இயற்கை மருத்துவம்

கடும் வெக்கையைப் புரிந்துகொண்டு நலம் பேணுங்கள்

Spread the love

கடும் வெக்கையைப் புரிந்துகொண்டு நலம் பேணுங்கள்!
-ம.செந்தமிழன்

கடுமையான வெக்கை, அனல் காற்று ஆகியன இணைந்துள்ள இச்சூழலை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

கோடை வெயில், நிலத்தில் உள்ள நீருடன் புணர்ந்து நீராவி எனும் வடிவத்தை உருவாக்கும். இந்நீராவிப் பெருக்கம் கார் காலத்தை வரவேற்கும். புழுக்கம் ஏற்பட்டால், மழை வருவது இதனால்தான். நீராவி நிலையே புழுக்கம் ஆகும். ஓரிடத்தில் நீராவி மிகுந்து புழுக்கம் ஏற்படுகையில் நீராவியில் உள்ள காற்றின் குளிர்ச்சி, மேகத்தை ஈர்ப்பது இயல்பு. காற்றின் பல்வேறு நிலைகளில் நீராவியும் ஒன்று. அதன் சிறப்பு, குளிர்ச்சியை அகத்திலும் வெம்மையைப் புறத்திலும் கொண்டிருப்பதுதான். ‘குளிர்ச்சியின் அடிப்படை இயல்பு, சூழலில் உள்ளவற்றை ஈர்த்துகொள்ளுதல் ஆகும்.

கோடைக் காலத்தில் நிலம் தன் நீர்ச் சேகரிப்பின் ஒரு பகுதியை வெப்பத்துடன் புணர்ந்து நீராவி எனும் நிலைக்கு விட்டுத் தருகிறது. இவ்வாறான கோடை வெயில், மழை ஆகியன நிலத்திற்கும் உடலுக்கும் பொருத்தமானவை.

இப்போதுள்ள வெக்கை முற்றிலும் மாறுபாடானது. இதனைக் கடும்வெக்கை என்று அழைக்க வேண்டும். இது ‘நீர் பிடுங்கும் வெக்கை’ ஆகும்.
நீருடன் வெப்பம் புணர்தல் இயல்பு. அப்புணர்ச்சியே நீராவியை விளைவிக்கும். நீரைப் பிடுங்குதல் எனும் தற்போதைய இயற்கைச் செயல்பாடு, சிக்கலான பல விளைவுகளைக் கொணரும். நிலத்தில் உள்ள நீரை விரைவாக வற்றச் செய்தல் இப்போது நிகழ்கிறது. இக்கோடை நீடித்தால், நிலத்தின் வறட்சி கடுமையாக இருக்கும். அதன் பின்னர் மழை பொழிந்தும் நிலைமையில் பெரிய மாற்றம் இருக்காது. ஏனெனில், நிலத்தின் ஈர்த்தன்மையை இப்போதுள்ள கடும் வெக்கை வெகுவாகக் குறைத்துவிட்டது.
காற்றில் ஈரம் மிக மிகக் குறைவாக உள்ளது.

நீர் பிடுங்குதல் என்றால், காற்று தனது வெம்மையினால் நீரை வறளச் செய்வதாகும். அதாவது நீராவி ஆகாமல் நீர் வற்றிப்போகிறது. காற்றின் அகத்தில் குளிர்ச்சி இன்மையினால் விளைவது இது.

மனித உடல்களில் சிக்கலான தொல்லைகள் நேரும் சூழல் இது. குறிப்பாக, இக்கடும் வெக்கையினால் கபநோய்கள் மிகும். குளிர்ச்சி மிகும்போது கபம் மிகுவது பொது இயல்பு. அவ்வாறு மிகும் கபத்தினை குப்பைமேனி, மிளகுக் கசாயம், தூதுவளை போன்ற அகவெப்பத் தூண்டிகளால் நீக்கலாம். செம்மை நலக்கொள்கை இவ்வாறுதான் செயலாற்றுகிறது. கடும் வெக்கையினால் கபம் மிகும்போது, அகவெப்பத் தூண்டல் செய்யக் கூடாது. இச்சூழலுக்கேற்ற நலவழிமுறைகளை இக்கட்டுரையில் தெரிவிக்க விரும்புகிறேன்.

வெயிலில் சென்றால் அல்லது உடலில் வெப்பம் மிகுந்தால் வியர்வை வெளியேறும். வியர்வை எனும் நீர்மம் உடலின் உள்ளே இல்லை. ஆனால், வியர்வை வெளிப்படுகிறது. இது எவ்வாறெனில், உடல் முழுவதும் உள்ள ஈரம், புறத்தில் உள்ள வெப்பத்துடன் புணர்ந்து தோல் வழியாக வெளிப்படுகிறது. அது வெளிப்படும் நிலையில், வெளியே உள்ள காற்றின் குளிர்ச்சியுடன் புணர்ந்து வியர்வை எனும் நீர்மம் ஆகிறது. அதாவது உடலின் உள்ளிருக்கும் நீர்மப் பொருட்கள் யாவும் ஈரம் எனும் தன்மையாக மாற்றப்படுகின்றன. அந்த ஈரம், தோல் வழியே வெளியேறும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியுடன் இணைந்து நீர்மம் ஆகிறது. இதுவே வியர்வை. வெயில் காலமாகினும் காற்றில் உள்ள குளிர்ச்சியுடன் புணர்ந்துதான், உடலின் உள்ளிருக்கும் ஈரத்தன்மை வியர்வை எனும் நீர்மம் ஆகிறது.

இப்போதுள்ள கடும் வெக்கையில் காற்றின் குளிர்ச்சி மிக மிகக் குறைவு. ஆகவே, இந்த அனல் காற்று உடலின் உள்ளிருக்கும் ஈரத்தை வியர்வையாக மாற்றுவதில்லை. கடும் வெக்கைப் பகுதிகளில் வியர்வை மிகக் குறைவாக உள்ளது. உடலின் உள்ளே செல்லும் இந்த கடும்வெக்கை உடலின் உள்ளிருக்கும் நீர்மத்தை உருக்கி ஈரம் எனும் நிலையை உருவாக்குகிறது. அதன் பின்னர் அந்த ஈரம் வெளியில் உள்ள காற்றுடன் கலந்து வியர்வை ஆக வேண்டும். இக்கடும் வெக்கையில் அது நிகழ்வதில்லை. காற்றில் உள்ள மிகை வெப்பமே காரணம். ஒருபுறம் வெக்கையினால் உடலின் நீர்மங்கள் உருகி ஈரம் எனும் வடிவை அடைகின்றன. மறுபுறம் வெக்கைக் காற்று அந்த ஈரத்தை உடலின் உள்ளேயே தக்க வைக்கிறது.
இதன் விளைவாக, உடலின் உள்ளே கபம் மிகுந்துவிடும். இப்போதே பலருக்குச் சளி, நீர்கோத்தல், தீவிர இருமல், கோழை கக்குதல், வாந்தி ஆகிய தொல்லைகள் உள்ளன.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக வானில் மேகம் இருந்தும் நிலத்தில் அனல் வெக்கை நிலவுகிறது. இது முற்றிலும் புதிய மோசமான நிலை ஆகும். இதற்கான காரணங்கள் பகுத்தறிவினால் முன்வைக்கப்படுகின்றன. அவை எல்லாம் ஓரிரு சரியான தகவல்களைக்கொண்டுள்ளனவே தவிர, உண்மை அல்ல. சென்னையில் நீர் நிலைகளும் தாவரங்களும் பிற உயிரினங்களும் இருந்திருந்தால், இவ்வாறான நெருக்கடி உருவாக வாய்ப்பில்லை.

சென்னையிலும் இவ்வாறான கடும்வெக்கைச் சூழல் நிலவும் பிற பகுதிகளிலும் நிலம் நீரை இழந்துகொண்டுள்ளது. மனிதர்கள் தம் உடல் நிலையினைக் கபச் சிக்கல்களுக்குப் பறிகொடுக்கிறார்கள். இக்கடும் வெக்கை முடிந்து மழை பொழியும்போது கபம் கொண்ட உடல்கள் மேலும் துன்புறும். ஏற்கெனவே கடந்த கோடை முதல் மாசிமாதம் வரை நீடித்த குளிர்ச்சியினால் பலருக்குத் தோல் நோய்கள் வந்துள்ளன.

இக்கடும் வெக்கையினால் கூடுதல் தொல்லைகள் வரும்.
முன்தடுப்பு நடவடிக்கைகள் சில உள்ளன. அவற்றைக் குறிப்பிடுகிறேன்.

சோற்றுக் கற்றாழையை உடல் முழுவதும் தேய்த்து, சில நிமிடங்கள் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இதுவே மிகச் சிறந்த பாதுகாப்பு. ஏற்கெனவே கபத்தொல்லை இல்லாதவர்கள், காலை வெறும் வயிற்றில் சிறிதளவு சோற்றுக் கற்றாழையை விழுங்கலாம். ஐந்து நாட்கள், பெரிய தேக்கரண்டி அளவுக்கு உட்கொள்ள வேண்டும். நாள் கணக்கும் அளவும் மாறக் கூடாது. சளி உள்ளிட்ட சிக்கல்களில் இருப்போர் கற்றாழை விழுங்கவும் காற்றாழை தேய்த்துக் குளிக்கவும் வேண்டாம். வழக்கம்போல, அன்றாடம் குளிக்க வேண்டும். உடல் மிகவும் குளிர்ந்து போனால் மட்டுமே குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இப்போதைய சூழலில், இரவு உறங்கச் செல்லும் முன் குளிரக் குளிக்க வேண்டும். ஒவ்வொரு குவளை நீரையும் பொறுமையாக உச்சந்தலையில் ஊற்றிக் குளித்தல் வேண்டும். பின் கழுத்தின் பிடறிப் பகுதியிலும் இவ்வாறு பொறுமையாக நீர் ஊற்றி, முதுகுத் தண்டுவடத்தில் நீர் மெதுவாக இறங்கும் வகையில் குளிக்க வேண்டும். பின்னர் ஆண்/பெண் உறுப்பின் மேற்புறமும் பின்புறமும் இதேபோல நீரூற்ற வேண்டும். குறைந்தளவு நீர் இருந்தாலும் இம்முறையில் குளிக்கையில் உடல் நன்கு குளிர்ச்சி அடையும். எப்போதுமே இவ்வாறு குளிப்பது பொருத்தமானது. ஆனாலும், வெக்கை மிகுந்த நிலைகளில் இக்குளியல் பாதுகாப்பான அரணாக அமையும்.

கபம் வந்து விட்டால், வழக்கமான சளி வெளியேற்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாம். ஆற வைத்த வெந்நீர் பருக வேண்டும். புளி, பருப்பு, எண்ணெய் குறைவான உணவு உட்கொள்ள வேண்டும். பசி மந்தம் அல்லது செரிமானச் சிக்கல் இருப்பின், தேன் ஓமம் உட்கொள்ள வேண்டும். அதற்கான செய்முறையும், கால அளவும்:
’ஓமம் சிறிதளவு வாங்கி வறுத்து, பொடி செய்து வைத்துக்கொள்க. சிறு தேக்கரண்டி அளவு ஓமப்பொடியை எடுத்து தேன் கலந்து, நாக்கில் நக்கிக்கொள்க. ஒரு நாளைக்கு இருவேளை மட்டும் இவ்வாறு செய்க. ஐந்து நாட்கள் செய்தால் போதும். பசி மந்தம், செரிமானச் சிக்கல் இல்லையெனில் தேன் ஓமம் தேவை இல்லை.’

கற்றாழைக் குளியல் வாரம் இருமுறை போதும். மீதமுள்ள நாட்களில் செம்பருத்தி இலைகளை அரைத்துத் தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தல் நலம்.

பருவநிலைகள் குறித்த பகுத்தறிவு சார்ந்த தகவல்களுக்கு ஆட்படாதிருங்கள். கடலில் வெகு தொலைவில் உள்ள காற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது உங்களுக்குப் பொருத்தமும் தேவையும் அற்றது. உங்கள் உடலைத் தொடும் காற்றினை உணருங்கள். உங்கள் உடலின் உட்செல்லும் வெப்பத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அதுவே மெய்க் கல்வி. அக்கல்வி இல்லையெனில் நிகழும் சூழல் சீர்கேடுகளும் ஊழிக் காலத்தின் சீற்றங்களும் நம்மை வீழ்த்திவிடும்.
மழை பொழிந்தாலும், மழைக்குப் பிந்தைய நாட்களில் காற்றின் வெக்கை குறைந்துள்ளதா என உணருங்கள். கடும் வெக்கை தணியும்வரை இக்கட்டுரையில் உள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

மழை வேண்டும் என வேண்டுவோம். இதற்கென எந்தச் சடங்கும் தேவையில்லை. அவை எல்லாம் மனித அறிவுத் திமிரின் வெளிப்பாடுகள். மழை வேண்டும் என ஆழமாக விரும்புங்கள். அதுவே இறை உறவு.

செம்மைக் கொள்கைகளைப் பின்பற்றுவோருக்கான செய்தி இது.

பிறருக்கு இக்கருத்துகளில் உடன்பாடில்லை எனினும் ஏதேனும் பொருத்தமான நல்வழியை நாடுங்கள். கவனக் குறைவாக இருக்க வேண்டாம்.

எல்லாம் வல்ல அம்மையப்பர் காக்கட்டும்!