எதனால் அலுவல் சலிக்கிறது

Spread the love

வேலையை விடவேண்டும். ஆனால் ஏன் விடவேண்டுமென்று தடுமாற்றம். புதிய நிறுவனத்தில் சேரவேண்டும். அது சரிவருமா என்ற சந்தேகம்.

கல்லூரி இறுதியாண்டில் வளாக நேர்காணல் நடக்கிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் சிலபேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனையோருக்கு ஏமாற்றம். “மைக்ரோசாப்ட்” கிடைத்துவிட்டதென்று சில இளம்பெண்கள் ஏனையோரை ஏளனப் படுத்துகிறார்கள். “கனவு நிறுவனத்தில்” இடம் கிடைக்காத மாணவிகள் வெம்பி கிடைத்தவாய்ப்பையும் நழுவவிட்டு பெற்றோர்களுக்கு பாரமாய் நிற்கிறார்கள்.

அன்றியும் பிடித்த நிறுவனத்தில் சேர்ந்த சிலமாதத்திலேயே பலர் ஓடி விடுவதை காணலாம். பொருந்துவதில்லை. செயற்கை நீரூற்றுக்கள், ஏக்கர் கணக்கில் புல்வெளிகள், வானளாவிய கண்ணாடி மாளிகைகள், வரம்பற்ற காபி இவர்களுக்கு கசக்கிறது. பெற்றோர்களுக்கு காணொளியில் காட்டி பெருமையுடன் வலம் வந்த அலுவலக வளாகம், அடுத்த மாதமே சிறைக்கூடமாக கசக்கிறது.

இதன் காரணம் என்ன ?

பில்லியன் கோடி பன்னாட்டு கம்பெனிகள், சுவற்றில் சிரிக்கும் பெரு முதலாளிகள், அவர் படைத்த நிறுவனங்கள், நவீன வளாகங்கள், பூங்காக்கள், மைதானங்கள், உடற்பயிற்சி மையங்கள், பளிங்கு கோயில்கள், நவீன வசதிகள், மைய குளிரூட்டிகள் – அனுபவித்து பெருமை கொள்ளாமல் ஏன் பலருக்கு வாழ்வு கசக்கின்றன ?

ஏனெனில் அவை உங்களுக்கு சொந்தமில்லை. அதன் அருகில் கூட போகமுடியாது. நீரூற்றின் முன் “செல்பி” எடுத்தால் செல்போனை பிடுங்கிவிடுவார்கள். அழகுப்பனையின் தூக்கணாங்குருவியை நின்று அண்ணாந்து பார்த்தால், வண்டியின் காற்று பிடுங்கப்படும். புல்வெளியில் நடந்தால் காவலர் விசிலடித்து கூப்பிடுவார். அடையாள அட்டை தொலைந்தால், தெருநாயைப்போல அலையவிடுவார்கள். உங்கள் கழுத்தில் தொங்கும் காந்தப்பட்டி ஒரே ஒரு கட்டிடத்தின், ஒரே ஒரு தளத்தின், ஒரே ஒரு கதவை மட்டுமே திறக்கும்.

உங்கள் ஒவ்வொரு அசைவையும் நிலவறையிலிருந்து காணொளி கருவியால் யாரோ பார்த்துக்கொண்டிருப்பார்கள். நிறுவனத்தில் 20 ஆண்டுகள் வேலைசெய்தாலும் நீங்கள் பார்க்காத அறைகள் எத்தனையோ இருக்கும்.. இவை எதுவுமே உங்களுக்கு சொந்தமில்லை. ஒருநாளும் நீங்கள் முதலாளியுடன் பேசமுடியாது. எத்தனையோபேர் வினோதமாக நடந்துகொள்வார்கள். உங்களிடம் எதுவும் விளக்கப்படாது.

ஆகவே என்ன செய்தால் நம் யுவர்களும் யுவதிகளும், பணியாளர்களும் விரும்பி வேலை செய்வார்கள் ? எதனால் அலுவல் சலிக்கிறது ?

மனிதர்களின் ஆன்மா எதற்காக ஏங்குகிறது என்றெல்லாம் பல ஆண்டுகள் யோசிப்பதுண்டு. யோசனைகளை சல்லடைபோட்டு கழித்துக்கட்டி, முத்தாக சிலவற்றை திரட்டி அதனை பரிசோதனைக்கு உட்படுத்தியதுண்டு. பலபேரிடம் விவாதித்து இதுதான் காரணம் என்று வடிகட்டி பார்த்ததில் ஒன்று புரிந்தது.

கணிதத்தில் தேற்றம் என்று உண்டு. அதாவது புடம்போட்ட உண்மைகள். கேள்விக்கு அப்பாற்பட்டது. மறுதலிக்க இயலாதது. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாதம் செய்து வென்ற உண்மைகள்.

இப்படியாக அனுபவித்து கண்டுபிடித்த மொத்தம் 5 எண்ணிக்கையிலான அடிப்படை கூறுகளை இங்கே தருகிறேன். இவை இருந்தால் வேலை செய்யலாம். இவை குறைந்தால் ஓடிவிடவேண்டும். இந்த காரணிகள் அல்பமாக தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை.

அவையாவன.

1. சுத்தமான கழிப்பறை
2. தரமான கட்டுகடங்கும் விலையில் உணவகம்
3. முண்டியடிக்காமல் நிறுத்த தேவையான வாகன நிறுத்துமிடம்..
4. அனாவசிய வலயத்தள கட்டுப்பாடுகள் இல்லாத அறிவை வளர்க்கும் கணினி, மேசை நாற்காலி.
5. குணமான அருகாமை மேலதிகாரி.

இவை இருந்தால் போதும். அது தெருவோர மார்வாடி கடையானாலும், பில்கேட்ஸ் கம்பெனியானாலும் வேலை செய்யலாம். இவை மட்டும்தான் தினம் தினம் வேலை செய்ய தேவை. இதைத்தவிர வேறு எதையும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது. பெரிய கம்பெனியில் நீங்கள் ஒரு செலவு. கடன்பாடு.

ஆகவே நம்முடைய இளைஞர்கள் தடுமாற்றமில்லாமல் வேலையை தேர்ந்தெடுக்க உதவுங்கள். உங்கள் வறட்டு கௌரவத்தை புகுத்தாதீர்கள்.

(சம்பளத்தை நிர்ணயிப்பது ஒருமுறைதான். தினம் நினைக்கப்போவதில்லை.)

Alwar narayanan from fb

Leave a Reply