FEATUREDHealth

கொரோனா கற்றுக் கொடுத்த பாடம் என்ன

Spread the love

கொரோனா கற்றுக் கொடுத்த பாடம் என்ன?

சளி, இருமல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும் போது, நேரடியாக மருந்தகங்கள் சென்று ‘அந்த மாத்திரையக் குடுங்க… இந்த சிரப்ப குடுங்க’ என கேட்டு மருத்துவர் பரிந்துரையில்லாமல் சிந்தடிக் மருந்துகளை வாங்கும் பழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது. உடல் சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டோம்!

நிறைய கேள்விகள் கேட்கும் அந்நியன் ’அம்பியாக’ உருப்பெற்றிருக்கிறோம். நம் பகுதியின் சாபக்கேடு கண்ட இடத்தில் எச்சில் துப்புவது… பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னல் வழியே சளித் திவளைகளை தெறிக்கிவிடுவது (அதில் சில புகையிலை துணுக்குகள் இன்னபிற தொற்றுக் கிருமிகளும் மிதந்துவரக்கூடும்)… 80 கிமி வேகத்தில் செல்லும் இருசக்கர வாகனத்திலிருந்து பின் பயணிக்கும் அனைவரின் முகத்திலும் எச்சில் படியும்படி காரி உமிழ்வது (இதுக்குத்தான் தலைக்கவசம் நம் பகுதியில் மிக மிக அவசியம்)… இவ்வளவு நாட்களாக இவர்களை கேள்வி கேட்காமல் இருந்த சாதுக்கள், இப்போது பொங்கி எழுவதை நேரடியாக பார்க்கமுடிகிறது.

நோயில்லாமல் வாழ நாம் பின்பற்றி வந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டோம்! நோயில்லாமல் வாழ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவம் உணர்த்தும் எண்ணெய்க் குளியல்… பேதி, வேது போன்ற கழிவுநீக்க முறைகள்… இயற்கை பொருட்களைக் கொண்டு சுகாதாரத்தை பேணுவது எப்படி போன்ற செயல்பாடுகளை தூசித்தட்ட ஆரம்பித்துவிட்டோம்! ‘வரும் முன் காப்போம்…’ எனும் மருத்துவ உத்தி எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் புரிந்திருக்கும்! உடல் நலன் மீது அக்கறை இல்லாமல் இருப்பது, எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இனி மாறலாம்!… வரும் காலங்களின் தேவை ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது புரியும்!

தொழில்நுட்பத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற மமதை உடைபட்டிருக்கிறது. பேருந்துகளிலும் ரயில்களிலும் மடிந்துக்கிடக்கும் போர்வைகளின் தூய்மையைப் பற்றி உலகறிந்திருக்கும். பணத்தை வைத்துக்கொண்டு இருபத்தி நான்கு மணி நேரமும் ஏ/சியிலேயே சுகபோகியாக வாழ்ந்துவிட முடியாது எனும் வாழ்க்கை தத்துவத்தை இயற்கை உணர்த்தியிருக்கிறது. விடுமுறையே விடாமல் ஆறாம் வகுப்பிலிருந்தே நீட் கோச்சிங்… நைட் கோச்சிங் கொடுத்துக்கொண்டிருந்த பள்ளி நிர்வாகங்கள், சானிடைசர் கொண்டு கைக்கழுவ ஆரம்பித்துவிட்டன (பள்ளிக் குழந்தைகள் தப்பித்தார்கள்)!

இயற்கையின் வலிமைக்கு எதிராக யாரும் விதிவிலக்கல்ல என்பது புரிந்திருக்கும். ’இயற்கைக்கு எதிராக நாம் செய்த சதிவேலைகள் திரும்பி அடிக்க தொடங்கிவிட்டதா’ என்ற உண்மை சிலரை வாட்டியிருக்கிறது. ’தொற்று நோய்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்பு இருக்கிறதா’ என வினாவிய அதிமேதாவிகளுக்கான பதில் இப்போது கிடைத்திருக்கும்… சூழலை பாதுகாக்கவில்லை எனில் இன்னும் நிறைய ’தொற்றுப்பிழைகளை’ சந்திப்போம்!…

– Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply