FEATUREDGeneralLatestSocialmedia

என் அம்மாவும் தீவாவளியும்

Spread the love

என் அம்மாவும் தீவாவளியும்….(மீள்)

ஆடி நோம்பி போனதுமே ஐப்பசி நோக்கியே எங்களின் பால்யம் இருந்தது. பள்ளியில் ஆங்கில மாதங்களும், வீட்டில் தமிழ் மாதங்களும் எங்களுக்குப் பரிச்சயப் பட்டிருந்தன. ஆகவே ஐப்பசியில்தான் தீபாவளி வருமென்பது எங்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அக்டோபர் எண்டிலா? நவம்பர் ஃபிகினிங் லா? தீபாவளி வருமென்ற குழப்பம் எப்போதும் இருந்ததில்லை. வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழைகளைப் புவியியல் புத்தகத்தில் மட்டுமே படித்திருந்தோம். சலமூலையில் மின்னி, கிழக்கே இடித்தால் கொங்க மழையென்ற ஐப்பசி அடைமழை என்றும், தெற்கே தாடகமலையில் (ஆழியார் அணைக்கு கிழபுரம் இருக்கும் பெரியமலை) மின்னி மேற்கே இலேசாக இடித்துத் தெற்கிலிருந்து பெய்தால் கோடை மழை என்றும் அறிந்திருந்தோம்.

ஆகவே மழைதான் எங்கள் நோம்பிகளை அதன்மூலம் வரும் மகிழ்ச்சிகளைத் தீர்மானித்தது. கோடையோ கொங்க மழையோ நன்றாகப் பெய்துவிட்டால் கூலி-நாலிகளுக்கும், குறு-சிறு குடியானவருக்கும் சோத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் கொடுமை இருக்காது. சிலசமயம் கோடை-கொங்க மழைகள் பழிவாங்கிவிடும். அந்தநாட்களில் சினிமாக்காரர்கள் செப்பும் பொழில்மேவும் பொள்ளாச்சியாய் இராது. காடுமேடெல்லாம் மாளாத பிள்ளைகளைப் பெற்றுவிட்டு மழை என்ற கொற்றவனைக் காணாத வெறும் வறடியாய் நெடிதுயர்ந்து நிற்கின்ற தென்னை மரங்களை வழியெங்கும் காணமுடியும்.மழையில்லாத ஆண்டில் மக்கள் படும் பாடு இங்கே சொற்களில் வடித்துவிட இயலாது.

காக்கஞ்சியும், அரக்கஞ்சியும் குடித்துக்கொண்டு இருக்கின்ற நாட்களில் புதுத்துணிக்கு எங்கே போவது? பள்ளிக்கூடத்தில் கொடுக்கும் சத்துணவும்(??!!), பல்பொடியும், செருப்பும், அரசியல்வாதிகளின் உள்ளச் சுருக்கங்களின் குறியீடாய் கொடுக்கப்படும் அரசாங்கச் சீருடையும் அணிந்தபடிதான் எங்களில் பெரும்பாலானவர்களின் பள்ளிவாழ்வு இருந்தது. எப்படியும் இந்த நோம்பிக்குத் துணி எடுத்திரலாஞ்சாமி என்பாள் என் அன்னை. இனிப்புகள் நிறைந்ததுதான் தீபாவளி என்பதெல்லாம் நான் அறியாத செய்தி. கச்சாயம் என்பது தைநோம்பிக்கு இடிக்கும் பச்சை மாவு மிச்சமாகும்போது பழைய வெல்லம் போட்டுச்சுட்டுத் தரும்போதுதான். தீவாவளி நோம்பிக்கென்று தின்றதில்லை. சிலேபியும், காரப்பூந்தியும் சனிக்கிழமை சந்தையில் என் அம்மா வாங்கிகொணரத் தின்றதுண்டு. மழை மட்டுப்பட்ட ஆண்டின் தீபாவளியன்று ஆடிப்பட்டத்தில் நட்ட பருத்திக்காட்டிலோ அல்லது புரட்டாசிப் பட்டத்தில் சால் போட்ட நெடக்கலை (நிலக்கடலை) காட்டிலோ என் அம்மா களைவெட்டிக் கொண்டிருப்பாள். ரெண்டு நாளைக்கி மூணு நேரத்துக்கும் என்று ரெண்டு படி அரிசியும், அப்பிச்சி ஊரிலிருந்து எடுத்துவந்திருந்த உளுந்துப் பருப்பு ரெண்டு கெலாசும் ஈய வாணாச்சட்டியிலும், பால் காயவைக்கும் தட்டக் குண்டாவிலும் ஊறப்போடுவதிலிருந்துதான் எங்களின் தீவாவளி நோம்பி தொடங்கும்.

கல்லில் ஆட்டிய அரிசி-உளுந்துமாவை கையால் தோண்டி எடுத்து ஒரு பெரிய சிலுவர்ப் பாத்திரத்தில் சேகரிப்பதை ஒரு தவம்போலச் செய்வாள் அம்மா. கல்லாட்ட ஆட்டி எடுத்த மாவை உப்புக்கல் போட்டு முழங்கைவரை உள்ளேவிட்டுக் கலக்கி ஒருதுளி இடக்கையில் வைத்து உப்புச் சரிபார்க்கும்போதே எங்களுக்கு அடுத்தநாள் இட்லி மீதான எதிர்பார்ப்பு அன்றே தொடங்கிவிடும்.எந்த ஒரு நோம்பிக்காய் இதுவரைக்கும் அம்மா துணி எடுத்துக் கொண்டதில்லை. வெச்சுக்கட்ட ரெண்டு சீலையும், காசாகக்கட்ட மூணு சீலையும், எல்லாச் சீலைக்கும் போடுறமாதிரி வெள்ளை அல்லது கறுப்புக்கலரில் லவுக்குத் துணி அஞ்சும், மூணு பிரியல் பாவாடைகளும் வைத்திருப்பாள்.

அப்பாவுக்குக் கச்சிக்கரை போட்ட வேட்டி-துண்டுகள் நாலும், அஞ்சு வெள்ளைச்சட்டைகளும் இருக்கும். எனக்கும் தம்பிக்கும் கலியாணங்காச்சிக்கு போட்டுக்கிட்டு போகிறமாதிரி போன “தை” நோம்பிக்கோ அல்லது “ஆடி” நோம்பிக்கோ எடுத்த ரெண்டு நல்ல அங்கராக்குகளும், நாலு தபால் பெட்டி டவுசர்களும், வெள்ளையும்-காக்கியும் பள்ளிக்கூடத்துக்காய் ரெண்டு செட்டும் இருக்கும். ஒருமுறைகூடத் துணிஎடுத்துக் கொடுங்கள் என்று நான் கேட்டதாய் எனக்கு நினைவில் இல்லை.
புதுத்துணிக் கிடைக்காதத் தீபாவளிகள் ஏக்கத்திலேயே கழிந்துபோயிருக்கின்றன. காலையில் சுட்ட இட்டிலியை மதிய உணவாய் ஒருரூபாய்க்கு வாங்கிய அம்பது கிராம் பொட்டுக்கடலையும் எட்டணா பச்சமிளகாயிலும் காலையில் அரைத்த சட்டினியில் தொட்டு விழுங்கும்போது வறுமை வட்டிலில் தெரியும் எனக்கு.

மூணு அடசல் இட்டிலியை ஊற்றி எங்களுக்கெல்லாம் உண்ணவைத்துவிட்டு, பழைய கந்தல் துணியொன்றைத் தலைக்குக் கட்டிக்கொண்டு “நோம்பி நாளுமதுவுமா” களை வெட்டத் துவங்குவாள் என் அம்மா. நானும், தம்பியும் அம்மாவுடன் களை வெட்டவேண்டும் என்பது எங்களின் குடும்பத்தில் எழுதாக்கிளவி. பொதுவாகக் களைவெட்டும் ஆட்கள் தமக்கு வல-இடப்பக்கங்களில் ஓரடிக்கு இடத்தைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்வது நிரை பிடித்தல் என்று பெயர். ஆனால் என்னைப் பெற்றவளோ இருநிரைகள் பிடித்தபடி (அதாவது வல-இடப்பக்கங்களில் களைக்கொத்து எட்டும் தூரம் வரை ஆக்கிரமித்துக்கொண்டு) காற்றுக்கு எதிர்த்திசையில் அசுரவேகத்தில் முன்னேறுவாள்.(அப்படித்தான் என்னையும் முன்னேற்றினாள) காற்றின் திசையில் முன்னேகினால் களைக்கொத்தில் வெட்டிய மண் முகமெல்லாம் தெறிக்கும். கண்ணெல்லாம் மண் பூத்துவிடும். எங்களின் அம்மையின் இடமும் வலமும் அரை நிரையோ முக்கால் நிரையோ பிடித்துக்கொண்டு நாங்களும் “தீவாவளியன்னக்கி” பட்டாசு வாங்கக் காசுக்காய் களை வெட்டுவோம். அப்பா ஆணிக்கால் செருப்பணிந்தபடி சிகரெட் பிடித்தபடி எருமை மேய்த்துக்கொண்டிருப்பார்.

ஏறுகால் வெய்யிலில், ஒரு செறகு (15-20 நிரைகள் அல்லது 5-10 பாத்திகள்) களைவெட்டி முடிக்கும்போது, பொழுது உச்சிக்கு வந்திருக்கும். களை வெட்டிக்கொண்டே நெடக்கலை (நிலக்கடலை) அல்லது பருத்திக் செடிகளுக்கு மண்ணை அணைத்துக் கொண்டும், வேருடன் வெட்டிய களைகளைப் பொறுக்கி வாய்க்காலில் அல்லது வரப்பில் எறிந்துக் கொண்டும், குறிப்பாக, களைகளில், ‘அருகு’ என்றால், ‘பெருங்கொத்து’ அல்லது ‘குட்டை மம்மிட்டி’ (மண்வெட்டி) கொண்டு ஆழம்படத் தோண்டி வேரோடு பிடுங்கியும், ‘மத்தங்காய்ப்பில்’ என்றால் மாட்டுக்குத் தீவனமாக அரியரியாக வரப்பின்மீது எடுத்துவைத்துவிட்டும், ‘கோரை’ என்றால் கிழங்கு வரை அகழ்ந்து எடுத்து ஆட்டுக்குத் தீவனமாக அரி வைத்தும், ‘பசிறி, புளிச்சான் போன்ற களைகள் இழைக்கணுவிலிருந்தும், தழைகளிலிருந்தும், மீண்டும் துளிர்ப்பவை என்பதால், அவற்றின் பூவும், இலையும் மண்ணில் விழாமல் மேலால செதுக்கி, காய்ந்து சருகாக்க பாறைமேல் வீசிவிட்டும், நல்ல பசுந்தியான தொய்யல், சிறு மற்றும் பண்ணைக்கீரைகளின் தலைகொய்து, அடுத்தநாள் இரக்கிரிக் கடைசலுக்காக மடியில் சேகரித்துக்கொண்டும் மகராசியின் களையெடுப்புத் தொடரும். அந்த வேகத்தில் பன்முக வேலைக்கு ஈடுகொடுக்க இயலாமல் நானும் என் இளவலும் திணறும்போது எங்களுக்காகவும் ஒரு வெட்டு வெட்டிக் கொடுத்துக்கொண்டே முன் போவாள் பாருங்கள். அங்கே என்னைப்பெற்றவளின் பெற்றவள் கண்டிருந்தால் முதுமையிலும் அவளுக்கு முலைப்பால் சுரந்திருக்கும்.

அந்தப் பாம்பாட்டுக்காரியிடம் பட்டாசு வாங்கக் காசுவேண்டி, “மெல்ல அவள் நல்லடி பொருந்தி ஈயென இரப்போம்”. அம்ம்ம்மா….. என்று களை நிரையில் குனிந்தபடியே மெல்ல ஈன சுரத்தில் விளித்துத் தொடங்குவேன் நான். எல்லாமுணர்ந்தவள் ஏஞ்சாமி… என்பாள். மற்றதைத் தம்பி தொடர்வான். அந்த “பால்காரச் செட்டியாரண்ணம்பையன் லோகானும், அவந்தம்பி குட்டியும்”, ஆண்டியூர் “வேலாத்தம்மா” கடையில முப்பது ரூவாயிக்கி பட்டாசு வாங்கி வெடிக்கிறானுகளாமா… பாம்பு வெடி, சீனி வெடி, லச்சுமி வெடி அப்பறம் கம்பி மத்தாப்பு, டுப்பாக்கி, கொள்ளுப்பட்டாசு எல்லாம் நேத்தே காமிச்சானுக. எங்குளுக்கு மட்டும் ஒண்ணுமே இல்லீம்மா… நோம்பியே முடிஞ்சு போச்சும்மா.. அம்ம்மா..”ரெண்ருவா” குடும்மா…சீனி வெடி மட்டும் வாங்கிட்டு வந்து இங்க புளீய மரத்தடிலீயே நானும் அண்ணனும் ஒண்ணொண்ணா வெடிக்கிறோம்…. என்பான்.

அதற்கு அம்மா, “அந்தத் தேங்காக்காரக் கட்டீத்தின்னி இன்னாமு காசு குடுக்கல…”காசு குடுப்பனா தகிடி” ன்னு இழுத்தடிக்கிறான்… இன்னக்கி அவன் வருட்டும்… கழுத்துல சீலயப் போட்டுக் கேட்டுப்போடறன்… அவங்குடுத்தா அஞ்சுருவா குடுக்கறேன்…’வெய்யத்தாழப் போயி’ வெடி வாங்கிட்டு வந்து பேருக்கு ஒருவெடிய நம்ம கருப்பராங்கோயல் கிட்ட வெடிச்சுட்டு, அப்பறமா புளிய மரத்துக்கிட்ட நின்னு பாங்கா வெடீங்க” என்பாள்.

அந்தத் தேங்காக்காரக் கட்டீத்தின்னி பொழுது உளுகுற நேரத்துல ஏறிக்கிட்டு வருவான். முந்தாநேத்து கொண்டுபோன தேங்காய் லோட, இன்னக்கி வெடியாலதான் மருதையில (தேங்காய் மார்க்கெட்) எறக்கிட்டு இப்பத்தானக்கா வாரன் என்பான். போட்ட நூத்தெழுவது காய்க்கு, லாபக்காய், கைக்காய், கூகை, கழிசல், உரிகூலி எல்லாம் போனதுபோக காய்க்கு ஒண்ணு பத்துப் போட்டு, சிகரெட் அட்டையில் கணக்கெழுதிக்காட்டி, எறநூறு ரூவாய் கொடுப்பான். ஒரு எழவும் புரியாது எனக்கு. அவன் கொடுத்த பணத்தை வாங்கி ஐந்துமுறை ஆசையாய் எண்ணுவாள். அடுத்தடுத்த நிமிடங்களில் ஆயில் இஞ்சின் டீசலுக்கு, அரிசிக்காரனுக்கு, ஒரக்கடைக்கு, மலிங்கிக்கட அண்ணாச்சிக்கு, கொத்துக்காரனுக்கு, தென்னங்குலை கட்ட வந்த வீரமாதாரிக்கு, குலைகட்ட சூட்டிக்கயிறு கொடுத்த பருத்தியூர் ஆரானுக்கு கொடுக்கவேண்டியதை மனத்தால் கணக்குப் போட்டபின்பு பன்னெண்ருவா மிச்சம் என்பாள்.

அப்போது சொல்லிற் சிறந்த சொல் மிச்சம் என்பதாய் எனக்கும் என் தம்பிக்கும் தோன்றும். என்னைப் பார்ப்பாள். நான் பொங்கிவரும் ஆற்றாமையை அடக்கிக்கொண்டு, வேறெதுவும் கேட்காமலேயே போர்வையொன்றை எடுத்துக்கொண்டு கண்களை கண்ணீரால் நிரப்பியபடி சீராடிக்கொண்டு சாளைக்குள் தூங்கப்போவேன். என் தம்பி கோபத்தில் அழுவான். அழுதபடியே பொழுதோடத்து சோறுங்காமலே தூங்கிப்போவோம். சிறிதுநேரத்தில் பாலூற்றப்போன என் அப்பா வந்து தலைமாட்டில் உட்கார்ந்தபடி, ராந்தல் வெளிச்சத்தில் மூட்டையொன்றைப் பிரித்துக்கொண்டே… டேய்… பெரிய டாம்பி..டேய் சின்ன டாம்பி…(மகிழ்ச்சியாய் இப்படித்தான் அழைப்பார்)..எந்திரிங்க… என்னன்னு பாருங்க என்றார். கண்முன்னால் ரெண்டு பெட்டிப் பட்டாசுகள். இருவரும் எழுந்து அப்படியே அள்ளித் தின்றுவிடுவதுபோல் ஆசையாய் எடுத்துப் பொறுமையாய் ஒவ்வொன்றாய் வெடித்துத் தீர்ப்போம். பொதுவாக விடிய விடிய தீபாவளி விடிந்த பின் அமாவாசையாக இருக்கும். ஆனால் எங்களுக்கு மட்டும் விடிய விடிய தீபாவளி விடிந்த பின் பிரதமையாக இருந்தது. ஏழ்மையிலும் நோன்பு நோற்க விரும்பிய பட்டாசுகளை விலையின்றிக் கொடுத்த வேலாத்தம்மாக்கள் இன்று இல்லை.

அந்த நாளில் தின்ற புட்டும், சட்டினியும் இன்றும் மனத்தினில் சுவைக்கிறது. இம்முறையும் கேட்டேன் அலைபேசியில் அம்மா சீலை எடுத்து அனுப்பட்டுமா? என்று… அய்யோ…உனக்கு ஒண்ணுந்தெரியாது. ஏமாத்திப்போடுவானுக… ஆனால் முதன்முறையாய் இந்த நோம்பிக்கி வேண்டாம்…வர்ற “தை” நோம்பிக்கி ரெண்டுசீலையா சேத்தி எடுத்துக்கொடு என்றாள். எனக்கு திருவாக்கு போல் ஒலித்தது. ஆம் திரு என்றால் லச்சுமி தானே…சரீங்கம்மா என்றேன். மனதுக்குள் மகிழ்வாய் இருந்தது. சிரித்துக் கொண்டேன். வருகின்ற தைநோம்பியின் போது கேட்காமல் வாங்கிக் கொடுத்துவிடவேண்டும். மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;

வேண்டி, நீ யாது அருள் செய்தாய்?, யானும், அதுவே வேண்டின் அல்லால்,

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?”

செ. அன்புச்செல்வன்
04/11/2018