கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள்

Spread the love

கீழடி: எவருடைய நற்சான்றுக்காகவும் ஏங்காதிருங்கள்!
ம.செந்தமிழன்

கீழடியில் கிடைத்துள்ள தமிழர் நகரம் குறித்த கருத்துகளை உள்வாங்குவோர் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டிய சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகச் சான்று, கீழடியில் கிடைத்துள்ளது என்பது ஆய்வுப் பணிகளில் ஒரு முன்னேற்றமே. ஆயினும், தமிழர் வரலாற்றுத் தொன்மைக்கு முன்னர் இது ஒரு மிகச் சிறிய கால எல்லை ஆகும்.

தொல்காப்பியம் இயற்றப்பட்டது கவாடபுரத்தில். அக்கவாடபுரம் இப்போது கடலுக்குள் உள்ளது. ஈழத்திற்கும் தெற்கே இருந்தது அந்நகரம். இக்கடல்கோள் எக்காலத்தில் ஏற்பட்டது என அறிந்து தெளிவாக உரைக்கும் ஆய்வுகள் ஏதும் நிகழவில்லை. கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் இவ்வளவு பெரிய கடல்கோள் நிகழ்ந்திருப்பதாகவும் தெரியவில்லை.

அவ்வாறெனில், தொல்காப்பியத்தின் காலம் எது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

தொல்காப்பியம் ஓர் இடைச் சங்க நூல். இதற்கும் முன்பு முதற்சங்கம் இருந்தது. அச்சங்கம் மதுரை நகரில் அமைக்கப்பட்டது. அம்மதுரை கடலுள் மூழ்கிய பின்னர்தான், கவாடபுரம் தலைநகரமானது. அப்படியானால், தமிழ்நாட்டின் அக்கால எல்லை,

இப்போதைய இந்துமாக் கடலின் தென்கோடிக்குச் சற்று நெருக்கமாக இருந்திருக்க வேண்டும்.
இறையனார் அகப்பொருளுரையில் தமிழ்ச் சங்கங்களின் ஆண்டுக் கணக்கு உள்ளது. அதன்படி, முதற்சங்கம், 4440 ஆண்டுகள், இடைச் சங்கம் 3700 ஆண்டுகள், மூன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் நிலவிய குறிப்புகள் உள்ளன. ஆகமொத்தம், 9990 ஆண்டு காலத்திற்கு தமிழ்க் கழகங்கள் நீடித்தன.

இறையனார் அகப்பொருளுரை இயற்றிய நக்கீரனார் காலம் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அவ்வகையில் முதற் சங்கம் அமைந்திருந்த காலம் இன்றிலிருந்து 12000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இக்கருத்தினை மேற்குலகின் பகுத்தறிவுவாதம் ஏற்கவில்லை. அப்பகுத்தறிவினை அப்படியே பின்பற்றும் தமிழக ஆய்வாளர் பலரும் தமிழர் வரலாற்றினை கி.பி, கி.மு எனப் பிரித்தனர்.

தமிழர் வரலாற்றினை கிறித்துவின் பிறப்போடு ஒப்பிட்டுப் பகுப்பது மிகப்பெரிய மோசடி. எங்கோ பிறந்த ஓர் இறையியலாளரின் பிறப்பும் தமிழரின் வரலாறும் ஒரு காலச் சட்டகத்திற்குள் அடைக்கப்பட்டதே நவீனப் பகுத்தறிவுவாதத்தின் சதிச் செயலே.

12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்களின் நாகரிகம் தொடங்கவே இல்லை என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் வரலாற்று ஆய்வு. ஆகையால், தமிழர் வரலாற்றினை கிறித்துவின் பிறப்பை ஒட்டியே எழுதிக்கொண்டுள்ளனர்.

கீழடியில் உள்ள அணிகலன்களைப் பாருங்கள். அவற்றைச் செய்வதற்கு வெறும் கற்பனைத் திறன் போதாது. மிக நுட்பமான எண்ணியல் அளவீட்டு முறை தெரிய வேண்டும். இப்போதும் நகை செய்வோர் கடைபிடிப்பது நுட்பமான எண்ணியல் அளவைகளே. சிற்பிகளின் அடிப்படைப் பாடமும் எண்ணியல் அளவைதான். கற்பனைத் திறம் மிக எளிது. எண்ணியல் அளவை அவ்வாறானதல்ல. இவ்வளவு நுண்ணிய வேலைப்பாடுகள் ஒரு நகரத்தில் இருந்தன என்றால், அம்மக்களின் கல்வித்தரம் எவ்வாறானதாக இருந்திருக்க வேண்டும் எனச் சிந்தியுங்கள் அக்கல்வி முறை எவ்வளவு பழமையானதாக இருந்திருக்க வேண்டும் என எண்ணிப் பாருங்கள். அப்போதுதான் உங்களால் கீழடிக்கும் அடியில் புதைந்துள்ள வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

ஓர் அணு என்பது, தமிழர் அளவையியலின் தொடக்க அளவு. அதாவது, மிக மிக நுண்ணிய பொருளின் எடையிலிருந்துதான் தமிழர் அளவையே தொடங்குகிறது. 1/320 என்பது தமிழர் எண்ணியலின் நுட்பமான அளவை. ஒன்றை 320 பங்குகளாகப் பகுத்தால்கிடைப்பது எது என அறிந்திருந்தனர். இக்கருத்துகள் எனது கற்பனை அல்ல. இவற்றுக்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. அச்சான்றுகளை எல்லாம் நெறிப்படுத்தி மரபுக் கல்வியாகக் கற்பிக்கப் பணி செய்துகொண்டுள்ளோம். அவற்றைச் செய்வோம்.

இங்கு நான் குறிப்பிட விரும்பும் செய்தி, கீழடியில் உள்ள பொருட்களின் நுட்பங்கள், இன்றைய பகுத்தறிவுச் சமூகத்தினால் புரிந்துகொள்ளக் கூடியவை அல்ல என்பதுதான். மிக மிக நுண்ணிய அறிவுகொண்டோர் மட்டுமே கீழடிப் பொருட்களைச் செய்திருக்க இயலும். அவ்வாறெனில், அவ்வளவு ஆழமான கல்விமுறை நம்மிடம் இருந்தது.
எழுதப்படிக்கத் தெரிவது கல்வி அல்ல. செயல்வழிப்படுவதே கல்வி ஆகும். எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டால், அவர் கல்வி கற்றவர் என்பது நவீனப் பகுத்தறிவின் ஏமாற்று வேலை. ஒரு தச்சர் பெரும் தேர் ஒன்றினைச் செய்கிறார். ஆனால் அவருக்குப் படிக்கத் தெரியாது. அவர் என்ன கல்லாதவரா? இல்லை. அவர் கற்றவர். ஆனால் அவருக்கு படிக்கத் தெரியவில்லை.

தமிழ் மரபில் ’கல்வி, கேள்வி’ என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. கேள்வி என்பது செவியால் கேட்டுக் கற்பது. ‘ஓதுதல்’ என்பதும் கல்வியை உரக்கச் சொல்லிக் கொடுத்தலே. ’செவிச் செல்வம்’ என்பது கல்வியைக் கேட்டு அறிதலைக் குறிக்கும் அழகிய சொல்வழக்கு. எழுத்துகளைப் படித்தல் மட்டுமே கல்வி என்பது நம் மரபில் இருந்ததே இல்லை.

கப்பல் கட்டுதல் மிக அரிய செயல். அதற்கு நீரியல், எண்ணியல் உள்ளிட்ட பல்வேறு அறிவுத் துறைகளில் தேர்ச்சி வேண்டும். அவ்வாறு கப்பல் கட்டுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எழுதத் தெரியாது என்பதனாலேயே இவ்வாறான வல்லுனர்கள் எல்லோரும் கற்காதவர்கள் அல்லர். எழுத்தினைப் படிப்பது, எழுதுவது ஆகியனவெல்லாம் தொழிற்புரட்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைப் பணிகளுக்கான தகுதிகள்.

நிறுவனங்களில் வேலை செய்வதற்குச் சுய திறன் தேவையில்லை. மனப்பாடம் செய்து, எழுதினால் போதும். இதனால், எழுதப் படிக்கத் தெரிவதுதான் கல்வி என்ற மயக்கத்தைக் கட்டமைத்துவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள், தமிழ் மரபினை இழிவு செய்வதற்கு இதை நல்ல ஆயுதமாகக் கையாண்டனர்.

தமிழர்கள் எழுத்தறிவில் மேம்பட்டவர்கள். ஆதிச்சநல்லூரிலிருந்தே சான்றுகள் கிடைக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியம் எழுத்துக்கு இலக்கணம் வகுத்துள்ளது. இவ்வாறான மொழி இலக்கண நூல்களில் தொன்மையாது தொல்காப்பியம் மட்டுமே. ஆகவே, நமக்கு மிக நீண்ட காலமாக எழுத்தறிவு உண்டு. ஆயினும் எழுத்தறிவு மட்டுமே கல்வியறிவு எனக் கற்பிதம் செய்யப்படுவதை ஏற்காதீர்கள்.

கீழடியில் சமயச் சான்றுகள் இல்லை என்பதை முன்வைத்து ஒரு பரப்புரை வளர்கிறது.

‘தமிழர்களுக்கு சமய வழிபாட்டு முறை இல்லை. தமிழர்கள் பகுத்தறிவு மரபினர்’ என்று பலர் பெருமைப்படுகின்றனர். பகுத்தறிவு என்பது, நாய்களுக்கும் கோழிகளுக்கும் கூட உள்ளதுதான்.

எல்லா உயிரினமும் பகுத்தறிவு கொண்டவை. ‘எது தேவை, எது தேவையில்லை’ எனப் பகுத்தலே பகுத்தறிவு. அவ்வாறான அறிவு மனிதரைக் காட்டிலும் எறும்பு, தேனீ போன்ற சிற்றுயிரினங்களுக்கு மிகுதி. மனிதர்களுக்கே உரித்தான சிறப்பறிவு மனம்.

தொல்காப்பியத்தின் மரபியல், ‘ஆறாம் அறிவு எனப்படுவது மனம்’ என்று பதிவு செய்துள்ளது. எக்காலத்திலும் எவராலும் அசைக்கவியலாத மெய்யறிவு இது.

தமிழர் மெய்யியல் என்பதே இறையியலின் விளைவுதான்.

‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூ லாகும்’ என்றார் தொல்காப்பியர். நல்வினை, கெடுவினை ஆகிய இருவினைகளிலிருந்தும் நீங்கியவருக்கு விளங்கும் அறிவினைக்கொண்ட முனைவன் முதல்நூல் ஆக்கினான்’ என்று இதற்குப் பொருள்.

வினைநீங்குதல் மனிதருக்கு இயலாதது. மனிதப் பிறவியில் நல்வினை, தீவினை ஆகியன அமைந்தே தீரும். வினை நீக்கம் இறைவனுக்கானது. அவ்வாறான வினை நீக்கம் இருந்தால்தான் உண்மை புலப்படும். இல்லையெனில், நன்மை கருதி எழுதுவதும் தீமைக்காக எழுதுவதும் ஆகிய இருவினைகளே ஆதிக்கம் செய்யும். ஆகவே, தமிழின் முதல் நூலினை இயற்றியவர் எவ்வினைக்கும் ஆட்படாமல் உண்மையை முன்வைக்கும் முனைவன் ஆகிய இறைவன் என்பது கருத்து.

தமிழ்ச் சமூகக் கருப்பொருட்களாக ‘தெய்வம்’ பதிவு செய்யப்பட்டதும் தொல்காப்பியத்தில்தான். தமிழர்கள் சிந்துவெளியில் வாழ்ந்த தடயங்களில் சிவநெறி தழைத்திருந்த சான்றுகள் உண்டு.

மறைமலையடிகள் இதுகுறித்து எண்ணற்ற சான்றுகளை முன்வைத்து, ‘சிந்துவெளியிலேயே முழுமுதற் கடவுளாக சிவம் தமிழருக்கு இருந்தது’ என்று நிறுவியுள்ளார். சிவன் எனும் பெயரும் அதற்குரிய வழிபாட்டு முறைகளும் திருமூலருக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை. ஆயினும், தமிழரின் இறையியல் வரலாறு மிகத் தொன்மையானது.

அதியமானைப் பாடும் அவ்வை அதியமானைச் சிவபெருமானொடு ஒப்பிட்டுப் பாடினார்.
’பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற்று ஒருவன்போல’ என்பது அப்பாடலின் தொடக்கம்.
அதியமான், அவ்வை வாழ்ந்த காலம் கீழடிக்கும் முற்பட்டது.

பரிபாடலில் செவ்வேள் வழிபாடு, மாயோன் வழிபாடு ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன. கலித்தொகையில் ஏராளமான வழிபாட்டு முறைகள் உள்ளன.

நடுகல் வழிபாடாகிய முன்னோர் வணக்கம் மட்டுமே தமிழரின் வழிபாடு அல்ல. மாறாக, முழுமுதற் கடவுள் குறித்த தெளிவான இறையியல் கொள்கை நம்மிடம் தொல்காப்பியருக்கு முன்பிருந்தே உண்டு. இதைப் பற்றி அறிந்துகொள்ள மறைமலை அடிகள், வெள்ளைவாரணனார் ஆகியோரது ஆய்வு நூல்கள் உதவும்.

இறையியல் எனும் கருத்தின் மீது பகுத்தறிவு கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு தமிழர்கள் ஆட்படக் கூடாது. நாத்திகவாதம் தமிழரின் ஒரு சின்னஞ்சிறிய பிரிவு. அது என்றைக்கும் தமிழரை ஆட்சி செய்ததும் இல்லை, ஆளப்போவதும் இல்லை. நாத்திகமே மேலான அறிவு என்று நினைப்பதே மேற்கத்திய பகுத்தறிவுவாதத்தின் அடிமைத்தனம்தான்.

கீழடியில் உள்ள சின்னஞ்சிறு பரப்பில் வழிபாட்டுச் சான்றுகள் இல்லை என்பதால் தமிழர் வரலாறு வழிபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது பெருங்கேடு. ‘நாத்திகமே உயர்வானது’ எனக் கருதுவது அதனினும் கேடு.

சங்க இலக்கியங்கள், பெருங்கோயில்கள், பேரரசுகள், கடல்வணிகம், அணிகலன்கள், ஆடை நுட்பங்கள், சித்த மருத்துவம், இரசவாதம் உள்ளிட்ட எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்தோர் யாவரும் இறையியல் உணர்ந்தோரே. மிகச் சிலர் இறை மறுப்பில் இருந்திருக்கலாம். அது குறையும் அல்ல, குற்றமும் அல்ல. ஆனால், இறையியலில் வாழ்ந்தோர் கட்டியமைத்த மொழி இது, அவர்கள் கட்டிய கோட்டை இது. இறையியல் நெறியில் ஒழுகி நின்றோரின் பங்களிப்புகளே வரலாற்றின் ஒவ்வோர் அங்குலமும் பதிந்துள்ளன. இதுவே உண்மை.

’பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’ என கடவுள் வாழ்த்துப் பாடிய ஆசான் திருவள்ளுவர் என்ன மூடநம்பிக்கையாளரா?

கீழடியின் வழியாக வெளிப்படுவது தமிழ்ப் பெருங்கடலின் சிறு துளிகள். இத்துளிகளைப் பருகித் திளைப்பீர். அதேவேளை, தமிழர் வரலாற்றினை மேற்கத்திய பகுத்தறிவுவாதத்தின் துணை இல்லாமல் கற்கப் பழகுவீர்.

கீழடியை அகழ்வாய்வு செய்து அதன் தொன்மையை முன்வைக்கவில்லை என்றாலும், நான் தமிழை வணங்குவேன். எனக்குத் தமிழும் சிவமே. அதனை வணங்குவதற்கும், அதன் செழுமையிடம் என்னை ஒப்புக்கொடுக்கவும் எனக்குக் காரணங்கள் தேவையில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழைப் போற்றியோர் அனைவரும் இவ்வாறானவர்களே. தாய்மொழியைக் கொண்டாடுவதற்குக் காரணங்கள் தேடுவதைக் காட்டிலும் இழிவான கருத்து வேறென்ன இருக்க முடியும்!

ஓவியர், சந்தோஷ் நாராயணன் Santhosh Narayanan

Leave a Reply