எதற்காக புலிகளுக்கு வரிகள் தேவை?

Spread the love
எதற்காக புலிகளுக்கு வரிகள் தேவை? 
by CJ Calvin
ஒவ்வொரு புலியின் வரிகளும் தனித்துவமானது என்பது பலருக்கு தெரிந்த சேதி.
ஆனால், புலியின் வரிகள் ரோமங்களை தாண்டி அதன் தோலிலும் காணப்படும். புலிகளின் உட்பிரிவுகளை பொறுத்து வரிகளின் அடர்த்தி மாறுபடும்.
அது சரி. எதற்காக புலிகளுக்கு வரிகள் தேவை?
புலிகள் வேட்டையாடிகள். வெகுதூரம் இரையை விரட்டிச் சென்று பிடிக்க ஏற்ற உடலமைப்பு வாய்க்காத உருவத்தில் பெரிய விலங்கு. வேட்டையாடுதலில் அதன் வெற்றி இரை விலங்கை மிக அருகில் நெருங்கி அதை ஆச்சரியத்தில் வீழ்த்துவதிலேயே இருக்கிறது
இரை விலங்குகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுகளை கொண்டவை. எண்ணிக்கையில் பாதுகாப்பு என்பதால் கூட்டமாகவே வாழும். வேட்டை விலங்கை ஏதாவது ஒரு இரை விலங்கு பார்த்தாலும் அபாய ஒலி எழுப்பி கூட்டத்திற்க்கே காட்டிக் கொடுத்து விடும்.
மேலிருந்து கீழ் விழும் அடர் காடுகளின் மர நிழலை ஒத்த வரிகள், புலியின் வடிவத்தையும், பெரிய உருவத்தையும் உடைக்கின்றன. செடிகளும் புற்களும் நகரும் புலியை கண்களுக்கு முன்பே மறைந்து கொள்ள உதவுகின்றன.
சிவப்பு நீலம் பச்சை ஆகிய மூன்று நிறங்களை கண்களால் உணர்ந்து கொள்வதால் தான் நமக்கு எல்லா வண்ணங்களும் தெரிகின்றன. இரை விலங்குகளால் சிவப்பு வண்ணத்தை உணர முடியாது. அவைகளுக்கு நீலம் பச்சை மட்டுமே விளங்கும். இது போன்ற பார்வை என்பதை நிறக்குருடு என்று கூறுவார்கள். இதன் காரணமாக ஆரஞ்சு வண்ண உடலமைப்பில் உள்ள புலியை இரை விலங்குகளால் அவ்வளவு எளிதில் கண்டு கொள்ள முடியாது.
இந்த தகவமைப்பை ஆங்கிலத்தில் “Disruptive Coloration” என்று உயிரியலாளர்கள் கூறுவார்கள். இதுவே புலிகளின் உருமறைப்பு திறன் (camouflage) பின்னால் இருக்கும் ஆச்சரியம்.
காற்றின் எதிர்திசையில் மெல்ல மெல்ல நெருங்கி இரை விலங்கை தனது வலிமையை பயன்படுத்தி சாய்க்கும். அதைப் பற்றி இன்னொரு பதிவில்.
வேட்டையாடுதல் தவிர்த்து புலி தன்னை மறைத்துக்கொள்ள காரணங்கள் தேவை இல்லை. மனிதர்களை தவிர்த்து.
கீழ் உள்ள படத்தில் புலி தெளிவாக தெரிய காரணம் நமது புகைப்பட கருவி. வெறும் கண்களால் பார்க்கும் போது நிறங்களை சிறப்பாக பார்க்க கூடிய திறன் இருந்தும் புதரில் நிற்கும் இந்த புலியை நம்மால் தெளிவாக பார்க்க முடியாது.
படித்தமைக்கு நன்றி

Leave a Reply