கானகத்தின் விதி முறைகள் : 2

Spread the love

கானகத்தின் விதி முறைகள் : 2

நமக்கு கெட்ட பழக்கம் ஒன்று உண்டு. எங்கே போனாலும் ,கையில் ஒரு ஸ்னாக்ஸ் பையும் ,சில பல கூல்டிரிங்ஸ் பாட்டில்களையும் கையில் எடுத்துச் செல்வது.

குழந்தைகளும்,( என்னைப் போன்ற ) நீரிழிவு வியாதிக் காரர்களும் இருந்தால் கூடப் பரவாயில்லை.

ஆனால்,சும்மா ஜாலிக்காக காட்டுப் பகுதிகளில் வைத்துக் கும்மாளம் போடலாம் என்று நினைக்கும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

அதுவும்,தண்ணியடிப்பதற்காக சில பேர் முழு ‘பாரை’யும் ,நொறுக்குத் தீனிகளையும் கொண்டு போகிறார்கள் பாருங்கள்,கொடுமையிலும் கொடுமை.

எழுத்தாளர் ஜெயமோகன்,“யானை டாக்டர்” என்று ஒரு கதை எழுதியிருப்பார். அதில்,ஏன் பெரும்பாலானோர்,காட்டுப் பகுதிகளில் சென்று தண்ணியடித்து விட்டு,சத்தம் போட்டு கெட்ட வார்த்தைகளில் கத்திக் கொண்டே அங்கிருக்கும் பாறைகளில் பாடில்களை தூக்கி வீசியெறிந்து உடைக்கிறார்கள் என்று தனக்குப் புரிந்ததேயில்லை என்கிறார்.

பெரும்பாலான சமயங்களில் யானைகள் அதை மிதிக்கும்போது ,நடக்க முடியாமலும்,எதையும் சென்று சாப்பிட முடியாமலும் ஒரே இடத்தில் இருந்து உயிரை விடுகின்றன என்று வருத்தப்படுகிறார்.

நினைத்துப் பாருங்கள்,யானைக்கு இருக்கும் உடம்பிற்கு,24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேரம் அவை சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அவற்றால் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் விழுந்து கிடந்தால். …..நமக்கு பாவ விமோட்சனம் கிடைக்குமா ?

இங்கு பதிவிட்டிருக்கும் படத்தை,இங்கு (கென்யாவில்) உள்ள லேக் நக்குரு நேஷனல் பார்க்கில் சில வருடங்களுக்கு முன்னால் எடுத்தேன்.

யாரோ குடித்துவிட்டு ஏரிக்குள் எறிந்த பியர் பாட்டிலை ஒரு பெலிக்கன் பறவை முழுங்குகிறது.

கண்டிப்பாக அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பெலிகான் இறந்திருக்கும்.

பாட்டிலை விட்டெறிந்த அந்தக் ‘குடி’மகனுக்கு அதன் வலி தெரியுமா ?

இது போல இயற்கையை அழிக்கும்,அவமதிக்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது?

இந்த பூமியில் மனித இனம்தான் கடைசியாக உள்ளே நுழைந்த உயிரினம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ?

மம்மோத் போன்ற பிரமாண்டமான உயிரினங்களைக் கூட கொன்றொழித்திருக்கிறோம். ஆனால்,நாம்தான் “ மிருகத்தனம்” என்ற பதத்தையும் உபயோகப்படுத்துகிறோம். மிருகங்களுக்கு மட்டும் புரிந்தால் அவை நம்மைப் பாரத்தது கை கொட்டிச் சிரிக்கக் கூடும். அல்லது ,எங்களை ஏன் அவமானப் படுத்துகிறீர்கள் என்று மான நஷ்ட வழக்கு தொடுத்து நீதி மன்றம் ஏறக் கூடும்.

சரி விஷயத்திற்கு வருவோம்…

காட்டுப் பகுதிகளில் ரொம்ப நேரம் செலவழிக்கப் போகிறோம் என்று முன் கூட்டியே தெரிந்தால்,தேவைப் படும் உணவுப் பொருட்களையும்,தண்ணீர் அல்லது குளிர் பானங்களையும் எடுத்துச் செல்வதில் தவறில்லை.

ஆனால்,கையோடு குப்பைகளைப் போடுவதற்கும் ஒரு துணிப் பையை எடுத்துச் செல்லுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த கழிவுகளை வனப் பகுதிகளில் போட்டு விட்டுப் போகாதீர்கள். முக்கியமாக பாலிதீன் பைகளையும்,பிளாஸ்டிக் பொருட்களையும் தயவு செய்து காட்டுப் பகுதிகளில் விட்டுச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்.

இயற்கை அன்னை அழித்திருக்கும் வனங்கள் உங்கள் ‘பார்’இல்லை. எனவே,தண்ணியடிப்பதற்காக,வனங்களை உபயோகப் படுத்தாதீர்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் கிளாஸ் பாட்டில்களை உள்ளே உடைக்காதீர்கள். தயவு செய்து இயற்கையை மதிக்கக் கற்றுக் கொள்வோமே. ப்ளீஸ்.

இன்னொரு முக்கியமான விஷயம்.

நீங்கள் கொண்டு செல்லும் தின் பண்டங்களை, எந்தக் காரணத்தைக் கொண்டும் விலங்குகளுக்குக் கொடுக்க வேண்டாம். நீங்கள் கொடுத்துத்தான் அவை சாப்பிட வேண்டும் என்றில்லை.

ஆனால்,நீங்கள் கொடுக்கும் உணவு அவற்றிற்கு எமனாக அமைய வாய்ப்பு உள்ளது.

இயற்கையைப் பற்றி டாக்டர் இராமன் என்பவர் “ அச்ச ரேகை தீர்வு ரேகை” என்னும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்- விகடன் பதிப்பகம்.

நேரம் கிடைத்தால் படியுங்கள்.

இயற்கையைக் கற்றுக் கொள்வோம். இயற்கையை நேசிப்போம். இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம்.

விதி முறைகள் தொடரும்.

வெ.பாலமுரளி

One thought on “கானகத்தின் விதி முறைகள் : 2

  • July 7, 2019 at 1:30 am
    Permalink

    அதிகமாக சப்தமிடுபவர்களும் உண்டு… அதையும் தவிர்க்க வேண்டும்

Leave a Reply