கீழடி அகழ்வாய்வை அர்த்தமற்றதாக்குவதா

Spread the love

கீழடி அகழ்வாய்வை அர்த்தமற்றதாக்குவதா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பன்முக பண்பாட்டை மறுத்து, இந்துத்துவா அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை திணிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய நிலப்பரப்பு வரலாறு அவர்களுக்கு எதிராக உள்ளது. எனவே வரலாற்றை தங்கள் வசதிக்கேற்ப வளைத்து எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறையின் சார்பில் நடைபெற்ற அகழ்வாய்வை முடக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டு, தமிழரின் தொன்மை மிகுந்த நாகரிகத்தை நிரூபிக்க முயன்ற அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன், அசாம் மாநிலத்திற்கு எவ்வித காரணமுமின்றி இடமாறுதல் செய்யப்பட்டார். அதன்பின் பெயரளவுக்கு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கண்டறிந்த தொல் பொருள்கள் குறித்த அறிக்கையை அவர் எழுதக் கூடாது என்றும், இந்த ஆய்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு தலைவர்தான் எழுத வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள உத்தரவு முற்றிலும் நயவஞ்சக எண்ணம் கொண்டது ஆகும். அகழ்வாய்வை மேற்கொண்ட அதிகாரியே அறிக்கையை எழுத வேண்டும் என்றும் தொல்லியல்துறை நடைமுறை முதன்முறையாக மாற்றப்படுவதன் நோக்கம் என்ன? கீழடியில் கிடைத்த பொருள்களின் தொன்மையை மறுதலிக்கும் சதியோ என சந்தேகம் வருகிறது.

எனவே, மத்திய தொல்லியல்துறை தன்னுடைய உத்தரவை திரும்பப் பெற்று, அகழ்வாய்வை மேற்கொண்ட அமர்நாத் இராமகிருஷ்ணன் அது தொடர்பான அறிக்கையை எழுத அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

– கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்