என்ன இருந்தாலும் அவன் ஒரு சிங்கிள் அடிச்சிருக்கலாம்
‘The Cricket Monthly’ இதழுக்காக Hampshire-ன் முன்னாள் கேப்டன் Mark Nicholas, Viv Richards-ன் ஒரு மரண ஆட்டத்தைப் பத்தி எழுதின கட்டுரையை என்னால முடிஞ்ச வரைக்கும் தமிழ்ப் படுத்தியிருக்கேன்…

Glamorgan-க்காக Viv Richards ஆடிய மிகச் சிறந்த ஒரு இன்னிங்ஸை முதல் ஆளா நான் அன்னைக்கு பக்கத்துல இருந்து பாத்தேன். அப்போல்லாம் Glamorgan ஒன்னும் பேர் சொல்லக் கூடிய அளவுக்கு பெரிய அணியெல்லாம் கிடையாது. அவங்களுக்கு கடைசி நாள் அன்னிக்கு அந்த Northlands Road க்ரவுண்ட்ல 364 ரன் டார்கெட் கொடுத்தோம். முதல் ரெண்டு செஷன் முடிஞ்சு டீ ப்ரேக் அப்போ 140-க்கு 5 விக்கெட் போயிருச்சு, Richards மட்டும் தான் இருக்காரு.
டீ-க்கு அப்புறம் உள்ள வந்த Richards-ஐ பாத்து Glamorgan கேப்டன் Alan Butcher ட்ரெஸ்ஸிங் ரூம் பால்கனியில் இருந்து கையை காட்டி ஏதோ சொல்றாரு, “எப்டியாச்சும் இந்த ஒரு செஷன் மட்டும் நின்னு மேட்சை டிரா பண்ணி காப்பாத்தி விட்ரு”ன்னு தான் அதோட அர்த்தமா இருக்கணும். எங்களுக்கு Richards அவுட் ஆவாரோ இல்லையோ, மீதி இருக்க 5 பேட்ஸ்மென் எப்படியும் தாக்குப் பிடிக்க மாட்டாங்கன்னு நிச்சயமா தெரியும்.
மூணாவது செஷனோட முதல் பந்து Tim Tremlett வீச, அதை Richards ரொம்ப சாதாரணமா Northlands Road-க்கு அடிச்சு ஓட விட்டாரு. நாங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டோம், எல்லார் மனசுலயும், “த்தா… ஆரம்பிச்சுட்டான்டா…”ன்ற எண்ணம் ஒரே மாதிரி ஓட, கொஞ்ச நேரத்துல அது நிரூபணமாக ஆரம்பிச்சது. அவங்க ஜெயிக்க மேற்கொண்டு 200 ரன் தேவைப்பட்ட நிலையில அந்த மனுசன் எங்களை கொலையா கொல்ல, ஒரு கட்டத்திற்கு அப்புறமா அவரோட விளையாட்டை ரசிக்க ஆரம்பிச்சுட்டோம்.

மேட்ச்சோட கடைசி ஓவர், Richards 150*-ல நிக்குறாரு, அவங்க ஜெயிக்கிறதுக்கு 14 ரன் தேவை. அந்த கடைசி ஓவரை உலகத்தின் மிகச் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்னு பலராலும் வர்ணிக்கப்பட்ட ஒத்துக்கிட்ட Malcolm Marshall வீசத் தயாரா இருக்கார். நாங்க எல்லாம் அப்டியே உறைஞ்சு போய் வேற உலகத்துல இருக்க மாதிரி இருந்தோம்.

Glamorgan-க்கு அப்போ 7 விக்கெட் விழுந்த நிலையில Richards கூட ஆடுறதுக்கு Colin Metson உள்ளே இருந்தாரு. நான் Marshall-ட்ட போய் சொன்னேன், “எல்லா ஃபீல்டர்ஸையும் பவுண்டரி லைன்ல நிறுத்திடுவோம், Richards-க்கு முதல் பந்துல ஒரே ஒரு சிங்கிள் மட்டும் கொடுத்திரு, அதுக்கப்புறம் Metson ஆட மாட்டான், நாம எப்டியாச்சும் டிரா பண்ணிரலாம், யாருக்குத் தெரியும், ஒருவேளை ஜெயிக்க கூட வாய்ப்பிருக்கு…”
Marshall ஓடி வந்து முதல் பந்தை நல்ல லெந்த்ல ஆஃப் ஸ்டம்ப்ல போட, Richards அதை கவர் பவுண்ட்ரிக்கு சிதற விட்டாரு. எங்களோட பெஸ்ட் ஃபீல்டர்ஸ் Paul Terry, Robin Smith ரெண்டு பேர்ல ஒருத்தன எக்ஸ்டரா கவர்லயும் இன்னொருத்தன டீப் கவர்லயும் நிறுத்தி வெச்சிருந்தோம். ரெண்டு பேருமே பந்து பறந்த வேகத்துல, நின்ன இடத்தை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராம ஒருத்தரை ஒருத்தர் “என்னாச்சு…?!”ன்ற மாதிரி பாக்குறாங்க…
நான் மனசுக்குள்ள இன்னும் வேகமா கணக்கு போட்டு லாங் ஆஃப்-ல இருந்து Marshall-ஐப் பாத்து கதறினேன், “Macko… எப்டியாவது Richards-க்கு ஒரு சிங்கிள கொடுத்திரு…”ன்னு. அடுத்த பந்து, இந்த முறை Marshall அதை ஒரு க்விக் பவுன்சராக போட, முதல்ல மேல ஏறி வந்த Richards, உடனே ஒரு ஸ்டெப் பின்னாடி போய் அதை க்ரவுண்டுக்கு வெளியே இருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டோட செவுரு மேலயே அடிச்சாரு. அதுக்கப்புறம் வாழ்க்கையில அந்த பந்த நாங்க யாரும் மறுபடியும் பாக்கவே இல்ல.
நான் இப்போ Marshall கிட்ட மறுபடியும் ஓடிப் போய், “த்தா… ஒரு யார்க்கர் போட்டு ஒரே ஒரு சிங்கிள மட்டும் அவனுக்கு குட்றா, அடுத்த மூணு பந்துல Metson-ஐ ஈஸியா சமாளிச்சிரலாம்”ன்னு அழாத குறையா கெஞ்சுனேன். ஆக, உலகத்தின் மிகச் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான Marshall அடுத்த பந்தை கிட்டத்தட்ட ஒரு யார்க்கர் போல ஃபுல் லென்த்தில் வீச, Richards மண்டி போட்டு அதை வைட் மிட் ஆனுக்கு சுத்தி விட்டாரு…
அங்கே இருந்த 13 கிரிக்கெட் பிளேயர்களும், 2 அம்பயர்களும், ஸ்டேடியதிலிருந்த இரண்டாயிரத்து சொச்ச பார்வையாளர்களும் என அத்தனை பேரும் அந்த பந்து பவுண்டரி லைனைக் கடந்து போனதை கண் இமைக்காமல் பாத்தோம். பந்து லைனைக் கடந்தப்புறம் தான் அத்தனை பேரும் சுயநினைவுக்கே வந்தோம். 11 பேர் தோற்கடிக்கப் பட, 2 பேர் சந்தோஷத்தில் குதிக்க அங்கிருந்த மொத்த கூட்டமும் அந்த அதிசயத்தை நம்ப முடியாம பாத்துட்டு இருந்தாங்க.
மீதி மூணு பந்துகள் இருக்க நிலையில மேட்சை தூக்கி சாப்பிட்டு 164*-ல இருந்த Richards, க்ளவ்ஸ்ச கழட்டிட்டு என்கிட்ட வந்து கைய குடுத்து, “நீ பண்ண அந்த டிக்ளரேஷன் தான்யா எல்லாத்துக்கும் காரணம், வா போய் சரக்க போடுவோம்…”ன்னு போயிட்டாபுடி. அன்னைக்கு நடந்தது Richards-ன் வெறித்தனமான தாண்டவம்.
ராத்திரி 10 மணிக்கு பார்ல உட்கார்ந்திருக்கும் போது Marshall சொல்றாரு, “என்ன இருந்தாலும் அவன் ஒரு சிங்கிள் அடிச்சிருக்கலாம்…”
Malarvannan K