ஐங்குறுநூறும் அம்மாவும்

Spread the love

ஐங்குறுநூறும் அம்மாவும்!! (மீள்)

இப்பொழுதெல்லாம் அன்றாடம் அம்மாவிடம் பேசமுடிவதில்லை. வாரத்திற்கு ஒருமுறை அம்மாவை அழைப்பதுண்டு. எப்போதுமே அழைத்த சிலநொடிகளில் அலைபேசியை எடுத்து கொஞ்சம் சத்தமாக ஏஞ்சாமி என்றால் நம் அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம். எனக்கு நேத்துப்புடிச்சு நிக்காம விக்கல் எடுத்துக்கிட்டே இருந்துச்சு.. நீங்கெல்லாம் எப்பிடி இருக்கறீங்களோன்னு நெனச்சுக்கிட்டே மாடுகள மேச்சுக்கிட்டு இருந்தேன் என்பார். சில சமயங்களில் எந்நேரம் நெனச்சுக்கிட்டீங்க என்று கேட்டுவிடத் தோன்றும். அப்படிக் கேட்டுவிட்டால் நான் என்னாரம் ன்னு சொல்லுட்டு?? என்னாரமும் நெனச்சுக்கிட்டேதான் இருக்கறன்…என்று பதில்வரக்கூடும். அது அம்மாவின் அன்பினையே ஐயப்படுதல் என்றுத்தோன்றுவதால் எதுவும் பேசமாட்டேன்.

ஏம்மா..நல்லா இருக்கறீங்களா என்பேன்..நான் நல்லாத்தான் இருக்கறேஞ்சாமீ.. என்பார். அப்பறம் ஏன் சளிப்புடிச்சு மூக்கடச்ச மாதிரியேப் பேசறீங்க? ஏ(ன்) ..ஒடம்புக்குச் செரியில்லீங்களா? என்பேன். இல்ல..நேத்துக் கெழக்க ஊருக்கு காணியாளக்கவண்ட அப்பிச்சிச்செத்த எளவுக்குப் போனனா…செரியான வெய்யிலுங்கூட.. போன ஊட்டுலயெல்லாம் தண்ணிய மோந்துமோந்து குடிச்சு, மூக்குக்கீக்கெல்லாம் அடச்சுச் சளிப்புடிச்சுக்கிச்சு என்று தொடங்கி, மண்டையக் கிண்ணுன்னு புடிக்கும் தலவலி, நீருக்கட்டின மொழங்கால்வலி, கைகால் ஓஞ்சு ஓஞ்சு போகின்ற சலுப்பு, குமிஞ்சு நிமுந்தம்னாக் கிறுகிறுப்பு, ஏறுகால் வெய்யில்ல நின்னுக்கிட்டு இருக்கறபோது வரும் வெடுவெடுப்பு என்று வரிசையாய் ஒவ்வொரு வலிக்கும் காரணத்தோடு நம்மிடம் கொட்டித்தீர்ப்பார்கள்.

நீங்கதான் பால்க்கறந்தீங்களா? அவன் (தம்பி) வந்து கறக்கமாட்டானா? என்பேன். அவனென்னக்கி ஒருநாக்கண்டமாதிரி வந்து பால் கறந்துகுடுக்கிறான். அவம்போனாப் போனமடந்தான்..வந்தாச் சந்தமடந்தான்..னாச்சு. நாந்தேன் அன்னாடும் பால் கறக்கிறேன். நாலு மாடுக, நாலு கன்னுக்குட்டிக, அஞ்சாறு உருப்படி ஆடு-குட்டி, கெடாய்கன்னு எதுக்கு ஒருஆளு இத்தனய மேய்க்கிறீங்க? சொன்னாக் கேளுங்க.. அளவுக்கு ஒரு மாடுங்கன்னும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை எல்லாம் குடுத்திருங்க என்பேன். அடுத்தநொடிச் சினத்துடன் பதில் வரும். அதெல்லாம் நாம்பாத்துக்கறன்…நீ உன்ர புள்ளையும்-பையனையும் நல்லாப்பாத்துக்க.. நாஞ்செய்வேன் இன்னாமும் எட்டாளு வேல… பால்ய நாளொன்றில் எதிர்த்துப் பேசியதற்காகக் கடவாயைத் திருகிப் பருப்பாமுட்டியில் கொடுத்தஅடி எனக்கு நினைவுக்குவந்து தொலைக்கும். மறந்தும் மாடு விற்பதுபற்றி மறுபடி வாய்திறவேன்.

முடிந்தவரை பெரியவர்களால் இயங்க முடிகின்ற நாள்வரையில் அவர்கள் உழைப்பதை நாம் தடுக்கக்கூடாது. அப்படி நாம் கட்டுப்படுத்தி ஓரிடத்தில் உட்காரவைத்தால் நோய்களை நம் வீட்டுக்கே விருந்தாளியாய் அழைத்து நம்மைப் பெற்றவர்களின் உடலையும் உள்ளத்தையும் சிறிதுசிறிதாக அவைகளுக்கு உண்ணக் கொடுக்கிறோம் என்பதுதான் உண்மை. உழைப்பின் வேகம் சற்று தாழத்தொடங்கும்போது பொழுது முச்சூடும் நின்றுகொண்டு சலிக்காமல் வேலை செய்தவர்கள் சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால் அவர்களின் வேலை செய்த மட்டும் செம்மையாக முடிந்திருக்கும். அந்த இடைவெளியைப் பெற்றமக்கள் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். அந்தவீடு வெகுவிரைவில் மேன்மையுறும். அதைவிட்டுவிட்டு “ஆமா நீ புடுங்குன புடுங்குல தான் நாங்க உக்காந்துட்டு சோறு உங்குறோம்” என்று பாம்பாடுப்பட்டு நம்மை உயர்த்திப் பிழைக்க வைத்தவர்களின் பிள்ளைகளே ஏசிச்சாடும் வீடுகள் எற்றைக்கும் மேன்மையுறாது.

சரி கதைக்கு வருகிறேன். அண்மையில் அம்மாவை அழைத்திருந்தபோது, தொடக்கத்தில் மேற்சொன்னதுபோல விக்கல், நோய், வலிகள் என்று பேச்சு முழுமையும் தொய்வும், வருத்தங்கலந்தும் உரையாடல் மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. ஊருக்கு எப்ப வருவீங்க.. லீவு கெடைக்காதா?? வெட்டவெடியால காக்காயிக வந்திருதுக… என்றார் ஏக்கம் தொக்கிய குரலில்.. எனக்கு காகங்களிடம் பேசிக்கொண்டிருந்த ஐங்குறுநூற்றுப்பாடலில் வரும் தாயொருத்தியின் ஏக்கம் நினைவுக்கு வந்தது.

“மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வடிசில்
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல் வேல் காளையோடு
அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’

-பாலை பாடிய ஓதலாந்தையார்

“அழகான கருமையான இறகுகளைக் கொண்ட சிறிய காக்கையே ! உனக்கு நெய்யூற்றிப் பிசைந்த, இறைச்சிச் சோற்றைப் பொன்னாலான வட்டிலில் படைக்கிறேன். அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் உண்டுவிட்டுப் போ! அதன் பிறகாவது…என் மகள்(இங்கே மகன்) சீக்கிரம் வந்து விடுவா(ன்)ள் என்பதற்கு அடையாளமாகக் கரைந்து விட்டுப்போவாய்!!’’ என்று பொருள்கொள்ளலாம்.

எம் வீட்டின் முன்பு மட்டுமல்ல…. வெளிநாட்டுக்கு/வெளியூருக்கு பெற்ற மக்களை அனுப்பிவிட்டு, வெறுமை நிறைந்த கண்களுடன் வீட்டின் வாயிலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் எல்லா அம்மாக்களுக்காகவும் வீட்டின் முன்பு காகங்கள் கரைந்துகொண்டேதாம் இருக்கின்றன. ஆனால், பெற்றோர்களுக்காக மக்கள் மட்டும் மனங்கரைய மறுக்கிறார்கள்.

செ. அன்புச்செல்வன்
21/04/2019