கானகத்தின் விதிமுறைகள் 3

Spread the love

கானகத்தின் விதிமுறைகள் : 3

அந்தக் குரங்கின் பெயர் மறந்து விட்டது. சிங்கமுகக் குரங்கு என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் டி.வி.யில் பார்க்க நேர்ந்தது.

நீலகிரி நெடுஞ்சாலையில் இந்த வகைக் குரங்குகளைப் பார்த்து அங்கு செல்வோரில் சிலர் தங்கள் கார்களை நிறுத்தி வாழைப்பழம்,பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களைக் கொடுக்க,அவை அந்த வழியில் செல்லும் அனைத்து கார்களிலிருந்தும் அது போல எதிர்பார்க்க ஆரம்பித்து,சாலைகளில் நிற்க, நிறைய குரங்குகள் வேகமாக செல்லும் வாகனங்களில் அடி பட்டு செத்துக் கொண்டிருக்கின்றன.

எவ்வளவு வேதனையான விஷயம்.

ஏன் இந்த வேண்டாத வேலை ?உங்களால் எத்தனை குரங்குகளுக்கு இது போல உணவளிக்க முடியும் ?

உங்களுக்கு இரக்க குணம் ஜாஸ்தி என்றால்,பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உதவுங்கள். உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.

ஆனால்,வன விலங்குகளுக்கு எதுவும் தராதீர்கள். உங்கள் உதவி இல்லாமலேயே அவை வாழ்ந்து விடும்.

அதேபோல்தான்,காடுகளில் வசிக்கும் பழங்குடியினருக்கும் எதுவும் தந்து அவர்களை (யும்) பிச்சைக்காரர்களாக்காதீர்கள். ப்ளீஸ்.

அந்தமான் பகுதிகளில் வசிக்கும் நிறைய பழங்குடியினர் அடிக்கடி ரோட்டிற்கு வந்து கையேந்துகிறார்கள் என்றும் சமீபத்தில் படித்தேன்.

மிகவும் வேதனையாக இருந்தது. அவர்களை நாம் தொந்தரவு செய்யாமல் விட்டாலே போதும். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அவர்களுக்கு நாம் சாப்பிடும் பாக்கெட் தின்பண்டங்களைக் கொடுப்பது,அவர்களை மதமாற்றம் ( ???) செய்வது நாம் அவர்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.

இன்னொரு கொடுமையான விஷயம் – செல்ஃபி.

செல்ஃபியால் உயிரழக்கும் கொடுமையில் இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.

அதுவும் காடுகளில் ஏதேனும் விலங்குகளைப் பார்த்தால் அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் விபரீதப் போக்கு சமீபத்தில் அதிகரித்திருக்கிறது.

வன விலங்குகள் எப்படி யோசிக்கும்,எப்படி நடந்து கொள்ளும் என்பது அவற்றிற்கே தெரியாது.

ஒரு காட்டு யானைக்கு ஒருவர் வாழைப்பழம் கொடுக்க,அடுத்த இரண்டு நிமிடங்களில் அந்த யானை அவரைத் தூக்கி அடித்த வீடியோ சமீபத்தில் வலம் வந்தது.

வேண்டாமே….ப்ளீஸ்…

நாம் அவற்றை அதன் போக்கில் விட்டாலே போதும். தேவையில்லாமல் ,அதன் வழித் தடங்களை (அரசின் உதவியுடன் ) வழி மறைப்பது,அவற்றின் வாழ்விடங்களை நாம் அபகரித்துக் கொள்வது,தேவையில்லாமல் அவற்றுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது …..பின்னர் அவை நம்மை தாக்கினால், காட்டு யானையின் அட்டகாசம்,சிறுத்தை ஊருக்குள் புகுந்தது என்று அவற்றின் மீது பழி போடுவது…….என்னங்க இது அராஜகம் ????

நாம் எப்போது இயற்கையைப் புரிந்து கொள்ளப் போகிறோம் ???

வேதனையுடன்

வெ.பாலமுரளி