LatestNatureTOP STORIES

தாமிரபரணி ஒரு அதிசயம்

Spread the love

மீள்
தாமிரபரணி ஒரு அதிசயம்…!
*******************************

பாபநாசம் அதற்கு மேல் காரையார் அதற்கும் மேல்???

ஆளை விழுங்கும் புல்வெளி காட்டுப்பயணம்

இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணியின் நீர்பிடிப்புப் பகுதி (படம்) வழியில் “லாத்திமோட்டா” என்றொரு இடம் வருகிறது. இங்கே யானைகள் வந்தால் பாதுகாப்புக்காக ஓடி ஒளிய சிறு குடில் இருக்கிறது. அகழி தோண்டி அதில் மனிதன் நடக்கும் வகையில் சிறு மரப்பாலம் அமைத்து, மறுபக்கம் குடிலை கட்டியிருக்கிறார்கள். தொலைவில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தாலும் குடிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படவில்லை.

காட்டு வழியில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. ஆண்டுக்கணக்கில் விழுந்து கிடந்த பிரம்மாண்டமான சில மரங்கள் பாறைகளைப் போல இறுகிக் கிடந்தன.

சில இடங்களில் விழுந்த மரங்களே சிற்றாறுகளுக்கு பாலங்களாக அமைந்தன. உயரமான அத்தி மரங்களில் இருந்தும், நீர்மத்தி மரங்களில் இருந்தும் சிங்கவால் குரங்குகள் (Lion tailed macaque) கொத்துக் கொத்தாக கொழுந்து இலைகளையும் பூக்களையும் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தன.

மந்திகள் பறித்துப் போடும் அந்த கொழுந்து இலைகளை மான்கள் விரும்பி சாப்பிடும். மந்திகளுக் கும் மான்களுக்குமான பந்தம் அது. அதேபோல புலிகள், சிறுத்தைகள் மான்களை வேட்டையாட பதுங்கினால் கடுமையாக குரல் எழுப்பி மான்களை உசுப்பிவிடும் இந்தக் குரங்குகள்.

பொதிகை மலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளான சிங்கவால் குரங்கு, நீலகிரி கருமந்தி (Nilgiri langur), செந்தேவாங்கு (Slender loris), தமிழ கத்தின் மாநில விலங்கான வரையாடு (Nilgiri thar) ஆகியவை வசிக்கின்றன. இவைத் தவிர, பழுப்பு மரநாய் (Brown palm civet), பழுப்பு மர எலி (Malabar spiny dormouse), இலிங்கன் (Nilgiri marten) ஆகியவையும் இங்குள்ளன. இவை அனைத்துமே அழியும்தருவாயில் இருக்கும் அரிய வகை உயிரினங்கள்.

தவிர மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய 1,500 அரிய வகை தாவரங்களில் பொதிகையில் மட்டுமே 150 வகை தாவரங்கள் இருக்கின்றன. இவை மருத்துவப் பலன்கள் மிக்கவை. இந்தத் தாவரங்களை கையாள்வதில் பாரம்பரிய அறிவைப் பெற்றவர்கள் “காணி”கள்.

அழியும் பட்டியலில் இருக்கும் அரிய வகை “அமிர்தபலா” தாவரம் (Decalepis arayalpathra) இங்கு விளைகிறது. இது முற்றிய வயிற்றுப் புண், புற்றுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.

ஒரு மணி நேரம் நடந்ததும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. கருமனை ஆறு. தொடர்ந்து வாலைபிந்தியாறு அருவியில் குளியலை முடித்துவிட்டு, நாலாறு என்ற சிற்றாற்றைக் கடந்து நடந்தோம் நம் சித்தர்களின் குரல் நண்பர்களுடன். நாலாற்றைக் கடந்தவுடன் ஏராளமான பறவைகளின் கான கீதங்கள் மயக்கின. அரிய பறவையினமான மலபார் தீக் காக்கையை (Malabar trogon) பார்க்க முடிந்தது. அரிய வகை சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey breased laughing thrush) இங்கு காணக் கிடைத்தது ஆச்சர்யமே. நீட்டி, நிதானமாகவும், நல்ல சத்தமாகவும் “ப்ப்பீ… கோகோ… ப்ப்பீ… கோகோ…” என்று இவை கூவுவது ஏதோ குழந்தை கொஞ்சுவதுபோல இருக்கிறது. இந்தப் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித் ததும் தங்கள் கூடுகளை அழித்துவிடும். பச்சை நிறத்திலான சாம்பல் தலை சின்னானும் இங்குக் (Grey headed bulbul) காணக் கிடைத்தது.

பொதிகை மலை உச்சியில் அமைந்துள்ள அகத்தியர் சிலை.

புல்வெளி தந்த குளியல்:-
**************************

இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் மிகப்பெரிய புல்வெளி வந்தது. ஆளை விழுங்கும் புல்வெளி அது. கண் கண்ணாடி அணிந்துக்கொண்டு முகத்தை துணியால் சுற்றிக்கொள்ளச் சொன்னார்கள். இல்லை எனில் முகத்தில் சிராய்ப்பை ஏற்படுத்திவிடும் இந்த புற்கள். புல்வெளியைக் கடப்பதற்குள் தெப்பலாக நனைந்துவிட்டோம். காலுக்கு கீழேயும் சதுப்புநிலம் போலிருந்தது. அவ்வளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்கின்றன அந்தப் புற்கள். இதுவும் ஒருவகையில் தாமிரபரணி குளியல்தான். ஏனெனில் தாமிரபரணி உள்ளிட்ட தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமே இதுபோன்ற புல்வெளிக் காடுகள்தான். இதனை முதன்முறையாக அனுபவரீதியாகவும் அறிந்துக்கொள்ள முடிந்தது. தொடர்ந்து முட்டு இடிச்சான் தேரி மலை, அட்டைக்காடு கடந்து வந்துதான், அத்திரிமலை பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

வரையாடு:-
************

மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுப்பிவிட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். இருளில் கண் முன் மலை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. வானம் புலர்ந்த பொழுதில் ஈத்தல் காட்டுக்குள் நுழைந்தோம். ஈத்தல் என்பது ஒருவகையான மூங்கில். அடுத்து கடும் ஏற்றம். உருண்டையான வழுக்குப் பாறைகளின் மீது ஏற வேண்டியிருந்தது. நடுவே சிறிய சமதளம் வந்தது. தாமரைக் குளம் என்றார்கள். காட்டாறு இது. ஆற்றில் இறங்கிக் கடக்கும் முன்பு மேகத்தை உற்று கவனித்தார்கள். மேகக்கூட்டத்தை வைத்து காட்டாற்று வெள்ளம் வருமா என்பதை கணிக்கிறார்கள்.

நண்பகல் 12 மணி வாக்கில் இன்னொரு சமதளம் வந்தது. “பொங் கலா பாறைல்” என்றார்கள். இங்கிருந்து அரை மணி நேரம் ஏற்றம் ஏறியதும், உயர்ந்த பாறைச் சரிவில் இரும்பு ரோப் கட்டியிருந்தார்கள். நல்ல உயரம். “கீழே பார்த்தால் தலை சுற்றும். ஒரே மூச்சில் ஏறிவிடுங்கள்” என்றார்கள். ஒருவழியாக ஏறிவிட்டோம். இங்கிருந்து உரலிடிச்சான் பாறை, வழுக்குப் பாறை, இடுக்குப் பாறை ஆகிய மூன்று பகுதிகளை கடந்தோம். மீண்டும் அதேபோல ஒரு இரும்பு ரோப். இன்னும் இது உயரம். “இங்கு மட்டும் ஏறிவிட்டால் பொதிகை மலை உச்சி” என்றார்கள். மூச்சு முட்டியது. உடல் நடுங்கியது. தாமிரபரணி தாய் மீது பாரத்தை போட்டுவிட்டு, ஒரே மூச்சில் ஏறி, சமதளத்தில் சரிந்து விழுந்தோம்.

பொதிகை உச்சியில் #அகத்தியர் சிலையாக காட்சியளித்தார். பக்தர்கள் பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள். ‘ஊ…’ என்ற சத்தத்துடன் ஆளையே அடித்துச் செல்வதுபோல காற்று வீசி யெறிந்தது. கடல் மட்டத்தில் இருந்து 6,122 அடி உயரத்தில் மலை உச்சியில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தோம். வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது.

வண்டுகளின் இடையறாத ரீங்காரம், விதவிதமான விலங்குகளின் குரல்கள் என இரவுக்காடு இன்னொரு அனுபவம் அளித்தது. தூரத்தில் ஒரு பக்கம் திருவனந்தபுரம் ஒளிர்கிறது. விண்ணில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின. நிலா பொழிந்தது. வானம் அருகில் இருப்பதைப் போல பிரமிப்பு. மறுநாள் காலையில் தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளத்தை பார்த்து விடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது!

பூங்குளத்தில் பிறக்கிறாள் தாமிரபரணி:-
*******************************************

பொதிகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வரும் தாமிரபரணி, தமிழகத்தின் #பூங்குளம் இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளத்தில் வெளியே தெரிகிறது. குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால் இதனை #பூங்குளம் என்று அழைக்கிறார்கள். இதுதான் #தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது தமிழக வனத்துறை.

நமது பொதிகை மலைப் பயணத்தின் நோக்கமே நதிமூலமான பூங்குளத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் வழியாக தற்போது பூங்குளத்தை அடைய முடியாது. அதேசமயம் கேரளம் வழியாக பொதிகை மலைப் பயணத்திலும் பூங்குளத்தை அடைய முடியாது. பொதிகை மலைப் பயணத்தில் மலை உச்சியில் இருந்து கீழே தூரத்தில் இருக்கும் பூங்குளத்தைப் பார்க்க மட்டுமே முடியும். அதுதான் நதிக்கும் நல்லது. நமக்கும் நல்லது.

பூங்குளத்தை மறைத்த மேகங்கள்:-
*************************************

இரவு முழுவதும் பொதிகை உச்சியில் அகத்தியர் மொட்டையில் அமர்ந்திருக்கிறோம். விடிந்தது. ஆனால், இரவில் தெளிவாக இருந்த வானம் காலையில் மேகங்களால் போர்த்திக் கொண்டது. மலை உச்சியை மேகக் கூட்டங்கள் அப்பிக்கொண்டன. காலை 10 மணியாகியும் மேகங்கள் கலையவில்லை. ஒருவழியாக நண் பகல் 12 மணிவாக்கில் மேகக்கூட்டங்கள் கலைந்து பளிச்சென்று சூரியன் வெளிச்சம் வந்தது.

கிழக்கில் கீழே அதள பாதாளத்தில் பாபநாசம் அணை தெரிந்தது. அதற்கு மேலே பூங்குளம் தெரிந்தது. சுற்றிலும் சோலைக்காடுகள் சூழ செவ்வக வடிவத்தில் இயற்கையான சிறு குளம் போல இருக்கிறது பூங்குளம். இவ்வளவு சிறிய குளத்தில் பிறக்கும் தாமிரபரணிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கர் நிலங்களை வளமையாக்குகிறது.

தமிழகத்தில் இருந்து பாபநாசம் வழியாக காரையாறு அணை வரை மட்டுமே செல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு காரையாறு அணையில் இருந்து படகு மூலமாக #பாணதீர்த்தம் அருவி வரை பயணிகள் அனுமதிக்கப்பட்டார்கள். பின்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடைவிதிக் கப்பட்டுவிட்டது. இந்தத் தடைவிதிப்புக்கு முன்பாக எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான முத்தாலங் குறிச்சி காமராசு பலமுறை பூங்குளத்துக்குச் சென்றிருக்கிறார். அவரும் தற்போது பொதிகைக்கு நம்முடன் வந்தார். தமிழகம் வழியாக பூங்குளத்துக்கான பயணம் குறித்து அவரிடம் கேட்டோம்.

தமிழகம் வழி பூங்குளம்:-
**************************

“களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி அது. காரையாறு அணை 144 அடி நிரம்பியிருந்தால் பாண தீர்த்தம் அருவி வரை படகில் செல்ல முடியும். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் ஒரு கி.மீ. தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும். பாணதீர்த்தத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மலை மீது ஏறிச் சென்றால் பூங் குளத்தை அடையலாம். வழியில் பாண்டியன் கோட்டை என்கிற புராதனக் கோட்டையின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதனை விக்கிரபாண்டியன் ஆண்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பாபநாசத்தில் இருந்து கோட்டை வரை 127 முரசு மண்டபங்கள் இருந்தன. எதிரிகள் நுழைந்தால் பாபநாசத்தில் முதல் முரசை ஒலிப்பார்கள். அடுத்தடுத்து முரசுகள் ஒலித்து கோட்டைக்கு தகவல் செல்லும்.

வழியே இஞ்சிக்குழி என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு சொற்ப எண்ணிக்கையில் காணிகள் வசிக்கிறார்கள். தொடர்ந்து ஏறினால் கன்னிக்கட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு வனத்துறையின் பங்களா உள்ளது. இங்கிருந்து மேலே சென்றால் பேயாறு ஓடும். அதனை கடந்தால் பூங்குளத்தை அடையலாம். பூங்குளம் பகுதியில் கருடா மலர்கள் அதிகம் பூத்தால் அந்த ஆண்டு தாமிரபரணியில் அதிகம் தண்ணீர் வரும் என்பது காணி மக்களின் நம்பிக்கை” என்றார்.

7 ஆறுகள் சங்கமம்:-
**********************

பூங்குளத்துக்கு முன்பாகவே பேயாறு, சிற்றாறு, உள்ளாறு ஆகிய 3 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. அதன் பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் காரையாறு, மயிலாறு, பாம்பாறு ஆகிய ஆறுகள், மேலணைக்கு வந்து தாமிரபரணியுடன் இணைகின்றன. அதன் பின்பு கிழே முண்டந்துறை வன ஓய்வு விடுதி அருகே தாமிரபரணியுடன் சேர்வலாறு சேர்ந்துக்கொள்கிறது. இப்படியாக வன பகுதியில் மட்டும் 7 ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் பயங்கரமான காட்டு ஆறுகள். கற்பனைக்கு எட்டாத வேகத்தில் திடீரென வெள்ளம் புரண்டோடும். கடந்த 92-ம் ஆண்டு அப்படி ஒரு வெள்ளம் சேர்வலாற்றில் வந்தபோது அங்கிருந்த பெரும் பாலம் ஒன்று சுவடு தெரியாமல் அடித்துக்கொண்டு போய்விட்டது.

அதன் பின்புதான் அங்கு இரும்பு பாலம் அமைத்தார்கள். இங்கிருந்து அடர் வனத்துக்குள்ளாகவே கீழ் நோக்கி பாய்ந்து வரும் தாமிரபரணி, முதல்முறையாக ஓரிடத்தில் பாறைகளுக்கு இடையே வெளியே அருவியாக துள்ளிக் குதிக்கிறாள். அதுதான் பாண தீர்த்தம்!

பூமிக்குள் சுரங்கப் பாதை:-
****************************

சேர்வலாறுக்கும் அணைக்கும் காரையாறு அணைக்கும் இடையே பூமிக்குள் 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. காரையாறு மேலணையில் தண்ணீர் அளவு 40 அடிக்கு மேல் இருந்தால் அது தானாக சுரங்கப் பாதை வழியாக சேர்வலாறு அணைக்குச் சென்றுவிடும். அதேபோல் மேலணையில் 40 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக மேலணைக்குச் சென்றுவிடும். மேலணையும் சேர்வலாறு அணையும்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பில் இருக்கின்றன. மேலணையில் 4 யூனிட்கள் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தி தடையில்லாமல் நடக்கவே இந்த ஏற்பாடு.

இந்த அகத்திய மலைக்கு நீங்களும் போகணுமா?
************************************************************

அகத்தியமலை பற்றி படித்த அனைவருக்கும் அங்கே போக வீண்டும் என்ற எண்ணம் ஊற்றெடுக்கிறது. இது இயற்கை தானே? நம்ம தாமிரபரணி பிறப்பிடம் யாருக்குத்தான் பிடிக்காது…?

பூங்குளம், அகத்தியர் மலை, ஏன் பாண தீர்த்தம் அருவிக்குக்கூட நாம் இப்போது புக முடியாது. நமது பாண தீர்த்த அருவி வழியாக போய் வந்தார்கள்தான்; ஆனால் அனைத்து வழிகளையும் நம் தமிழக வனத்துறை இழந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. இரண்டு வருடங்களாக பாணதீர்த்தம் வழி அடைக்கப்பட்டுவிட்டது என்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

இரண்டு வருடம் முன்பு இந்தியக் காடுகளுக்கான சர்வே எடுக்கப்பட்டதாம், அப்போது அகத்தியர் மலை கேரள வனத்துறைவசம் போய்விட்டது.

எனவே இப்போது அகத்திய மலை போக, முதலில் திருவனந்தபுரம் போய் அங்குள்ள வனத்துறையிடம் அனுமதிச் சான்று வாங்க வேண்டும்.

அந்த அனுமதிச் சான்று போதும். 15 அல்லது 20 நண்பர்கள் இணைந்து பொதிகைமலை பயணத்தைத் தொடங்கலாம். வயதானவர்களும், நோயாளிகளும் வேண்டாம்.

திருவனந்தபுரத்திலிருந்து நெய்யாறு அணை வரை ஜீப்பில் செல்லலாம்.

அதன்பிறகு 6.2 கிலோ மீட்டர் தூரம் கடும் சரிவான மலை மீது நடந்தால் சீக்கிரமாய் அகத்தியர் மலையையும் அதைவிட அதிக ஆச்சரியமாக தாமிரபரணி புறப்படும் சிறிய குளத்தைப் பார்க்கணுமே அவ்வளவு அழகு…!

குளத்தைச் சுற்றிலும் அடர் காடுகளின் செடிகளில் பூக்க்ள் பூத்து அழகுக்கு அழகு செய்தது போல் அந்தக் குளம் தோற்றமளிக்கும் .

6 கிலோ மீட்டர் தூரம் என்பதால் ஆபத்து குறைவு.

அழகாக சென்று வாழுங்கள் தாமிரபரணியின் ஆசியோடு….!!!

மதியம் வணக்கம் தோழர்களே தோழிகளே _ தமிழன் MSK

Leave a Reply