FEATUREDHealthLatest

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிவுரை

Spread the love

அன்புள்ள கர்ப்பிணிகளே

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

தற்போது நிகழ்ந்து வரும் அசாதாரண சூழ்நிலையில்
தாங்கள் அனைவரும் கடும் மன நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது தெரியவருகிறது.

கவலை கொள்ள வேண்டாம்.
பதட்டமடைய வேண்டாம்.

உங்களுக்காக சில நம்பிக்கை தரும் தகவல்கள்

கொரோனா தொற்று கண்ட கர்ப்பிணித்தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக இதுவரை எந்த ஆய்வு முடிவும் இல்லை. (No solid evidence of Vertical Transimission)

 சீனாவில் நடந்த ஆய்வில் கொரோனா தொற்று கண்ட ஒன்பது தாய்மார்கள் நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவவில்லை

 பிறந்த இரண்டு சிசுக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டாலும் அவை தாயிடம் இருந்து நேரடியாக பரவியதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அந்த தொற்று வெளியில் இருந்து பிறரிடம் இருந்து வந்திருக்கவே வாய்ப்பு என்று கண்டறியப்பட்டுள்ளது

 கொரோனா பாதித்த தாய்மார்களின் தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் பரவுவதாக இதுவரை ஆதாரமில்லை
எனவே தாய் தன் குழந்தைக்கு தாய்பால் புகட்டுவதில் எந்த பிரச்சனையும் இல்லை

 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது சமுதாயத்தின் சம வயதுக்குரிய பிற மக்களுக்கு என்ன
தீவிரத்தன்மையுடன் இருக்குமோ அதே அளவில் தான் கர்ப்பிணிகளிடமும் காணப்படுகிறது. கர்ப்பிணிகளிடம் அதிக தீவிரமாக நோய் வெளிப்பட்டதற்கான சான்று இதுவரை இல்லை

இருப்பினும்
கர்ப்ப காலம் என்பது நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காலமாகும்.

இந்த காலத்தில் எளிதாக நோய் தொற்று அதுவும் சுவாசப்பாதை தொற்றுகள் ஏற்படக்கூடும்

எனவே, சமூகத்திடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்

சமூகத்திடம் இருந்து எப்படி தனிமைப்படுத்திக்கொள்வது?

பீச், பார்க், தியேட்டர் , ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு கட்டாயம் செல்லக்கூடாது.

 பிறர் வீடுகளுக்கு செல்லக்கூடாது
உங்களைக் காண விருந்தாளிகள் வரக்கூடாது.

தேவையற்ற பயணங்களை முடிந்தவரை தவிர்த்து விட வேண்டும்

 திருமணம் / காது குத்து / திருவிழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

 வீட்டில் யாருக்கேனும் நோய்தொற்று அறிகுறி தோன்றினால் கட்டாயம் அவர்களிடம் இருந்து உங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும்

 கைகளை முகத்தை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

 கொதிக்க வைத்து ஆற வைத்த நீர் பருகவும்

 எட்டு முதல் பத்து மணி நேர உறக்கம் அவசியம்

 புரதச்சத்து நிரம்பிய உணவுகளான முட்டைகள், மாமிசம், மீன் போன்றவற்றை எடுக்கலாம்.
சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள்
– பீன்ஸ்/ பயறு வகைகள்/ கடலை / பனீர் எடுக்கலாம்

 பிறரிடம் கை குலுக்கவதை தவிர்க்கவும்

உங்களது ஃபாலோ அப்/ ரிவியூ/ ஸ்கேன்களை உங்களது மருத்துவர் அறிவுரைப்படி செய்து கொள்ளுங்கள்

உங்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்???

 காய்ச்சல் / இருமல் / தொண்டை வலி/ வயிற்றுப்போக்கு/ உடல் சோர்வு ஏற்பட்டால் உடனே உங்களது கிராம சுகாதார செவிலியர் / மருத்துவ அலுவலர்/ மகப்பேறு மருத்துவருக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துக்கொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

80% மக்களுக்கு சாதாரண நோய் தொற்றாக கொரோனா வைரஸ் சென்று விடும்.

அஞ்ச வேண்டாம்….
80% மக்களுக்கு சாதாரண நோய் தொற்றாக கொரோனா வைரஸ் சென்று விடும்.

எனவே பதட்டம் வேண்டாம்…

உங்களுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேவைப்பட்டால் பரிசோதனை செய்யப்படும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் என்ன செய்வது???

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் டோண்ட் வொர்ரி

நீங்கள் பெற்றெடுக்க இருக்கும் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இப்போதைய ஆய்வு முடிவுகளின் படி இல்லை.

மேலும் நீங்களும் உங்கள் குழந்தையும் நல்ல முறையில் இருப்பீர்கள்

உங்கள் மன அமைதியை ஒருபோதும் இழக்காதீர்கள்

மன அமைதியை எப்படி அடைவது ??
 நியூஸ் பார்க்காதீர்கள்
 சமூக வளைதளங்களுக்கு வராதீர்கள்
 இந்த கொள்ளை நோய் குறித்து நெகடிவாக பேசுபவர்களிடம் விலகி இருங்கள்
 மன அமைதியை குலைக்கும் வாட்சப் குழுக்களில் இருந்து வெளியேறுங்கள்
 நம்பிக்கை தரும் நம்பத்தகுந்த தகவல்களை அளிக்கும் சிலரை மட்டும் தொடர்ந்திடுங்கள்
 உங்கள் மனதுக்கு அமைதி தரும் வேலைகளை செய்யுங்கள்
 பாடல்கள் கேளுங்கள்
 சமய நூல்களை வாசித்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றால் அதை செய்யுங்கள்
 குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது குறித்த சிந்தனையில் இறங்குங்கள்

டோண்ட் வொர்ரி சகோதரிகளே…

அனைத்துக்கும் இறைவன் போதுமானவன்

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Leave a Reply