கொரோனாவும் சிறுவர் சிறுமிகளும்

Spread the love

கொரோனாவும் சிறுவர் சிறுமிகளும்

’விட்டாச்சு லீவு… அய்யோ நம்ம பசங்கள இப்போ எப்படி பாதுகாக்குறதுனு தெரியல’ என புலம்பும் பெற்றோர்களைக் காண முடிகிறது. ஆனால் இப்போதைய சிறுவர்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்துவது மிக மிக எளிது. அப்படித்தானே! காரணம் அனைவருக்கும் தெரிந்தது தான்!…

துள்ளித் திரிந்து வெவ்வேறு தெருக்களுக்குப் பயணித்து, பல்வேறு சிறுவர்களுடன் கூடி, குழு விளையாட்டுக்களை மகிழ்ந்து அனுபவித்து வேர்க்க விறுவிறுத்து வீடு திரும்பும் இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். ஆதாலால் அவ்வகையில் பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை! ஆனால் செல்போன்களே கதி என்று கிடக்கும் அவர்களின் நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது! கொரோனா பிரச்சனைக்கு செல்போனால் வரும் பாதிப்பு பரவயில்லை என்று நீங்கள் நினைத்தால், இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

பிரபல தொலைக்காட்சியில் கொரோனா சார்ந்த ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வருகிறது. அதில் விடுமுறையில் இருக்கும் பள்ளி சிறுவன், நன்றாக கைகளை கழுவுகிறான்… பணிக்கு சென்று வரும் தந்தையையும் கைக்கழுவ வலியுறுத்துகிறான். அதன் பிறகு அந்த சிறுவனும் அவனது தந்தையும் செல்போனைப் பார்த்து கொஞ்சிக் குழாவுவது போல அந்த விளம்பரம் நிறைவடைகிறது!… விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் அதில் தந்தையும் மகனும் செல்போனைப் பார்த்து தான் பேசி நேரம் செலவழிக்க வேண்டுமா!…

இது தான் நேரம்… வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது ‘ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, பேர்சொல்லி, தாயம், சதுரங்கம், பரமபதம், பூச்சொரிதல் போன்ற விளையாட்டுக்களை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தி மீண்டும் பாரம்பரிய நுண்ணறிவைத் தூசி தட்டலாம். ஆனால் சொல்லிக்கொடுக்க பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? இருக்கவே இருக்கின்றன நிறைய புத்தகங்கள்… காணொளிகள்… அதையும் தாண்டி முதியவர்கள் எனும் அறிவுப் பொக்கிஷங்களை உபயோகிக்கலாம். குடும்பத்துடன் இணைந்து உற்சாகமாக இருப்பதற்கான வாய்ப்பு நமக்கு. முழுநேரமும் செய்திகளை மட்டுமே பார்த்து பதற்றமடையாமல், பெரியவர்களுக்கும் கொஞ்சம் மனம் சாந்தமடையும்.

கொரோனாவின் பெயரைப் பயன்படுத்தி, கீரைகள், காய்கள், பழச்சாறுகள், ஆரோக்கிய உணவுகளை உங்கள் பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள்… ’கீரை, காய் சாப்பிடலானா பூச்சாண்டி வந்துடுவான்…’ அனைத்து அம்மாக்களும் இந்த பதத்தை தங்கள் குட்டிக்குழந்தைகளிடம் சிறுவயதில் கையாண்டிருப்பார்கள். இப்போது ஓரளவு வளர்ந்த பிள்ளைகளிடம் அப்போ சொன்ன பூச்சாண்டி இவன் தான்னு கொரோனாவைக் காட்டி முறையான உணவியலை சொல்லிக் கொடுங்கள்! அதிக உப்பும் சுவையூட்டிகளும் நிறைந்த பாக்கெட் நொறுவைகளைத் தவிர்ப்பதற்கான அழகிய வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது! சாயம் பூசப்பட்ட உணவுப் பொருட்களை எதிரிகளாக காட்டுவதற்கான சூழல் வாய்த்திருக்கிறது! முயற்சிப்போம்!

’இயற்கையே வலிமை’ என்பதை ஆழமாக மனதில் பதிய வையுங்கள்!… வெளியில் சென்றுவந்தால் கை, கால் கழுவி குளிக்கச் சொன்னது எதற்கு… எண்ணெய் தேய்த்து குளிக்கச் சொன்னது எதற்கு… குழந்தைகளுக்கு உரை மாத்திரை கொடுத்து வலிமைப்படுத்தியது எதற்கு… மிளகு ரசத்தையும், கொள்ளு ரசத்தையும் பருகச் சொன்னது எதற்கு… படிப்பு படிப்பு என்றில்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க சொன்னது எதற்கு… போன்ற விஷயங்களின் ஆழத்தை இப்போது கொரோனாவை இயற்கையின் சாட்சியாக வைத்து எடுத்துச் சொல்லுங்கள்!… மாற வாய்ப்பிருக்கிறது!…

எனக்குத் தெரிந்து 90’ஸ் கிட்ஸுக்குப் பிறகு இரண்டரை மாத கோடை விடுமுறைய அனுபவிக்கப் போவது இந்த ஆண்டு பள்ளி மாணவர்களாகத் தான் இருப்பார்கள்!… சம்மர் கிளாஸ் கிம்மர் கிளாஸ் எல்லாம் அனுப்ப வாய்ப்பே இல்லை! அடுத்து வரும் மாதங்களை ஆசைத் தீர அனுபவிக்கப் போகிறார்கள்!… சில பள்ளிகள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீட் பாடம் நடத்தினாலும் நடத்தலாம், கவனம்!…

அழகான வாய்ப்பு இப்போது… செல்போன்களை அதிகம் பயன்படுத்தாமல், நாம் வாழ்ந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவியல் முறையை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர பெற்றோர்கள் முன்வர வேண்டும். இப்போது நாம் கொடுக்கும் மரத்தைப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறை ‘நலத் தேரினை’ நிச்சயம் இழுப்பார்கள்!…

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
அரசு சித்த மருத்துவர், ஆண்டியப்பனூர்

Leave a Reply