்றி சொல்லும்போது இந்தமாதிரியே இரை பிடிக்கும் என சொல்லியிருக்கேன்..நினைவிருக்கா?)

சில சமயம் ஆடு, மாடுகளின் முதுகில் ஓ.சி. சவாரி…அப்படியே அவங்க மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் போது கால்நடைகள் மேலிருக்கும் பூச்சிகளை பிடித்துத் தின்பது…

இந்த காகத்துக்கும் அதுங்களுக்கும் என்னங்க சண்டை? சதா விரட்டி விரட்டி கொத்திகிட்டே இருக்கே! காகமும் பறந்து ஓடுதே!

இவருதாங்க…நம்ம பாக்கப்போற கதையோட ஹீரோ!

நம்ம பகுதியில் என்னென்ன கரிச்சான்கள் பார்க்கலாம்? பார்க்கும் வாய்ப்பிற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1.கருங்கரிச்சான் ( Black Drongo – விலங்கியல் பெயர் Dicrurus macrocerus)
2.துடுப்புவால் கரிச்சான் ( Greater Racket-tailed Drongo – விலங்கியல் பெயர் Dicrurus paradiseus)
3.வெள்ளைவயிற்றுக் கரிச்சான் ( White – bellied Drongo – விலங்கியல் பெயர் Dicrurus caerulescens)
4.கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo – விலங்கியல் பெயர் Dicrurus aeneus)
5.கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo / Hair-crested Drongo – விலங்கியல் பெயர் Dicrurus hottentottus)
6.சாம்பல் கரிச்சான் ( Ashy Drongo – விலங்கியல் பெயர் Dicrurus leucophaeus)

இனி எப்படி அடையாளப்படுத்துவதுன்னு பார்ப்போம்!

6 வகையான கரிச்சான்கள் இருந்தாலும் கருங்கரிச்சான் மட்டுமே இந்தியா முழுவதும், கிராமம் , நகரம் என எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கிறது.

மற்றவற்றை பார்க்கும் வாய்ப்பு குறைவு எனினும் தனித்த சில அடையாளங்களைக் கொண்டு உங்களுக்கு எல்லா கரிச்சான்களையும் எப்படிக் காண்பது எனச்சொல்கிறேன்..

1.கருங்கரிச்சான் ( Black Drongo – விலங்கியல் பெயர் Dicrurus macrocerus)

கருங்கரிச்சான் பரவலாக காணப்படுகிறது.குடியிருப்புப் பகுதியிலும் நீங்கள் பார்க்கலாம்..கருப்பா இருப்பதால “கருங்குருவி“, மீன் துடுப்பு போல வாலின் இறுதியில்
இருப்பதால் “கருவாட்டு வாலி“, மாடு கூடவே சுத்துறதால “மாடுமேய்ச்சான்“, வால் பிளந்து இரண்டாக இருப்பதால ” இரட்டைவால் குருவி” இப்படி பல பெயர்கள் இவருக்கு.

கருங்கரிச்சான் ( Black Drongo )
கருங்கரிச்சான் ( Black Drongo )

விடியற்காலை சேவலுக்கு முன்னாடியே எழுந்து குரல் கொடுக்கும் பழக்கம் இருக்கு.

“கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சாலும் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே” என்கிற ஆண்டாள் திருப்பாவையில் ஆனைச்சாத்தன் என்பதை தனது முதல் நூலான ‘தமிழ்நாட்டுப் பறவைகள்‘ என்னும் நூலில் கருங்கரிச்சான் என்று சொல்கிறார் முனைவர்.க.ரத்னம் அவர்கள்..

இவரே பின்னாளில் எழுதிய ‘தமிழ்ச்செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்’ என்னும் நூலில் ஆனைச்சாத்தன் என்பதை “துடுப்புவால் கரிச்சான்” என்ற மாற்றுக்கருத்தையும் வைக்கிறார்.

கருங்கரிச்சான் ( Black Drongo )
கருங்கரிச்சான் ( Black Drongo )

எனக்கென்னவோ பெரும்பரவலும், நம்மிடையே கலந்துபழகும் இயல்பினை நோக்குங்கால் ஆனைச்சாத்தன் என்கிற சொல் ‘கருங்கரிச்சானையே’ (Black Drongo) குறிக்கும் என்பது எனது கருத்து.(படிக்கும் நண்பர்களிடத்தும் இதுகுறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.)

ஆட்டின் மேல் ஓ.சி.சவாரி.. :) கருங்கரிச்சான் ( Black Drongo )
ஆட்டின் மேல் ஓ.சி.சவாரி.. 🙂 கருங்கரிச்சான் ( Black Drongo )
2.துடுப்புவால் கரிச்சான் ( Greater Racket-tailed Drongo – விலங்கியல் பெயர் Dicrurus paradiseus)

இரண்டாவதாயுள்ள துடுப்புவால் கரிச்சான், வால்பகுதியில் இரண்டு மெல்லிய கம்பி நீண்டவால் கொண்டு, இறுதியில் துடுப்புபோல திரும்பி நிற்கும்..தலையில் பின்னோக்கி அமைந்த சிறிய கொண்டையுண்டு.

துடுப்புவால் கரிச்சான்
துடுப்புவால் கரிச்சான்..நீண்டு தொங்கும் கம்பி வால்கள் தனித்த அடையாளம்..தலையின் உச்சியில் பின்னோக்கி வளைந்த கொண்டை பாருங்க..
துடுப்புவால் கரிச்சான்..நீண்டு தொங்கும் கம்பி வால்கள் தனித்த அடையாளம்
துடுப்புவால் கரிச்சான்..நீண்டு தொங்கும் கம்பி வால்கள் தனித்த அடையாளம்

பார்ப்பதற்கு பெரிய உருவமாய் இருக்கும்.காட்டுக்கு உள்ளேயேயும், காட்டை ஒட்டியுள்ள சமவெளிப்பகுதியிலும் கண்டிருக்கிறேன்…பெரும்பாலும் இணையாக..பயங்கரமாய் குரலை மாற்றி மாற்றி மிமிக்ரி செய்து கொண்டேயிருக்கும்…ஏற்காடு மலைப்பகுதியில் துடுப்புவால் கரிச்சான் ஒரு முறை பூந்தாதினை பருகக் கண்டேன்..இந்த இணைப்பில் சென்று காணுங்கள்.. https://m.facebook.com/story.php?story_fbid=1233756410129770&id=100004862680734

பூந்தாது பருகிய துடுப்பு வால் கரிச்சான்..
பூந்தாது பருகிய துடுப்பு வால் கரிச்சான்..
3.வெள்ளைவயிற்றுக் கரிச்சான் ( White – bellied Drongo – விலங்கியல் பெயர் Dicrurus caerulescens)

 

வெள்ளை வயிற்றுக் கரிச்சான், நெஞ்சுப் பகுதியில் கருஞ்சாம்பல் நிறத்தில் தொடங்கி முடிவில் வெள்ளை நிற வயிறையுடையது.சிறிய உருவம்தான்..

வெள்ளைவயிற்றுக் கரிச்சான் ( White - bellied Drongo)
வெள்ளைவயிற்றுக் கரிச்சான் ( White – bellied Drongo)

இதுவும் பெரும்பாலும் மலைகள், மலைகளில் அமைந்த கிராமப் பகுதிகளில் சாதாரணமாய் காணக்கூடியதாகவும் உள்ளது.(இளம்பருவ கருங்கரிச்சான் black drongo பறவைக்கும் வயிற்றுப் பகுதியில் கருப்பு, வெள்ளையாக புள்ளிகள் காணப்படும் என்பதை நினைவில் கொள்க)

 

4.கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo – விலங்கியல் பெயர் Dicrurus aeneus)

டாலடிக்கும் கரும்பச்சைக் நிறம் கரும்பச்சைக் கரிச்சானின் தனித்த அடையாளம்..
கண்ணுக்குப் பக்கத்திலும் , கண்ணைச்சுற்றிலும் இந்த மினுக்கல் இருக்காது..கருப்பாகவே இருக்கும்..உச்சந்தலையிலிருந்து கீழிறங்கி இறக்கைகளின் மேல்பகுதியில் மற்ற கரிச்சான்களை விட ஜொலிக்கும் அந்த கரும்பச்சை நிறத்தை காணலாம்..வால் குட்டையானது.அவ்வளவாய் பிளவுபடாதது.Bronzed எனப் பெயர் வரக்காரணம் அதன் நிறமே..மலை ஓடைகளில் அமைந்துள்ள பெருமரங்களில் சுறுசுறுப்பாய் இரை பிடித்து உண்பதைக் கண்டுள்ளேன்.

கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo) உடல் மேலுள்ள மின்னும் கரும்பச்சை பாருங்க...கண்ணருகில் இது மிஸ்ஸிங்..
கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo) உடல் மேலுள்ள மின்னும் கரும்பச்சை பாருங்க…கண்ணருகில் இது மிஸ்ஸிங்..
கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo) உடல் மேலுள்ள மின்னும் கரும்பச்சை பாருங்க...கண்ணருகில் இது மிஸ்ஸிங்
கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo) உடல் மேலுள்ள மின்னும் கரும்பச்சை பாருங்க..
5.கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo / Hair-crested Drongo – விலங்கியல் பெயர் Dicrurus hottentottus)
கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo) தலையில் பின்னோக்கி வளர்ந்து வளைந்து தொங்கும் தூவிகள் உற்றுப்பாருங்க...தெரியும்..அலகு நீளமாய் சற்று கீழ்நோக்கி வளைந்த மாதிரி இருக்கா?
கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo) தலையில் பின்னோக்கி வளர்ந்து வளைந்து தொங்கும் தூவிகள் உற்றுப்பாருங்க…தெரியும்..அலகு நீளமாய் சற்று கீழ்நோக்கி வளைந்த மாதிரி இருக்கா?

கொண்டைக் கரிச்சான் Spangled Drongo/ Hair crested drongo உச்சந்தலையில் தொடங்கி பின்னோக்கி வளர்ந்துள்ள தனித்த தூவிகளை உடையது.(துடுப்பு வால் கரிச்சானுக்கும் இது இருக்கும் எனினும் அது சுருண்டபடி நீளம் மிகக் குறைவாய் தலையை ஒட்டியபடி இருக்கும்). ஆனால் இதற்கு மெல்லியதாய் சில சென்டி மீட்டர்கள் கம்பி போல வளர்ந்து தொங்கும்.வால்பகுதி அகலமாயும், இரண்டுபுறமும் மேல்நோக்கி சுருண்டும் காணப்படும்..அலகானது மற்ற கரிச்சான்களை ஒப்பிடும் போது நீளம் அதிகமாகவும், கொஞ்சமாய் கீழ்நோக்கி வளைந்தமாதிரியும் உள்ளது.

கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo)அலகு நீளமாய் சற்று கீழ்நோக்கி வளைந்த மாதிரி இருக்கா? பின் வால்பகுதி தட்டையாய் இருக்கா?
கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo)அலகு நீளமாய் சற்று கீழ்நோக்கி வளைந்த மாதிரி இருக்கா? பின் வால்பகுதி தட்டையாய் இருக்கா?

 

 

கடைசியா இருப்பவன், உள்ளூர் வலசைக்காரன்..சாம்பல் கரிச்சான்..

6.சாம்பல் கரிச்சான் ( Ashy Drongo – விலங்கியல் பெயர் Dicrurus leucophaeus)

பளீரென கருப்பாக இல்லாமல் உடல் முழுமைக்கும் சாம்பல் கலந்த கருப்பு நிறம் தனித்த அடையாளம்.குளிர்காலத்தில் இமயமலையிலிருந்து வருகை தருபவன்.இங்கு வந்தாலும் கண்ட இடங்களில் சுற்றாமல், மலைக்காடுகளுக்குச் சென்று விடுவான்…எனவே இவனையும் நீங்கள் மலைகளில் மட்டுமே காண இயலும்…

சாம்பல் கரிச்சான்...அட்டக் கருப்பாய் இல்லாமல் மங்கலான கருப்பாய் இருப்பது தெரிகிறதா? சிவப்புக் கண்களும் அடையாளம்
சாம்பல் கரிச்சான்…அட்டக் கருப்பாய் இல்லாமல் மங்கலான கருப்பாய் இருப்பது தெரிகிறதா? சிவப்புக் கண்களும் அடையாளம்

கரிச்சான்கள் அனைத்துமே கூடுகட்டி முட்டையிடுபவையே..இவை எந்த ஒரு பிற பறவையையும் தனது கூட்டருகே அனுமதிப்பதில்லை..எனவே அதன் கூட்டருகே வரும் பறவைகளை துரத்தி விரட்டிக் கொண்டே இருக்கும்..அதனால்தான் பொதுவாகவே சில பறவைகளுக்கும் கரிச்சான்களுக்கும் சண்டை வந்துகொண்டே இருக்கிறது.

 

மாணவனின் கரிச்சான் ஓவியம்!
மாணவனின் கரிச்சான் ஓவியம்!

மற்ற எல்லா கரிச்சான்களும் சேலம் பகுதியில் என்னால் படம் பிடிக்கப்பட்டவை..எனக்கு இதுவரை தரிசனம் தராத கொண்டைக் கரிச்சான் (spangled drongo) படத்தினை சிறந்த கானுயிர் படக்கலைஞரும், அருமை நண்பருமாகிய Thirumalai RT Venkatraman அவரிடமிருந்து பெற்றுப்பதிந்துள்ளேன்..

அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடன்,
கலை,
சேலம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *