ஒரு இலட்ச ஆண்டு நடனம்

Spread the love

ஒரு இலட்ச ஆண்டு நடனம்- ராஜ்சிவா(ங்க்)

காலையில் எழுந்து கதிரவன் வணக்கம் (சூரிய நகஸ்காரம்) செய்பவரா நீங்கள்? இல்லையா? சரி பரவாயில்லை. பகலிலாவது வெளியே போவீர்களில்லையா? அது போதும். “பகல் பொழுதில் கதிரவனிடமிருந்து வரும் வெளிச்சத்திற்குக் காரணம் எது?” என்று உங்களிடம் கேட்டால், அடுத்த கணமே “போட்டோன்கள்” என்று சொல்லிவிடுவீர்கள். காரணம் நீங்கள் என் வாசகர்கள். மேலும் அறிவாளிகள். அடுத்து, “அந்த போட்டோன்கள் சூரியனிலிருந்து உங்களை வந்தடைய எவ்வளவு நேரம் எடுக்கின்றன?” என்ற இரண்டாவது கேள்வியைக் கேட்டால், சட்டென, “8 நிமிடம் 2 செக்கன்” எனப் பதில் சொல்லிவிடுவீர்கள். அதற்கும் காரணம் நீங்கள் அறிவாளி என்பதுதான் (இப்போதெல்லாம் யார் அறிவாளி, எதைப் படித்தால் அறிவாளி என்று ரொம்பப் பேசவேண்டியிருக்கு).

கதிரவனிலிருந்து ஒளிவர எடுக்கும் நேரம் 8நி 20செ என்பது உண்மைதான். ஆனால், கதிரவனில் அந்த போட்டோன் உருவாகியதிலிருந்து உங்கள் கண்ணை வந்தடைய எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் தெரியுமா? உங்களால் நம்பவே முடியாது. ஒரு இலட்சம் ஆண்டுகளிலிருந்து, பத்து இலட்சம் ஆண்டுகள்வரை எடுத்திருக்கலாம். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

ஒரு போட்டோன் வெற்றிடங்களில் நொடிக்கு 300,000 கிமீ வேகத்தில் பயணிப்பவை. ஆனால், கதிரவனின் மையக் கோளத்தில் உருவாகும் ஒரு போட்டோன்கள் அப்படியானவை அல்ல. கதிரவனின் மையக்கருவில் நடைபெறும் அணுக்கருப் பிணைவினால் (nuclear fusion) போட்டோன்கள் உருவாகின்றன. கதிரவன் தன்னுள்ளே பல அடுக்குகளைக் கொண்டது. அதன் மையத்தைச் சூழவுள்ள அடுக்கை, கதிர்வீச்சுக் கோளம் (radiation zone) என்கிறோம். இதுவே கதிரவனின் ஆற்றல் அனைத்தையும் உருவாக்கும் இடமாகும். கதிரவனின் அளவுடன் ஒப்பிடும்போது மிகச்சிறிய கோளம்தான் இது. வெறும் 300,000 கிமீ விட்டமுடையது. கிட்டத்தட்ட 25 பூமியினளவு கொண்டது. ஆனால், அது மாபெரும் ஆற்றல் கிடங்கு. 15 மில்லியன் சதமபாகை வெப்பநிலையுடன் கொதிக்கும் ‘தம்’ பிரியாணிப் பாத்திரம். மையத்தில் உருவாகும் ஐதரசன் அணுக்கள் இந்த மண்டலத்திலுள்ள வெப்பநிலையைத் தாங்கமுடியாமல் எலெக்ட்ரோனும், புரோட்டோனுமாக உடைந்து பிரிகின்றன. அவ்வளவு வெப்பம். அப்போது, அந்த இடத்தில் எலெக்ட்ரோன்களும், புரோட்டோன்களும் , துகள்களாகவும் இருக்காது, வாயுவாகவுமிருக்காது, திரவமாகவும் இருக்காது. இவை எல்லாம் கலந்த கூழ் (soup) நிலையே அங்கு காணப்படும். அதையே பிளாஸ்மா (plasma) என்கிறோம். இந்த பிளாஸ்மாக் கூழ், மிகமிகமிகமிகச் செறிவான நிலையில் கதிர்வீச்சு மண்டலத்தை நிரப்பியிருக்கும்.

இந்தப் பிளாஸ்மாக் கூழினுள் நிறைந்திருக்கும் புரோட்டோன்கள், 15 மில்லியன் சதம வெப்பநிலையில் ஒன்றுடன் ஒன்று பிணைகின்றன (fusion). அப்போதுதான் போண்ட்டோன்களும், ஆற்றலும் வெளிவிடப்படுகின்றன. அங்கு வெளிவிடப்படும் ஆற்றல் எவ்வளவு தெரியுமா? நொடிக்கு 10 பில்லியன் ஐதரசன் குண்டுகளுக்கான ஆற்றல். இதுபோல ஒவ்வொரு நொடிக்கும் பத்து பில்லியன் ஐதரசன் குண்டுகள் அளவான ஆற்றல் கதிரவனிலிருந்து செலவாகிக்கொண்டே இருந்தால், ஒரு நாள் அது இறக்கப்போவது உறுதியல்லவா? சரி, அதுபற்றி இப்போது வேண்டாம். துக்கம் தொண்டையை அடைக்கும். 4,6 பில்லியன் ஆண்டுகள் இதுபோல ஆற்றலை வெளிவிட்டிருக்கிறது கதிரவன். இன்னும் 4 பில்லியன் ஆண்டுகள் உயிருடன் இருக்கும். அப்பாடா!

கதிரவனின் மையக் கோளத்திலிருந்து உருவாகும் போட்டோன், பிளாஸ்மாக் கூழின் செறிவினூடாகப் பயணிக்கும்போது, அங்கிருக்கும் பிளாஸ்மாத் துகள்களுடன் மாறிமாறி முன்னே பின்னே மோதிக்கொண்டு நகர்கின்றன. அவற்றின் ஒரே நோக்கம், கதிரவனின் மேற்பரப்பிற்கு வந்து, வெளியே தப்பிச் செல்வதுதான். ஆனால், பிளாஸ்மாவின் செறிவு அதற்கு இடமளிப்பதில்லை. மக்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியில் நடுவே அகப்பட்டுக்கொண்ட நீங்கள், வெளியே வரமுடியாமல் தவிப்பீர்களே! வெளியே வருவதற்கு அங்கும் இங்கும் அப்படியும் இப்படியுமாக நகர்வீர்களே! அப்படித்தான் போட்டோன்களும் நகர்கின்றன. போட்டோன்களின் இந்த நகர்வை, ‘சீரற்ற நடை’ (random walk) என்னும் பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட டாஸ்மார்க்கில் கழுத்துவரை குடித்துவிட்டுத் தள்ளாடும் ஒருவரைப்போலப் போட்டோன்கள் தடுமாறுகின்றன. ஒன்றுடன் ஒன்று மோதித் திசைகள் மாறி மெல்ல மெல்ல மேலே வருகின்றன. இந்தப் பயணத்திற்குத்தான் ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. இப்படியாகக் கதிரவனின் மேற்பரப்பை அடைந்ததும், உற்சாகத்தில் துள்ளிக் குதித்தபடி, திடீர் வேகம் எடுத்துக்கொண்டு 8நி 20செ இல் பூமியிலுள்ள உங்கள் கண்ண வந்தடைகின்றன.

இப்போது சொல்லுங்கள். உங்களைச் சந்திக்க, கதிரவனில் உருவான ஒரு போட்டோன், ஒரு இலட்சம் ஆண்டுகளும் எட்டு நிமிடங்களும் பயணம் செய்து உங்கள் விழித்திரையில் பளிச்சிடுகின்றன.

@ ராஜ் சிவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *