கொய்யா

Spread the love

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பறித்த கொய்யா இது. கொய்யாவில் மற்றெல்லோரையும்விட என்ன சிறப்பாய்ச் சொல்லிவிடப் போகிறாய் என நீங்கள் நினைப்பது மிகச் சரி. இது கொய்யாவைப் பற்றியது அல்ல. மரத்தைப் பற்றியது.

இந்தக் கொய்யா கன்று, ஒரு திருமண விழாவில் கொடுக்கப்பட்டது. வீட்டில் நட்டு வைத்தோம். அது வளர்ந்து காய்காய்த்து பழுத்தபோது வியந்தோம். ஆம், விளைந்த கனிகளெல்லாம் அளவில் பெரிது. நாள்கள் இணைந்து வாரங்களாய், மாதங்களாய், வருடங்களாய் கடந்து போனது. காய்களின் அளவும் சிறிதாகிக் கொண்டே வந்தது. இது குறித்து இயற்கை விவசாயத்தை நேசித்துச் செய்யும் மச்சான், என்மீது மாறாப் பாசம் கொண்டுள்ள சு.இராமு அவர்களிடம் கேட்டேன். “ஆட்டுப் புளுக்கை ஒரு குட்டிச் சாக்கு நெறையா எடுத்து, மரத்தைச் சுற்றி குழி பறித்து, அதில் புளுக்கையைப் போட்டு மண்ணிட்டு மூடிவிடு” ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனைப் படி செய்தேன். ஒரே மாதத்தில் பிஞ்சுகள் நன்கு திரண்டு காய்கள் முன்போலவே பெரிதாகக் காய்க்கத் துவங்கியது.

இந்தக் கொய்யா காய்க்கத் துவங்கியதிலிருந்தே பறவைகள் கொய்யாவை கொய்யத் துவங்கியிருந்தது. இதைத் தடுக்க பலர் பலப் பல ஆலோசனைகள் கொடுத்தனர். பிஞ்சு சற்றே பெரிதாகும் தருவாயில் பாலீத்தின் பைகளைச் சுற்றி, சற்றே தளர்வாகக் கட்டுவது, பழைய துணிகளை சற்றே தளர்வாகச் சுற்றி வைப்பது என்று இருந்தது. ஆனால், நான் மறுத்துவிட்டேன். பறவைகள் உண்டது போக மிச்சமிருந்தால்! நாம் பறிப்போம் என்பதே எனது பதிலாக இருந்தது.

இப்போது, நெல், சோளம், எள், மக்காச் சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட தானியப் பயிர்களின் அறுவடை முடிந்த காலமாதலால் பறைவைகளுக்கான தீனி கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. எனவே, எனது வீட்டைச் சுற்றி கிளிகள், இரட்டைவால் குருவிகள், சிட்டு குருவிகள், தேன் சிட்டுகள், புழுதிக் குருவிகள், அழுவண்ணாத்தி (எ) மைனாக்கள், இன்னும் பெயர் தெரியாத பல வண்ணப் பறவைகள் எனக் காற்றில் பண்ணிசைக்கும் பறவைகள் நிறைந்து பறக்கின்றன. வீட்டின் சுற்றுச் சுவருக்குள்ளும் வெளியேயும் கொய்யா, மாதுளை, சீத்தாப்பழம், எலுமிச்சை, வாழை போன்ற பழ மரங்களும்; ரோஜா, செம்பருத்தி, மல்லிகை, முல்லை, சாதி மல்லி, இன்னும் எனக்குப் பெயர் தெரியாத மலர்ச் செடிகளும்; தென்னை, முருங்கை, தேக்கு, சரக்கொன்றை, கடம்ப மரம், மகிழம், பனை, வேலம், வேம்பு, இன்னும் சில பெயர் தெரியாத நிழலும் பயனும் தருகின்ற மரங்களும் நிறைந்துள்ளன.

இந்த மரங்களிலும் செடிகளிலும் விருந்தாளியாய் வந்தமர்ந்து எங்களின் காலை மாலை பொழுதுகளை ரம்மியமாக்குகின்றன இப்பறவைகள். சிலசமயங்களில் தேன் சிட்டுகள் கூடும் கட்டிவிடுகின்றன.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால்! இத்தனை பறவைகளின் பார்வைக்கும் அலகுக்கும் தப்பி இந்தக் கொய்யாவால் முழுதாய் மரத்தில் எப்படி பழுத்துத் தொங்க முடிந்தது?!

“கொய்யாவப் பறிச்சமா தின்னமான்னு இல்லாம, கொய்யால இங்க வந்து கட்டுரை எழுதிக்கிட்டு இருக்க” என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.🚶🚶🚶

https://www.facebook.com/gowthamanprema?__tn__=%2CdC-R-R&eid=ARDgAmNDMgxzN1bTtpwk3rW0aaK0QsrikaVkcz2ndW22Is0CfYspGG3xqmsZ3rQ6pa-I7cwr0rtaDOaN&hc_ref=ARRUJSF_Z8guNyMsoeuPsK4tZQPmORgepmEl71govlFnNPuvGjx5p892R0dfyPRmn7A&fref=nf

Leave a Reply