காவேரிக்கு கூக்குரல் கொடுப்பதா இல்லை, மௌனமாக இருப்பதா ??

Spread the love

” காவேரியின் கூக்குரலை ” பல பிரபலங்கள் எதிரொலிக்கும் காலத்தில் … உங்களைப்போன்ற சூழலியலாளர்கள் சாதித்துக்கொண்டிருப்பது மௌனமா ..? கள்ள மௌனமா ..? என்று முகநூலின் உள்பெட்டிக்குள் வந்து உசுப்பிவிடும் நண்பர்களுக்காக பேசவேண்டியதாகயிருக்கிறது!

Pasumai Venkatachalam
https://www.facebook.com/venkatachalam.sangu/posts/969466636723027

காவேரியின் கூக்குரல் கேட்டு கர்னாடகாவில் நெடுஞ்சாலை தோறும் நிழல் தரும் மரங்களை வைத்து அதனை குழந்தைகளைப்போல் வளர்த்து மரமாக்கிய ” சாளு மரதா திம்மக்கா ” அல்லது அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளத்தடுப்பை ஏற்படுத்த தனியொரு மனிதனாக நின்று பல்லுயிர்களும் வாழும் ஓர் வளமிக்க காட்டினை உருவாக்கிய ” ஜாதவ் பாயங்க் ” போன்ற புகழ் பெற்ற மனிதர்கள் செவி சாய்த்ததாகத்தெரியவில்லை!

பிரபலமான திரைக்கலைஞர்கள், அரசியல் வாதிகள், அதிகார வர்க்கம், பெரும் முதலாளிகள், நீதித்துறையை சார்ந்தவர்களை கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு காவேரியின் கூக்குரல் பதாகையை கையில் திணித்திருக்கிறார்கள்! கர்னாடகா, கேரளா, புதுகை முதல்வர்களும், ஆளுனர்களும் பங்கெடுத்திருப்பதால் … ஆன்மீகத்தின் புதிய அதிகார மையமாக ஈஷா பீடம் உருமாறி வருவதை புத்தியுள்ள சிலர் புரிந்து கொள்ளலாம்!

காவேரி படுகை முழுதும் 242-கோடிகள் மரங்களை நட்டு பசுமையாக்குவதற்கு ஒருவர் தன்னெழுச்சியோடு ரூபாய் 42-யை தந்து உதவலாம்! இந்தியாவிற்கு வெளியே இருந்து சுமார் 112-நாடுகளில் இருந்து பெறப்படும் 10,626- கோடி பணத்தை மேம்பாட்டிற்காக உதவும் உலக வங்கியிடம் பெற்று கணக்கை கையாளுவார்கள் உலக வங்கிக்கான இந்தியத்தலைவர் ரவிசிங், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்கிற செயல் திட்டங்களை கவனிக்கும் பொழுது இது பசுமையைக்கடந்தும் … கார்ப்பரேட் என். ஜி. ஓ. விற்கான பண பரிவர்த்தனை என்பது ஓரளவு அறிவுள்ள மனிதர்களுக்கு புலனாகும்!

மாளாத மணற்கொள்ளையால் காவேரி ஆற்றின் பரப்பை சுருக்கி, கரையோர உயிர்ச்சூழலை சிதைத்து சுமார் 87-வகை புற்கள், புதர் செடிகள், கொடி வகைகள் சிறு மரங்கள், ஆழ, அகலமாக வேர்விடும் மரங்கள், அதனை சார்ந்து வாழ்ந்த தாவரத்தொகுதியை பாலையாக்கி விட்டு மழை காலத்தில் மட்டும் ஒரு சாக்கடையைப்போல் ஓடும் அளவிற்கு காவேரியை சீரழித்தவர்களின் கூட்டு முயற்சியே இந்த கூக்குரல்!

நொய்யலின் கூக்குரலை கேட்டறியதவர்கள்! ரசாயன திடக்கழிவில் மூழ்கி … மூழ்கி … செத்துக்கொண்டிருக்கும் நதிக்குவாய்க்கரிசி போட்டவர்கள்! பவானி ஆற்றின் குரல் வளையை நெரிக்கும் சூயஸ்சின் கரங்களை குலுக்கி மகிழ்கிறவர்கள்!காவேரியின் கூக்குரலுக்கு மனம் இரங்குகிறார்களாம்!

உலகெங்கும் மதிப்பு வாய்ந்த பொருளாக தண்ணீர் வந்த பிறகு நதிநீர் இணைப்பு, நதிநீர் தூய்மை, அனைவருக்கும் தண்ணீர், மழைநீர் பாதுகாப்பு, தேசிய நீர் கொள்கை என்று தண்ணீரின் மீதான கரிசனம் பொங்கி வழிகிறது! குடிநீர் வழங்குதலுக்கு மாற்றாக, குடிநீர் வணிகத்திற்கு மக்களை மடைமாற்றும் உத்திகள் தொடங்கி விட்டன. சென்னையில் 2.0 திட்டமும், கோவையில் எனிடைம் குடிநீர் திட்டமும் வணிகத்தின் மாயச்சொற்கள் ஆகும்!

ஆறு உற்பத்தியாகி முடியும் வரையிலுள்ள கரைகளில் வளரும் தாவரங்களின் தட்ப வெட்ப சூழலுக்கு உகந்த தாவரங்களை இயற்கை மலர்த்தும். மலைகளில் வேறாகவும், சமவெளியில் வேறாகவும் வளரும் தாவரங்களிலுள்ள உட்டச்சத்தும், உயிர்மச்சத்தும் நீரில் வாழும் உயிர்களின் உணவாகும்! ஆற்றின் சூழலை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் தாவரங்களின் பங்கு மகத்தானது! இதுவெல்லாம் தாவரவியல் படித்த மேதைகளுக்குத்தெரியாது!

ஆற்றின் கரைகளின் செயற்கையான மரங்களை நடக்கூடாது! கடைமடை பகுதிகளின் பனைகளை நட்டு நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தி, வெப்ப மிகுதியால் நீர் ஆவியாகுதலைத்தடுக்கலாம்! காடுகளில் உற்பத்தி ஆகும் ஆறுகளில் தனித்துவமான உயிர்கள் வாழ்கின்றன! ஒரு ஆற்றில் வாழும் உயிர்கள் இன்னொரு ஆற்றில் வாழ்வதில்லை! ஆறுகள் கடலில் வாழும் உயிர்களுக்கு உணவு கொண்டு போகும் தொப்புள் கொடி! அதனை துண்டிப்பது, தூர்த்துவது, இன்னொன்றோடு இணைப்பது பல்லுயிர்களுக்கும் நடத்தும் படுகொலைகள் ஆகும்! ஆறும், கடலும் சந்திப்பதாலே பருவ மழை சாத்தியமாகுகிறது!

சரி ..! என்னதான் சொல்ல வருகிறீர்கள்! காவேரிக்கு கூக்குரல் கொடுப்பதா, இல்லை மௌனமாக இருப்பதா ..?

உலகின் ஆலை அழுக்குகளில், திடக்கழிவுகளில், ரசாயன கழிவுகளில் மூர்ச்சையான முதல் நதி லண்டன் மாநகரில் ஓடும் “தேம்ஸ் ” நதி. நன்னீரில் வாழும் உயிர்கள் செத்தொழிந்தன. தேம்ஸ்நதியின் உயிர்ச்சூழலை மனிதர்கள் கண்டறிந்த நவீனத்தால், அறிவியலால் மீட்க முடியவில்லை! நதியைஅதன் போக்கில் விட்டு விட்டார்கள்! இருபது ஆண்டுகள் கடந்து … தேம்ஸை இயற்கை பழைய நிலைக்கு கொண்டு வந்தது! நன்னீர் உயிர்கள் மீண்டன! இயற்கை தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்! படைத்துக்கொள்ளும்! அதன் மீது மனிதர்கள் ஆற்றும் வினைதான் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன! நதிகளை இணைப்பதும், நதிக்கரையில் மரங்களை நடுவதும் அத்தகைய செயல்கள் தான்!

நதிகளோடு மக்களை இணைக்கும் ஓர் பண்பாட்டு அறச்சூழலுக்கு மனிதகுலம் தயாராக வேண்டும்! அது ஒன்றுதான் இப்பூவுலகில் உயிர்கள் வாழ அனுமதிக்கும்! தண்ணீரை, காற்றை, மண்ணை விற்றுப்பிழைக்கும் கேடு கெட்ட சமூக அமைப்பில் எதனையும் காப்பாற்ற முடியாது!

https://www.facebook.com/venkatachalam.sangu/posts/969466636723027

Leave a Reply