காட்டுயிர்களில் நட்புறவு

Spread the love

காட்டுயிர்களில் ஒரே சூழலில், ஒரே இடத்தை, ஒரே வகை உணவை பகிர்ந்து கொள்ளும் உயிரினங்களுக்கு இடையே ஒரு மறைமுகமான போட்டிபெற்றுக் கொண்டே இருக்கும். ஆனால், ஒரு சில உயிரினங்கள் தங்களின் போட்டியைத் தாண்டியும் அவைகளுக்கு இடையே ஒரு நட்புறவும் இருக்கும். அதற்கு உதாரணமாக காட்டு அணில்களுக்கும், குரங்குகளுக்கும் இடையே நிலவும் உறவு முறையை சொல்லலாம். இவைகள் உணவுக்காக ஒன்றோடு ஒன்று கடுமையாக போட்டியிட்டாலும், ஓய்வு நேரங்களிலும் மிகவும் அனுசரணையுடன் நடந்து கொள்ளும். எதிரிகள் யாரும் தென்படும் போது பரஸ்பரம் ஒன்றை ஒன்று எச்சரித்துக் கொள்ளும். பல நண்பர்களும் இவைகளின் பரஸ்பர நட்பை அழகாக பதிவு செய்து இருந்தாலும், எனக்கு கிடைத்த வாய்ப்பு எதிர்பார்க்காத தருணத்தில் நடந்தது. ஓய்வாக படுத்து இருந்த காட்டு அணிலின் அருகே அமர்ந்து இருந்த இளம் குரங்கு ஒன்று மிக பரிவாக அணிலின் தலையை தடவி கொடுத்து, அதில் இருந்த உண்ணிகளை நீக்கி அவைகளுக்கு இடையே இருந்த நட்பை கொண்டாடிக் கொண்டு இருந்தது. முற்றிலும் சூரியன் எனக்கு எதிர் திசையில் இருந்த தருணம், இந்த காட்சியை படம் எடுக்க மரத்தை சுற்றி சுற்றி வந்தும் ஒரே ஒரு பக்கம் மட்டுமே இலைகளுக்கு இடையே இந்த காட்சி நிழலுருவமாக கிடைத்தது. , காற்றும் வீசி அதன் பங்குக்கு இலைகளை அசைவித்து எனக்கு சவால் விடுத்தது. இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே நான்கு படத்தை எடுக்கும் முன் மரத்தை சுற்றி சிறுவர்கள் கூடி , கத்தி, அந்த நட்பை பிரித்துவிட்டார்கள். மீண்டும், மீண்டும் நான் எடுத்த அந்த நாலு படங்களை திரும்ப, திரும்ப பார்க்கும் போது, படமெடுக்காமல் அந்த காட்சியை முழுவதுமாக வெறும் கண்களால் ரசித்து இருக்கலாமே, என்று தோன்றியது. – Raveendran Natarajan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *