கரிக்கலி மற்றும் வேடந்தாங்கலில் முதல்முறை

Spread the love

பார்த்ததை பகிர்வோம் 3

கரிக்கலி மற்றும் வேடந்தாங்கலில் முதல்முறை:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல வேண்டுமென்ற எங்களின் நீண்டகால கனவு இந்த ஆண்டு(31/12/19) இறுதியில் நிறைவேறியது. எங்களுக்கு ஒரு வாரம் முன்னர் அங்கு சென்ற தீபக் அண்ணா மற்றும் குழுவினர் எங்களை வேடந்தாங்கலுடன் சேர்த்து அதற்கு அருகில் உள்ள கரிக்கலியையும் பார்வையிட்டு வருமாறு கூறினார். அவர்களின் அனுபவ உதவியால் கரிக்கலி என்ற மற்றொரு அழகிய பறவைகள் சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள பறவைகள் மற்றும் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அறிமுகம் செய்துவைத்த தீபக் அண்ணா அவர்களுக்கு நன்றி.

மேற்க்குதொடர்ச்சியின் சாயல்:

சரியாக காலை 5:45 மணிக்கு வீட்டிலிருந்து விடைபெற்றோம். மூன்று சக்கர வாகனத்தில் நாங்கள் நால்வரும் எங்கள் ஊரிலிருந்து கிளம்பி தாம்பரம் இரயில் நிலையம் சென்றடைய 6:20 ஆகிவிட்டது. அங்கிருந்து செங்கல்பட்டுக்கு இரயிலில் 10ரூபாய் தான். 6:45க்கு காஞ்சிபுரம் இரயிலில் ஏறினோம். இரயில் பயணத்தின் போதும் இயற்கையை ரசித்துகொண்டும் அவற்றை பற்றிய செய்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டும் சென்றோம். அன்றைய தினம் வானத்தை கருமுகில் சூழ்ந்திருந்ததும் அதற்கு முந்தைய தினம் மழை பெய்திருந்ததும் எங்களின் பயணம் மிகவும் இனிமையாக இருக்கப்போகிறது என்பதை உணரச்செய்தது. இரயில் செங்கல்பட்டு ஏரியை தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த அழகிய ஏரியையும் அதற்கு பின்னால் இருந்த மலைகளையும் காலை பனியுடன் பார்ப்பதற்கு ஏதோ மேற்குதெடர்ச்சி மலைகளுக்கு அருகில் நாம் இருக்கிறோம் என்று நினைக்க தோன்றியது. அவ்வளவு காலையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்த பறவைகள் என்று இந்த காட்சிகளை காண்பதற்காகவே மீண்டும் மீண்டும் இரயிலில் செங்கல்பட்டுக்கு வரவேண்டும் என்று தோன்றியது.

செங்கல்பட்டிலிருந்து தொடர்வோம்:

சரியாக 7:30மணிக்கு செங்கல்பட்டுக்கு இரயில் நிலையத்தில் இறங்கினோம். இரயில் நிலையத்தில் இருந்து 400மீட்டர் தொலைவில் இருக்கிறது செங்கல்பட்டு பேருந்து நிலையம். அங்கிருந்து சரியாக 8:00மணிக்கு வேடந்தாங்கல் செல்லும் பேருந்து ஒன்று இருப்பதாக செழியன் அண்ணா கூறினார். செங்கல்பட்டில் இருந்து நேராக வேடந்தாங்கல் செல்ல அரசு பேருந்துகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை,தனியார் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இருக்கிறது. 7:45க்கு ஒரு பேருந்து வேடந்தாங்கல் செல்ல தயாராக இருந்தது அதில் ஏறிக்கொண்டோம். பிறகு”எந்த பறவைகள் சரணாலயத்திற்கு முதலில் செல்வது??” என்ற விவாதம். முதலில் கரிக்கலியை சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம். ஆனால் பேருந்து நடத்துனர் “நீங்க பறவைய பாக்க போறிங்களா அப்டின்னா வேடந்தாங்கலே நல்ல சீசன் தா. கரிக்கலி போனன்னா ரண்டு பஸ்சு மாறி போனு பரவால்லியா” என்று கூறினார். நாங்கள் கரிக்கலிக்கு அருகில் உள்ள ஏதாவது ஓர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டோம் “அப்டின்னா புழுதிவாக்கத்ல(புழுதிவாக்கம்) எறங்கிகோங்கபா அங்கருந்து 4கிலோமீட்டர் நடக்கனும் இல்லன்னா இன்னேரு பஸ்சு வரும் அதுல ஏறி போங்க” என்றார், நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் அது ஏன்னெனில் எங்களின் எந்தவொரு பயணமும் குறைந்தது நான்கு கிலோமீட்டர் நடைபோடாமல் முடிந்ததே இல்லை. சரியென்று புழுதிவாக்கத்திற்கு பயணச்சீட்டு கேட்டோம் 18ரூபாய் தான். செங்கல்பட்டில் இருந்து நேராக வேடந்தாங்கலுக்கு 20ரூபாய்.

கூறியதைப் போலவே எங்களின் நடைபயணம்:

பேருந்தில் பயணிக்கும் போதே பறவைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன். முதலிலேயே அரசவால் ஈபிடிப்பான் பெண் பறவையை பார்த்துவிட்டேன் பிறகு நத்தை குத்தி நாரை, கரிச்சான் போன்ற பறவைகளையும் பார்த்தோம். புழுதிவாக்கத்தில் இறங்கி கூகுல் வழிகாட்டியின் உதவியுடன் நடக்க ஆரம்பித்தோம். 4.1கிலோமீட்டரில் கரிக்கலி என்று கூகுல் வழிகாட்டி கூறியதை நம்பி நடந்தோம். பறவைகளின் சத்தம் அந்த ஊரின் அமைதியால் நன்கு செவிகளை தழுவியது. அங்கு ஆச்சரியமாக கொண்டலாத்தியின் சத்தம் கேட்டது முடிந்தவரை விரைவாக கரிக்கலியை அடையவேண்டும் என்ற எண்ணத்தில் அதனை விட்டுவிட்டேன். எங்களின் எண்ணமெல்லாம் 9:00மணிக்குள் கரிக்கலியை அடையவேண்டும் என்பதுதான். அதற்காக இருக்கண் நோக்கியை வழியில் எங்கும் எடுக்கக்கூடாது என்று உறுதியாக இருந்தோம். ஆனால் நாங்கள் நடந்து சென்ற பாதை வர்ணிக்க முடியாத வண்ணம் மிகவும் அழகாகவும் இயற்கை பொலிவுடனும் கண்கொட்டாமல் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. பறவைகள் அங்குமிங்கும் “எங்களைப் பாருங்கள்” என்ற வண்ணம் பறந்துகொண்டிருந்தன. வழியில் முதலில் பார்த்த பறவை பச்சைவாயன்(Blue Faced Malkoha). அதிகமாக பறவைகளின் நடவடிக்கை தென்பட்டதால் இருக்கண் நோக்கியை எடுக்கும் முடிவையும் எடுத்தோம் கூடவே 9:00மணிக்கு கரிக்கலி செல்லும் முடிவினை கைவிட்டுவிட்டோம்(என்னுடைய மணக்கணக்கு).

கூகுல் வழிகாட்டியின் உதவி:

இப்படி வழியெங்கும் பறவைகளையும் கூகுல் வழிகாட்டியையும் கவனத்துடன் பார்வையிட்டுக்கொண்டோ நடந்தோம். அங்கு எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் கூகுல் வழிகாட்டி காண்பித்த இடத்தில் கரிக்கலியை காணவில்லை!!!. அப்போது வழியில் ஒரு பாட்டி கூறியது ஞாபகத்திற்கு வந்தது”கரிக்கலிக்கா போறிங்க, அங்க பறவைங்க இருக்கா???, அதுக்கு நீங்க அந்த வழியா போயிருந்த கிட்ட பா, இது ரொம்ப சுத்து. போங்க இப்டியே நடந்து போங்க பாலம் ஒன்னு வரும் அதயெல்லா தாண்டி காடு வழியா போனு போங்க போங்க” என்றார். நாங்கள் இன்னும் நெடுந்தூர பயணம் இருப்பதை உணர்ந்தோம்.

வழியெங்கும் பறவைகள்:

நாங்கள் நடந்து சென்ற பாதை மீண்டும் நாங்கள் நடக்க வேண்டிய பாதை. எல்லா இடங்களிலும் பறவைகள் தென்பட்டது. மனிதர்கள் போன்றே சாலையை கடந்து செல்லும் கானாங்கோழி மற்றும் கவுதாரிகள்,மாந்தோப்பில் மேய்ந்துகொண்டிருந்த மயில்கள், மொட்டை பனமரத்தில் அமைதியாக அமர்ந்து எங்களை பார்த்து கொண்டிருந்த புள்ளி ஆந்தைகள் என எங்கும் பறவைகள். கரிக்கலிக்கு நடந்து சென்றதால் தான் புதிய பறவை இனங்களை நாங்கள் பார்த்தோம். அதில் வரிமுகப் பூங்குருவி, சிறிய தவிட்டுப் புறா, பட்டைகழுத்துப் புறா இவைகள் எனக்கு புதியவை. எங்களுக்கு வலதுபுறத்தில் முற்றிலும் மரங்களால் சூழப்பட்ட காப்புக்காடு போல் இருந்த இடத்திற்குள் சென்று பார்வையிட தோன்றியது. காலை உணவை செல்லும் வழியில் இருந்த ஒரு குளக்கரையில் நின்று சாப்பிட்டோம். இப்படி ஒரு வழியாக கரிக்கலி செல்ல மணி 10:30 ஆகிவிட்டது.

 

நிசப்தமான கரிக்கலி:

கரிக்கலி எங்களின் கற்பனையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பறவைகளின் சத்தம் மட்டுமே கேட்கும் ஒரு பறவைகள் சரணாலயமாக கரிக்கலி திகழ்கிறது. எங்களுடன் சேர்த்து மொத்தமாக அங்கு எட்டுபேர் இருந்தோம். இரண்டு பறவை ஆர்வலர்கள், இரண்டு வனத்துறையினர் மற்றும் நாங்கள் நால்வர் என்று அந்த இடமே அமைதியால் சூழப்பட்டும் மரங்களால் மூடப்பட்டும் இருந்தது. அங்கிருந்த இரண்டு வனத்துறை அதிகாரிகளுடன் நீண்டநேரம் பறவைகளை பற்றி கலந்துரையாடினோம். அவர்கள் அங்கு பணிபுரியும் அனுபவங்கள் பற்றியும் வருடாவருடம் அங்கு வந்துசெல்லும் பறவைகள் பற்றியும் எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு சிறிது நேரம் அங்கு இருந்த பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் பார்வையிட்டுவிட்டு வேடந்தாங்கல் பயணத்திற்கு ஆயத்தமானோம்.

டிராக்டரில் பயணம்:

கரிக்கலியில் இருந்து ஒரு கிலோமீட்டர் நடைப்பயணம், அங்கிருந்து புழுதிவாக்கத்திற்கு பேருந்தில் செல்ல வேண்டும் பிறகு அங்கிருந்து வேடந்தாங்கலுக்கு மற்றொரு பேருந்தில் செல்ல வேண்டும் என்று இவ்வளவு வேலைகள் இருந்தது. அந்த ஒரு கிலோமீட்டர் நடைப்பயணத்தில் பறவைகள் இல்லாமல் இருக்குமா??? மீண்டும் பறவைகளை பார்க்க ஆரம்பித்து விட்டோம். அதில் ஆச்சரியமாக வால் காக்கை ஒன்று வல்லூரிடம் தன்னுடைய வலிமையை காட்டிக்கொண்டு இருந்தது, ஆனால் வல்லூரோ அதற்கு “நீயெல்லாம் ஒரு ஆலா” என்று வால் காக்கையை மதிக்கவேயில்லை. பிறகு பேருந்து நிலையம் சென்று பேருந்துக்காக காத்திருந்தோம். அப்போது டிராக்டர் வரும் சத்தம் கேட்டது மனதில் ஒரு யோசனை, பேருந்து நிலையத்தில் இருந்து எட்டிப்பார்த்தேன் ஓட்டுனர் மட்டும் சவுக்கு கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தார். உடனடியாக டிராக்டர் முன்னர் சென்று ஓட்டுனர் பார்கும்படி “லிப்ட்” குறியீட்டை காண்பித்தேன். அவர் நூறாண்டுகள் கடந்து வாழட்டும். வண்டியை நிறுத்தி எங்களை ஏற்றிக்கொண்டார், புழுதிவாக்கத்தில் இறக்கிவிடுவதாக சைகை காண்பித்தார் சரி என்றோம். எனக்கு டிராக்டர் பயணம் புதியதில்லை ஆனால் என் நண்பர்களுக்கு அது புதிதாக இருந்தது.

கரிக்கலியில் இருந்து வேறுபடும் வேடந்தாங்கல்:

புழுதிவாக்கத்தில் இறங்கி பேருந்துக்காக காத்திருக்காமல் அங்கு இருந்த மூன்று சக்கர வாகனத்தில் வேடந்தாங்கலுக்கு சென்றோம். புழுதிவாக்கத்தில் இருந்து மூன்று சக்கர வாகனத்தில் வேடந்தாங்கலுக்கு 20ரூபாய் தான். கரிக்கலியை போல் வேடந்தாங்கலை இலவசமாக பார்வையிடமுடியாது அங்கு ஒருவருக்கு 10ரூபாய் கட்டனம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் செல்பேசி வைத்திருந்தால் அதர்க்கு 50ரூபாய் கட்டனம் வசூலிக்கப்படுகிறது. இக்காலத்தில் செல்பேசி இல்லாமல் யாரையும் பார்க்க முடிவதில்லை, அவர்கள் அனைத்து கட்டனத்தையும் சேர்த்து ஒருவருக்கு 60ரூபாய் என்றே வைக்கலாம். அங்குதான் முதல்முறை”பைனாகுலர் வாடகைக்கு” என்ற வாசகத்தை படித்தேன். வேடந்தாங்கல் கரிக்கலியில் இருந்து மிகவும் வேறுபடும் ஓர் சரணாலயம். வேடந்தாங்கலில் பறவைகள் கூச்சலிடும் சத்தம் மிகவும் அருகில் அருவி இருப்பதை போல் கேட்டது. பல்லாயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் சத்தமிடுவதை கேட்டக கண்கள் தேவையில்லை. பல்லாயிரக்கணக்கான பறவைகள் ஒரே இடத்தில் இருப்பதை பார்க்க காதுகள் தேவையில்லை, இயற்கையை எல்லோராலும் ரசிக்கமுடியும் என்பதை உணர்ந்த தருணம் 🤗. இங்கு மனிதர்களின் கூட்டமும் அதிகம், அதுவும் கரிக்கலியில் இல்லாத ஒன்று. பறவைகளின் அறிமுகம் இல்லாதவர்கள் இங்கு வந்தால் எல்லாம் ஒரே பறவையினம் தான் என்று நினைக்க தோன்றும். நத்தை குத்தி நாரை, கரண்டி வாயன், இராக்கொக்கு, சிறிய அரிவாள் மூக்கன், கூழைக்கடா போன்ற பறவைகளை எண்ணிக்கையில் அதிகமாக பார்க்கலாம். புதிதாக கூடுகட்டிக்கொண்டிருந்த பறவைகளை பார்க்க முடிந்தது. உயரத்தில் இருந்து அழகாக தனது கூடு இருக்கும் இடத்திற்கு வந்தமர்ந்த பறவைகளை பார்க்க முடிந்தது. இப்படி வேடந்தாங்கலின் அழகையும் பார்த்து ரசித்தோம்.

கொண்டலாத்தியின் தரிசனம்:

வேடந்தாங்கலை நன்றாக பார்த்துவிட்டு அதற்கு அருகில் இருந்த வயல்வெளியில் நடைபோட்டோம். அங்கு மாங்குயிலையும் குக்குறுவானையும் பார்க்கமுடிந்தது. அலைந்துதிரிந்தது சோர்வாக இருந்ததால் வேறெங்கும் செல்ல முற்படவில்லை. வீடு திரும்ப திட்டமிட்டு பேருந்துக்காக ஒரு இடத்தில் காத்திருந்தோம். நாங்கள் அமர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. காலையில் பனிமூட்டமாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல வெயில் கடுமையாக மாற ஆரம்பித்தது, அந்த வெப்பத்தை தணிக்கவே ஐந்து நிமிடம் மழை என்று தோன்றியது. மழை பெய்யத் அந்த ஐந்து நிமிடம் அங்கு மழையின் ஓசையை தவிர்த்து வேறு எதையும் கேட்கவில்லை. என் நண்பன் கொண்டலாத்தியை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்காக பாட்டுபாடவே ஆரம்பித்துவிட்டான், அப்போது எங்கிருந்தோ பறந்து வந்து அருகில் இருந்த மரஜன்னலில் அமர்ந்தது கொண்டலாத்தி. அவன் மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றான். இரண்டு நிமிடம் நன்றாகக் தனது கொண்டையை விரித்தும் சுருக்கியும் எங்களுக்கு காட்சிதந்துவிட்டு பறந்தது. எண் நண்பனின் ஆசையை நிறைவேற்றிய கொண்டலாத்தி வாழ்க!!!.

தொடர்ந்து இயற்கையுடன் பயணிப்போம்:

பேருந்துக்காக காத்திருந்த நேரத்திலும் பறவைகளை ஆர்வத்தோடு பார்த்துகொண்டிருந்தோம். இரண்டு கரிச்சான்கள் ஒரு பட்டாம்பூச்சிக்காக போட்டிபோட்டுக்கொண்டு பறந்து வந்தது. அதில் ஒன்றன் அலகு சாலையில் உரசும் சத்தம் எங்கள் காதுகளில் எதிரொலித்தது. அருகில் நடந்து சென்று பார்த்தால் இரண்டு கொண்டலாத்திகள் தென்பட்டது, ஒரு மரத்தின் உச்சியில் இருந்த குண்டுக்கரிச்சான் ஓயாமல் பாடிக்கொண்டிருந்தது. இப்படி எங்களின் பயணம் முழுவதும் பறவைகள் சூழ்ந்திருந்தது. அங்கிருந்து தாம்பரத்திற்கு நேராக செல்லும் பேருந்து 5:00மணிக்கு வேடந்தாங்கலில் இருந்து கிளம்பும் அதில் ஏறிக்கொண்டோம்.🙂

நிர்மல் குமார் சில்லை
சிவஞானம்
பாலாஜி
ஜோசப் அருன்

ஆறாவது தமிழ் பறவை ஆர்வலர்கள் நிகழ்ச்சி குறித்த பதிவுகள் விரைவில்!!!

பறவைகளுக்காக எங்களின் முதல் பயணம் இனிதே தொடங்கியது~~தொடரும்🦉.

Leave a Reply