கானுயிர்களை அறிவோம் கடமா Indian Gaur

Spread the love

கானுயிர்களை அறிவோம்…

கடமா…
Indian Gaur

வனப்பகுதிகளுக்குள் சென்றால் பெரும்பாலும் தவறாமல் கூட்டமாக கண்ணில்படும் ஒரு பெரும் விலங்கைப் பற்றி இன்று பார்ப்போம்…

கடமா,
காட்டா,
ஆமான்,
காட்டான்,
காட்டெருது,
காட்டுமாடு,
காட்டுப்போத்து,
கட்டேணி,
காட்டுப்பசு இவற்றோடு
மரை என்கிற பெயரும் உண்டு. மரை என்கிற பெயர் கடமானையும் குறிப்பதாகும்…

இத்தனையித்தனை பெயர்கள் இவற்றை குறிப்பிட்டாலும் இன்றைக்கு பெரும்பாலான காட்சி மற்றும் அச்சு ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இவற்றின் பின்னால் இருக்கும் நம்மைப் போன்ற மனிதர்களும் இதை,

“காட்டெருமை”
“Indian bison”

என்கிறோம். ஆனால் இது
எருமை இனமே இல்லை என்பதே உண்மை. “பைசன்” (American Bison) என்பது வட அமெரிக்க கண்டத்திலுள்ள எருமை வகை. நம்ம ஊரில் இருக்கிற இதுவோ மாட்டினத்தைச் சார்ந்தது அதாவது நமது வளர்ப்பு மாடுகளின் மூதாதிய இனம். இதை நம் அழகுத்தமிழில் “கடமா” என்றே அழைத்தனர் இவற்றின் காளைகள் கம்பீரமான வலிமையுடைய உடற்கட்டு பிரமிக்க வைக்கும் அழகுதான்…

நமது இந்தியாவில் நாகலாந்து, பீகார் மற்றும் கோவாவின் மாநில விலங்காக இந்த கடமா சிறப்பிக்கப் பட்டுள்ளது….

இந்தியாவைப் பொருத்தவரை எருமயினத்தில் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தன்னிச்சையான வன நீர்எருமைகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் வடமாநிலங்களில் தொடங்கி தமிழகத்தின் முதுமலைவரை இவ்வகை எருமைகள் பரவியிருந்திருக்கிறது. இன்றைக்கு இவற்றின் மொத்த எண்ணிக்கையே ஐநூறு முதல் அறுநூறுக்குள் மிக வருத்தப்படும் அளவிலேயே இருக்கிறது…

நமது தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் பகுதியான மாயாறு பள்ளத்தாக்கு-தெங்குமரஹடா பகுதியில் சுதந்திரமான வனநீர் எருமைகள் (feral buffalo) குறைந்த அளவில் காணப்படுகின்றன. இவைகள் ஆதிகுடி மக்களின் வளர்ப்பு எருமைகளாக இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்டவையாக சொல்லப் படுகிறது. தற்போதைய நிலையில் இவைகள் வன விலங்குகளாகிவிட்டன. பவானிசாகர் பகுதியில் இவற்றை நூற்றுக்கணக்கான எண்ணிக்கையிலான கூட்டத்தை பலமுறை நான் பார்த்திருக்கிறேன்….

இதில்லாமல் நாம் நேஷனல் ஜியாகிரபிக், அனிமல் பிளானெட் போன்றவை களில் சிங்கங்களோடு மோதும் எருமையினம் ஒன்றையும் பார்ப்போம். அது வலிமையான ஆப்பிரிக்க காட்டெருமை (African Buffalo or Cape buffalo) யான இது ஆப்பிரிக்காவில் உள்ளது…..

இதுவில்லாமல் நமது இமயமலைப் பகுதிகளில் இந்தியா, நேபாளம், பூடான், திபெத், மங்கோலியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் காணப்படும் யாக் எருமை, சடை எருமை (Yak) எனப்படுகிற “கவரிமா” எனப்படுவதும் மாட்டினம்தான். இது கிட்டத்தட்ட அமெரிக்க பைசன்போல காணப்படும். “மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என அனைவரும் கேள்விப்பட்டிருப்போமே.அது பலரும் நினைப்பது போல மானே இல்லை. அது இந்த கவரிமா தான். அடர்ந்த மயிர்களையுடைய இவற்றின் மயிர்களை கடும் குளிர்காலத்தில், உடைகள் தயாரிக்க எடுத்துக் கொண்டால் இமயமலையின் கடும் குளிரில் விறைத்து உயிரை விட்டுவிடும். மானம் போய்விட்டது என்பதிற்காகவெல்லாம் உயிர் விட்டது என்பது, கேட்க சுவையாக இருக்கிற கற்பனை கதைகளில், இதுவும் ஒன்று. இது காட்டு விலங்காகவும், பால், இறைச்சி மற்றும் அதன் மயிர்களுக்காகவும் சுமைகளை சும்ப்பதற்காகவும் வளர்ப்புப் பிராணியாகவும் வளர்க்கப் படுகிறது…

ஆகவே முக்கியமாக இவற்றின் வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு பெயர் குழப்பங்களை தவிர்ப்போம்….

இனி நமது கடமாவிற்கு வருவோம். தாவர உண்ணியான கடமா கானகத்தில் சற்று ஆபத்தான விலங்கு மனிதனைக்கண்டால் தாக்கிவிடும் குணமுடையது. அடர்ந்த காடுகளுக்குள் நாம் ஏன் செல்ல வேண்டும் ? ஆனால், கொடைக்கானல் பகுதியில் மக்கள் நடமாடும் கடைத்தெருக்களிலும். குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் இவை சாதாரணமாக நடமாடுகின்றன. இதை மனதில் வைத்து அடர்ந்த வனப்பகுதிகளில் நடமாடும் இவற்றிடம் அருகில் நெருங்கிவிடக்கூடாது. ஆபத்தானவை….

சிறுமுகை வனப்பகுதிகளில் இவற்றை ஒரே நேரத்தில் நான்கைந்து குழுக்களுக்கு மேல் ஒன்றாகப் பார்த்து அசந்திருக்கிறேன். அவற்றின் மொத்த எண்ணிக்கை ஒவ்வொரு குழுவிலும் நூற்றிற்கு மேலாக இருக்கும்…

புலிகளுக்கு மிக பிடித்தமான இரை விலங்கு இந்த காட்டு மாடுகள். இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி உயிர்ச் சமநிலையை புலிகள் உருவாக்குகிறது. ஒரு டன்னிற்கு மேலான எடையுள்ள இவைகள் புலிக்கு அகப்பட்டுவிட்டால் ஓரிரு வாரங்களுக்கு பெரும் விருந்துதான். புலி உண்டு உறங்கிக்கொண்டே இருக்கும்…

இவற்றில் மொத்தம் மூன்று உள்ளினங்கள் இருக்கிறது. இவற்றில் மொத்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக 90% இருந்து முதலிடத்தைப் பிடிப்பது நமது கடமாதான். இதுவில்லாமல் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இருப்பது “மலாயன்கார்”. மற்றும் “south east Asian gaur” இது மியான்மர் முதல் சீனாவரை உள்ளது….

படங்கள் அனைத்தும் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பரம்பிக்குளம், முதுமலை, பந்திப்பூர் வனப்பகுதியில் எடுக்கப்பட்டவை…

நாம்முதலில் இவற்றை எருமை மற்றும் பைசன் எனச் சொல்வதை தவிர்ப்போம். பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சொல்வதையும் மாற்றுவோம்…

தேடலுடன்,
Ramamurthi Ram

 

 

Leave a Reply