FEATUREDLatestNature

சீ காரப் பூங்குருவி

Spread the love

சீ காரப் பூங்குருவி
Malabar Whistling Thrush.
வால்பாறை, 22/09/2019.

மலபார் என்ற சொல்லால் தொடங்கும் பறவைகள் பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் ஓரிட வாழிகளாகும். சில இதற்கு விதிவிலக்காக அமைந்ததும் உண்டு. இந்தச் சீகாரப்பூங்குருவியும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வெளியே வாழ்வதற்கான சில குறிப்புகள் உள்ளதாக அறிய முடிந்தது. அந்த வகையிலே நமக்கு மிகவும் பழக்கப்பட்ட பறவையே இந்த Malabar Whistling Thrush. இதன் தமிழ் பெயர் சீகாரப் பூங்குருவி என்பதாகும். சீல்க்கை என்பது விசிலைக் குறிக்கும் சொல். அச்சொல்லிலிருந்தே சீகாரப் பூங்குருவி எனப் பெயர் பெற்றிருக்கலாம். கொடைக்கானல், உதகை, மூணாறு, வால்ப்பாறை போன்ற தேயிலைத் தோட்டம் சார்ந்த பகுதிகளில் ஒழுகும் நீரோடைகளுக்கு அருகே இவற்றை அடிக்கடி காணலாம். உயர்ந்த பகுதிகளில் மட்டுமே காணும் இவை சில நேரங்களில் மலை சார்ந்த தாழ்வான பகுதிகளிலும் காட்சி தருவது உண்டு. சாதாரணமாக தனிமையில் இரை தேடுவதே இவற்றின் தனித்தன்மையாகும். நீரோடை சார்ந்த மணல்வெளியின் அருகில் உள்ள சருகு இலைகளை அலகால் விலக்கி இவை இரை தேடும் காட்சி கிளி ஜோசியம் பார்ப்பதற்குப் பயன்படுத்தும் கிளி ஒவ்வொரு அட்டையாய் விலக்கி விலக்கி எடுப்பது போன்று தோன்றும். ஏகதேசம் மைனாவின் வடிவை ஒத்த இவற்றின் வண்ணம் கருநீலம் கலந்த கருப்பாகும். காலை நேரங்களில் ஆண் சீகாரப் பூங் குருவிகளின் நீளமான விசிலோடு தான் சில இடங்களில் பொழுது புலர்கிறது. இவற்றின் விசில் சத்தத்தில் மயங்கிய ஆங்கிலேயர் இதற்கு School Boy என்ற விளிப் பெயரையும் வைத்துள்ளது ஆச்சரியமான விஷயமாகும். அருவிக்கரை ஓரங்களிலுள்ள பாறை இடுக்குகள் பொந்துகள் வீடுகளின் கூரை போன்ற பகுதிகளில் இவற்றின் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply